10-ஆம் ஆண்டில் கீழடி: தொன்மை இடத்தைக் கண்டறிந்த உண்மைக் கதாநாயகன்!

கீழடி அகழாய்வு குறித்து வியக்க வைக்கும் பல்வேறு தகவல்கள் இந்த சிறப்புத் தொகுப்பில் இடம் பெற்று உள்ளன.
10-ஆம் ஆண்டில் கீழடி: தொன்மை இடத்தைக் கண்டறிந்த உண்மைக் கதாநாயகன்!

கீழடி அகழாய்வு தொடங்கி, தற்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பெருமைக்குரிய இந்த தொல்லியல் களத்தை முதன் முதலில் கண்டறிந்து உலகுக்குத் தெரிவித்த ஆசிரியர் வை. பாலசுப்பிரமணியம், 50 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனுபவங்களை குறித்து பேட்டியளித்துள்ளார்.

வியக்க வைக்கும் பல்வேறு தகவல்கள் இந்த சிறப்புத் தொகுப்பில் இடம் பெற்று உள்ளன.

உலகமே வியக்கும் மிகப் பெரும் தொன்மைச் சிறப்பிற்குரிய ஓரிடமாக கீழடி மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள இந்த தொல்லியல் மேடு, இதுவரை 9 கட்ட அகழாய்வுகளை நிறைவு செய்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் இந்த இடம் அடையாளம் காணப்பட்டு, கடந்த 2015-ஆம் ஆண்டு, தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவால் தொடங்கப்பட்டது. முதல் இரண்டு அகழாய்வுகளை அமர்நாத்தும், 3-ஆம் கட்ட அகழாய்வினை ஸ்ரீராமனும் மேற்கொண்டனர். அதற்குப் பிறகு 4-ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி தற்போது வரை தமிழக தொல்லியல் துறை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது.

பெருமைக்குரிய கீழடி அகழாய்வுக் களத்தை முதன் முதலில் கண்டறிந்ததுடன், அதனை உலகிற்கு அறியத் தருவதற்காக பல்வேறு முயற்சிகளை 50 ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கொண்டவருமான ஆசிரியர் வை. பாலசுப்பிரமணியத்தின் கையால்தான் கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் 11-ஆம் தேதி முதன் முதலாக அங்கு குழி வெட்டப்பட்டு அகழாய்வுப் பணிகள் துவங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

'பாலு சார்' என்று தொல்லியல் வட்டாரத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வை. பாலசுப்பிரமணியம், கடந்த 50 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்துள்ள அந்தக் காலகட்ட நினைவுகளை இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணாக்கருக்கு வரலாற்று அறிவு

"தலைமையாசிரியராகப் பணி நிறைவு பெற்றேன். கடந்த 1973-ஆம் ஆண்டு கீழடியிலுள்ள அரசுப் பள்ளியில் நானும் எனது மனைவி சுபத்ராவும் முறையே வரலாறு மற்றும் அறிவியல் ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தோம். அந்தக் காலகட்டத்தில் நான் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டு வரலாறுகளை மட்டுமன்றி, நம்மைச் சுற்றியுள்ள ஊர்களின் வரலாறுகளையும் அறிந்து கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தி, மாணவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் ஏதேனும் சிதிலமடைந்த கோவில்கள், கட்டடங்கள் இருந்தாலோ அல்லது கற்களில் எழுத்துக்கள் இருந்தாலோ, பானை ஓடுகள், ஓலைச்சுவடிகள், பழைய பாடல்கள் தெரியவந்தாலோ என்னிடத்தில் தெரிவித்தால் உங்களுக்கு மாதத் தேர்வில் 10 மதிப்பெண்கள் தருவேன் என்று சொல்வது வழக்கம். மதிப்பெண்களுக்காக பல மாணவர்கள் அம்முயற்சியில் இறங்கி பழமையான பொருள்களைக் கொண்டு வந்து என்னிடம் காண்பிப்பார்கள். பல நேரங்களில் அவை  பொய்த்துப்போவதும் உண்டு.

1974-லேயே கீழடியில் மண்டையோடு

அந்தச் சமயம் நான் கீழடிக்கு மாற்றலாகி வந்தபோது, 1974-இல் ஒரு மாணவர், அவரது வீட்டில் கிணறு தோண்டியபோது, அங்கே பெரிய பெரிய செங்கற்கள் உள்ளன என்று கூறினார். உடனே நான் மாணவர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்தைச் சென்று பார்த்தேன். அங்கிருந்து ஒரு செங்கல், சிறு குவளை, மனிதத் தலையோடு கழுத்து வரையுள்ள ஒரு சுதை வடிவம், நாணயம், கருப்பு மணிகள் அதனோடு ஒரு மண்டை ஓடு இவற்றையெல்லாம் எடுத்து வந்தேன். அதனை எடுத்துக் கொண்டு வந்து எனது வீட்டிலே வைத்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் பெண்மணி, பழைய சுடுகாட்டிலிருந்து எடுத்து வந்ததையெல்லாம் வீட்டிற்குள் வைக்கக்கூடாது என்று கூறிவிட்டார். மறுநாள் தலைமையாசிரியரின் அனுமதியோடு பள்ளிக்குள் வைத்துப் பாதுகாத்தோம். 

ராமநாதபுரம் ஆட்சியர் கண்டு கொள்ளவில்லை

அப்போது ராமநாதபுரம் ஆட்சியருக்கு இந்தத் தகவலைக் கொண்டு போய் சேர்த்தேன். அவரிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இந்தச் சூழலில்தான் கடந்த 1976-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல்துறையின் சார்பாக மதுரை மகாலில், பள்ளி ஆசிரியர்களுக்கான 6 வார பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள எனக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பயிற்சிக்கு சென்ற முதல் நாளே தொல்லியல்துறை இயக்குநராக இருந்த நாகசாமியிடம், கீழடியில் நான் கண்டெடுத்த பொருள்கள் பற்றிக் குறிப்பிட்டேன். உடனடியாக அப்போது கல்வெட்டு ஆய்வாளராக இருந்த வேதாசலத்தை உடன் அனுப்பி அப்பொருள்களைப் பார்வையிட்டு வருமாறு அனுப்பினார். பொருள்களை எடுத்துக்கொண்டு மகாலுக்கு வந்து நாகசாமியிடம் காண்பித்தோம். கையோடு கொண்டுச் சென்ற செங்கல்லைப் பார்த்தவுடனே நாகசாமி, இது சங்கக் காலத்தைச் சேர்ந்தது என்றார். உடடினயாக இந்த விவரம் தமிழகம் முழுவதும் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

10-ஆம் ஆண்டில் கீழடி: தொன்மை இடத்தைக் கண்டறிந்த உண்மைக் கதாநாயகன்!
அரை நூற்றாண்டுக்கு முன்னரே விதவைகள் மறுமண உதவித் திட்டம்! மறுமலர்ச்சியின் முன்னத்தி ஏர் தமிழ்நாடு!

1978-இல் கல்வெட்டுக் கண்காட்சி

அச்சமயம் எங்களோடு பயிற்சிப் பட்டறையில் தினமணியின் ஆசிரியர் ஏஎன்எஸ் சிவராமனும் கலந்துக் கொண்டார். உடனடியாக அன்றைக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்து விஷயத்தைச் சொன்னவுடன், மறுநாள் அனைத்து நாளேடுகளிலும் 'மதுரை அருகே கொந்தகையில் சங்க கால தொல்லியல் பொருள்கள் கண்டெடுப்பு' என தலைப்புச் செய்தியாக வந்தது. அதன் பிறகு அப்பொருள்கள் அனைத்தும் மகாலிலேயே எண்கள் இடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அதன் பிறகு 1978-இல் கீழடி பள்ளிக்கூட வளாகத்திலேயே முப்பெரும் விழா என்ற பெயரில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அக்கண்காட்சியின் வரலாற்றுப் பிரிவில் அப்பொருள்களெல்லாம் காட்சிக்கு வைக்கப்பட்டன. அச்சமயம் அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் கோயில் கல்வெட்டு, கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளையும் காட்சிப்படுத்தினோம். திருப்புவனம், சிலைமான் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அப்போது அந்த விழாவைத் துவக்கி வைத்தவர் நாகசாமி. 

200 கிராமங்களில் ஆய்வு

அதன் பிறகு கடந்த 1979-ஆம் ஆண்டு சென்னையில் அகில இந்திய வரலாற்றுக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கீழடியில் எங்களால் கண்டெடுக்கப்பட்ட சுதை சிலை குறித்து கட்டுரையாக ஒரு பெண்மணி வாசித்தார். நான் அந்தக் கருத்தரங்கில் கிராமப் பஞ்சாயத்தும் அதன் செயல்பாடும் என்பது குறித்து கட்டுரை வாசித்தேன். 1980-ஆம் ஆண்டு தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக நாகசாமி, கீழடியில் சிறு ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அதில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. ஆகையால் நாகசாமி அதனைக் கைவிட்டார். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட தொல்லியல் சார்ந்து எந்தவிதமான முன்னேற்றமும் கீழடியில் நிகழவில்லை. இதற்கிடையே எனக்கு தொல்லியல் துறையோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு கருத்தரங்குகளில் நானும், வேதசாலமும் அப்போது பதிவாளராக இருந்த சந்திரமூர்த்தியும் அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் 200-க்கும் அதிகமான கிராமங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டோம். இக்கிராமங்கள் அனைத்தும் வரலாற்றை அறியாத தொலைதூர கிராமங்கள். ஆகையால் பேருந்து, மிதிவண்டி மட்டுமன்றி பல நேரங்களில் நடந்தும்கூட சென்றிருக்கிறோம். மதுரையில் புத்த மதமே இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அச்சமயத்தில்தான் 1981-ஆம் ஆண்டில் திருப்புவனம் கால்வாயில் பெரிய புத்தர் சிலையைக் கண்டெடுத்து தொல்லியல்துறையில் ஒப்படைத்தோம். அது இன்றைக்கும் மகாலில் உள்ளது. சமணத்துடன் புத்தமும் மதுரையில் இருந்தது என்பதற்கான சான்றாக எங்களுடைய கண்டுபிடிப்பு அமைந்தது.

அமர்நாத் ராமகிருஷ்ணா வந்தார்

அதற்குப் பிறகுதான் கடந்த 2013-14-ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை வைகைகரையோரம் ஆய்வினை மேற்கொள்ள தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் குழு ஒன்றை அனுப்பியது. அந்தக் குழுவில் தொல்லியல் ஆய்வாளர்கள் ராஜேஷ், வீரராகவன் ஆகியோருடன் வழிகாட்டியாக நண்பர் முனைவர் வேதாசலமும் உடன் வந்தார். வைகையாற்றின் துவக்கத்திலிருந்து நிறைவடைகின்ற அழகன்குளம் வரையுள்ள வரலாற்றுச் சுவடுகள் நிறைந்த ஊர்களை ஆய்வுக்காக பட்டியலிடுவது அவர்களது பணியாக இருந்தது. அப்படி அவர்கள் கீழடி குறித்து மேலும் தகவல் அறிய என்னை வந்து சந்தித்தனர். நானும் அவர்களை அழைத்துக் கொண்டு கீழடிக்குச் சென்றேன். 1974 ஆம் ஆண்டு வாக்கில் நான் கண்டறிந்த அந்தப் பகுதி புஞ்சை மேடாக இருந்தது. ஆனால் 2014-இல் அந்த இடத்தைக் காணச் சென்றபோது அவை அனைத்தும் தென்னந்தோப்பாக மாறிவிட்டன.

இந்நிலையில் நாங்கள் தொல்லியல் பொருள்களைக் கண்டறிந்த இடம் குறித்து அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் எங்களைப் பார்க்க வந்த ஒருவர் என்னவென்று விசாரித்தார். நல்வாய்ப்பாக, அந்த நபர் என்னிடம் பயின்ற மாணவர். அவரிடம் குறிப்பிட்டுச் சொன்னதும், அவர் ஒரு பகுதியைக் காட்டி அங்கு செல்லுங்கள் என்றார். அவர் சொன்னவாறு அந்த இடத்தைச் சென்று பார்த்தோம். கிணறு வெட்டுவதற்காக தோண்டப்பட்ட அந்தக் குழியில் செங்கல் கட்டுமானம் தெரிந்தது. அதற்குள் வேதாசலமும், ராஜேசும் உள்ளே இறங்கி அந்தக் கற்களை எடுத்துக் கொண்டு வந்தனர்.

அதனைப் பார்த்தவுடன் அமர்நாத், இது கி.மு.50-க்கு முந்தியது என்று அறுதியிட்டுச் சொன்னார். இதுபோன்ற செங்கல் வடிவம் கி.மு.50க்குப் பிறகு உற்பத்தி செய்யப்படவில்லை. இது சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இது சங்ககாலத்தைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். இந்த இடத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றார். பிறகு அப்பகுதி அனைத்தையும் அலசிப் பார்த்தபோது, நிறைய இடங்களில் கருப்பு-சிவப்பு பானையோடுகள் கிடைத்தன. இது ஒரு தொல்லியல் மேடு என்பதை அவர்கள் உறுதி செய்துவிட்டு, அவர்களுடைய வைகைப் பயணத்தை தொடர்ந்தார்கள். அச்சமயம் அவர்கள் கண்டறிந்த 265 இடங்களில் ஆய்வுக்காகத் தேர்வு செய்தது கீழடியைத்தான். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் அறிக்கை அளித்தவுடன், அவர்களும் ஆய்வுக்காக அனுமதி வழங்குகினர்.

10-ஆம் ஆண்டில் கீழடி: தொன்மை இடத்தைக் கண்டறிந்த உண்மைக் கதாநாயகன்!
உலக அரசியலில் கோலோச்சும் இந்தியப் பெண்கள்

முதற்கட்ட அகழாய்வு

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி மத்திய தொல்லியல்துறையின் சார்பாக கீழடியில் முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. இந்த ஆய்வுக்காக நிலம் கொடுத்தவர்கள் எல்லாம் நல் வாய்ப்பாக எனது மாணவர்களாகவும் எனக்குத் தெரிந்தவர்களாகவும் இருந்தனர். ஆகையால் நிலத்தைப் பெறுவது எளிதாக இருந்தது. இந்த ஆய்வில் அமர்நாத்துடன் ராஜேஷ், வீரராகவன் ஆகியோரும், அவர்களுக்கு உறுதுணையாக முனைவர் வேதாசலமும் இருந்து துவங்கிய இந்த முதல் ஆய்விலேயே பல்வேறு தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இது அவர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, தொடர்ந்து 2-ஆம் கட்ட அகழாய்வுக்கும் மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்தது. முதற்கட்ட அகழாய்வின்போது இப்படியொரு ஆய்வு நடக்கிறது என்பதே யாருக்கும் தெரியாது. 2-ஆம் கட்ட அகழாய்வில்தான் ஒரு குழியில் நீண்ட நெடிய செங்கல் கட்டட அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டது. அப்போதுதான் கீழடி அகழாய்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

அச்சமயம் மதுரையில் ஜெகத் கஸ்பர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் கீழடி அகழாய்வு குறித்து பேசும்போது எங்களையும் அறிமுகப்படுத்திப் பேசினார். அங்கு வந்த பத்திரிகையாளர்கள் இந்தத் தகவலை பெரிய அளவில் கொண்டு சென்றனர். கீழடி உலகம் பேசுகின்ற ஒரு பொருளாக மாறிப்போனது. இன்றைக்கு 9 ஆம் கட்ட அகழாய்வு முடிந்து 10ஆவது கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. 

எனது ஆசிரியர்கள் அளித்த ஊக்கம்

நான் பயின்ற பள்ளியும், கல்லூரியும் மாணவர்களுக்கு சுதந்திரத்தை மிக அதிகமாக அளித்த நிர்வாகங்கள் ஆகும். என்னுடைய வரலாற்றுப் பேராசிரியர் வெங்கடேசன், மிகச் சிறந்த கல்வியாளர். அவர் ஒவ்வொரு காலாண்டிலும் திட்டம் ஒன்றை வகுக்கச் சொல்லி, அதனை 20 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி வாசிக்க வேண்டும் என வலியுறுத்துவார். அதற்காக நாங்கள் தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய ஆசிரியர்கள் ஊட்டிய அந்தப் பயிற்சிதான் பின்னாளில், எனது மாணவர்களுக்கு நான் அளித்த ஊக்கம். 

இயற்கையின் நியதி

கடந்த 1974-இல் முதன் முதலாக கீழடியைக் கண்டபோது சாதாரண விசயமாகத்தான் தெரிந்தது. 76-ஆம் ஆண்டில் அது சங்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் எச்சம் என்பதை உணர முடிந்தது. அதற்குப் பிறகும்கூட இந்த இடம் இத்தனை பிரம்மாண்டமாகப் பேசப்படும் என்ற உணர்வு ஏற்படவில்லை. 2014-இல் அமர்நாத் குழுவினர் இங்கு வந்து பார்க்கின்றபோதுதான் கீழடியின் தொன்மை குறித்து எனக்கு முழுப் புரிதல் ஏற்பட்டது. ஆனால் இயற்கையின் நியதியை வியக்கிறேன். நான் இந்த ஊரிலேயே தொடர்ந்து இருக்கிறேன். வேதாசலத்துக்கும் எனக்குமான தொடர்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. விட்டுப்போகவே இல்லை. அதேசமயம் நினைகூர்ந்து என்னை வந்து பார்க்கிறார். அவர் இல்லாமல் இருந்தாலோ, நான் இல்லாமல் இருந்தாலோ இந்த ஆய்வுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்று சொன்னால், நெடுஞ்சாலையிலிருந்து மூன்று கி.மீ. தூரம் தள்ளியிருக்கிறது. இந்த இடத்தை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது. ஆக, இதனை இயற்கையின் நியதி என்றுதான் நான் நம்புகிறேன். 

10-ஆம் ஆண்டில் கீழடி: தொன்மை இடத்தைக் கண்டறிந்த உண்மைக் கதாநாயகன்!
மலேசிய விமானம் மாயமாகி 10 ஆண்டுகள்.. பதில் கிடைக்காத துயரங்கள்

கீழடியின் தெருக்கள் எங்கே?

என்னைப் பொறுத்தவரை நான் தொல்லியல் வல்லுநர் அல்ல. இருந்தபோதிலும்கூட ஒரு வரலாற்று ஆசிரியன் என்ற முறையில், இந்தியா முழுவதும் பல்வேறு தொல்லியல் இடங்களைப் பார்வையிட்டவன் என்ற முறையில், கீழடி ஆய்வு எப்படி நடைபெற வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியும். இந்தத் தொன்ம மேடு ஏறத்தாழ 110 ஏக்கர், அதாவது 4.5 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. மேற்கொள்ளப்படும் அகழாய்வுக் குழிகள் எல்லாம் முறையாக வரிசையாக தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக இடம் விட்டு இடம் விட்டு செய்யப்படுவதால் ஒரு முழுமையான இடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுவரை பத்து ஆய்வுகள் மேற்கொண்டபோதும்கூட கீழடி என்ற இந்த நகர நாகரிகத்தை, அதாவது இது தொழில் நகரமா அல்லது மக்கள் வாழ்ந்த நகரமா என தெரியவில்லை. இதற்கு ஒரு தெரு இருக்க வேண்டும். வீடு இருந்தால் அதற்கு வாசல் இருக்க வேண்டும். அவைகௌல்லாம் இன்று வரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த இடங்களை முறையாகத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால்தான் உண்மை புலப்படும். இதற்கு இடையூறாக இருப்பது, தனியார் நிலங்களே. 110 ஏக்கரும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தோப்புகளாகும். இது அவர்களுடைய வாழ்வாதாரம். இதனை எப்படி எடுப்பது? நமது அரசு எது எதற்கோ கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. தமிழனுடைய வரலாற்றை முன்னெடுத்துச் செல்கின்ற காலத்தை முன் நகர்த்துகின்ற ஒரு அகழாய்வை முறையாக நடத்துவதற்கு உதவுகின்ற வகையில் இவ்விடங்களை முற்றிலுமாக கையகப்படுத்தி, அதன் மையப்பகுதியிலிருந்து தோண்டிப் பார்க்குமானால், மொகஞ்சாதரோ-ஹரப்பா போன்ற பெரும் நகரத்தை இங்கே காண முடியும்.

அவ்வாறு செய்தால்தான் உண்மையான தொல்லியல் ஆய்வாக இருக்கும். இல்லாவிட்டால் கிடைத்த பொருட்கள்தான் திரும்பத் திரும்பக் கிடைக்கும். சிந்துசமவெளியில், மொகஞ்சாதாரோவில் தெருக்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இப்போது குஜராத் தொளவிராவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெருக்கள் இருக்கின்றன. கீழடியில் எங்கே தெரு இருக்கிறது? தெரு இல்லாமல் எப்படி ஊர் இருக்கும்? வாசல் இல்லாமல் எப்படி வீடு இருக்கும்? அதை எங்கே கண்டுபிடிப்பது? கீழடி ஆய்வுகளை முறையாக மேற்கொண்டால் நிச்சயமாக இங்கு ஒரு பெரும் நகரம் இருந்ததை கண்டறிய முடியும். தமிழன் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் நகர வாழ்க்கை வாழ்ந்தான் என்பதை நாம் உலகிற்குக் காட்ட முடியும். இதுதான் என்னுடைய எண்ணம்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com