இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம்! இன்றே அறிவிப்பு வரலாம்?

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் நியமன அறிவிப்புக்கான அரசு முயற்சி பற்றி...
இந்தியத் தேர்தல் ஆணையம்...
இந்தியத் தேர்தல் ஆணையம்...

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கை அவசரமாக – வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் முன்வந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான அறிவிக்கை இன்றே எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் காலியாகவுள்ள இடங்களுக்குப் புதிதாக இரு தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் எதிர்பாராத வகையில் திடீரெனத் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். தற்போது ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.

இந்தியத் தேர்தல் ஆணையம்...
புதிய தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து!

இந்த நிலையில் காலியாகவுள்ள இரு தேர்தல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதைத் தனக்கு சாதகமாக மத்திய அரசு பயன்படுத்திக்கொண்டுவிடக் கூடாது என்பதால் விரைவில் தங்கள் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு கேட்டுக்கொண்டிருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கான புதிய சட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ள கூட்டமைப்பின் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்கப் பட்டியலிடுவதாக நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு ஒப்புக்கொண்டுள்ளது.

அனூப் பரன்வால் வழக்கில் 2023 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதியில் உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளபடி, நாட்டின் மிகவுயர் அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு ஆணையர்களை நியமிப்பதற்கான பிரதமர் தலைமையிலான உயர்நிலைத் தேர்வுக் குழுவில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கொண்டுவரப்பட வேண்டும் என்று மனுவில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில், நாளை இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரவுள்ள நிலையில்தான், இரு புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கான பணியை மத்திய அரசு விரைவுபடுத்தியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம்...
அருண் கோயல் ராஜிநாமாவும் விடை தெரியாத கேள்விகளும்! தேர்தல் ஆணையத் தலைவலி...

இதனிடையே, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதுரி, தேர்தல் ஆணையர் பதவிக்கு உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாடி, ஞானேஷ் குமார், இந்தவர் பாண்டே, சுக்வீர் சிங் சாந்து, சுதிர் குமார் கங்காதர் ஆகிய முன்னாள் அரசு அலுவலர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சாந்து ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் வழக்கில் வெள்ளிக்கிழமை ஒருவேளை, புதிய சட்டத்தை நிறுத்திவைக்கவோ, அல்லது ஏற்கெனவே இருந்த முறைப்படியே, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருடன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய குழுவே தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றோ உச்ச நீதிமன்றம் தெரிவிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு உத்தரவிடப்பட்டால் அரசு நினைத்தபடி தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய முடியாமல் போய்விடும்.

இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் தலையிடுவதற்கு – அதாவது இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு - முன்னதாகவே, புதிய ஆணையர்கள் இருவரையும் நியமனம் செய்து மத்திய அரசு அறிவித்துவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்றிரவே அறிவிக்கை வெளியாகலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com