கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் கவனம்பெறாமல் சென்ற கண்ணுக்குள் நிலவு!

விஜய்யின் கண்ணுக்குள் நிலவு திரைப்படம் குறித்து...
Kannukkul Nilavu film poster
கண்ணுக்குள் நிலவு பட போஸ்டர். படம்: ஐஎம்டிபி
Published on
Updated on
2 min read

ஷோலே அல்லது பதேர் பாஞ்சாலி எது வெற்றிப் படம் என்ற கேள்விக்கு, “ஷோலேவும் வெற்றிதான், பதேர் பாஞ்சாலியும் வெற்றிதான். அதன் நோக்கங்களே அதனைத் தீர்மானிக்கிறது” என அசோகமித்திரன் கூறியதாக ஞாபகமிருக்கிறது.

நடிகர் விஜய் படங்கள் பதேர் பாஞ்சாலி அளவுக்கு எதுவும் கிளாசிக்கான படங்கள் இல்லைதான். ஆனால், கமர்ஷியலில் ஷோலே அளவுக்கு சில படங்கள் தமிழில் இருந்துள்ளன.

கில்லி, கத்தி, துப்பாக்கி ஆகிய படங்கள் விஜய்-க்கு மகுடம் சூட்டுவதாக இருந்துள்ளன. மறுவெளியீட்டிலும் கில்லி ரூ.50 கோடி வசூலித்தது! இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகரும் முறியடிக்காத சாதனையாக இருக்கிறது.

விஜய் படம் நன்றாக இருந்தும் கமர்ஷியலாக கவனம் பெறாமல் பல படங்கள் இருந்துள்ளன. அதில் நெஞ்சினிலே தொடங்கி கண்ணுக்குள் நிலவு, காலமெல்லாம் காத்திருப்பேன், நிலாவே வா, மின்சார கண்ணா, வசீகரா வரை ஒரு நெடும் பட்டியல் இருக்கிறது. இந்தப் படங்களில் விஜய் நடித்ததிலேயே நேர்த்தியான படமான கண்ணுக்குள் நிலவு திரைப்படம் குறித்து...

மலையாள இயக்குநர் பாசில் இயக்கத்தில் கடந்த 2000-இல் வெளியான இந்தப் படத்தில் காதலியாக ஷாலினியும், ஷாலினியின் அப்பாவாகவும் மருத்துவராகவும் ரகுவரனும், ஸ்ரீவித்யா விஜய்-க்கு அம்மாகவும் நடித்துள்ளார்கள். தலையில் அடி வாங்கியதால் பழையதை மறந்த விஜய், அதற்குக் காரணமானவர்களை நினைவு திரும்பியதும் பழிவாங்குவதுதான் கதை.

படம்: சன்நெக்ஸ்ட்.

இந்தப் படத்தில் விஜய் மனநிலை பிசகியபோது ஏற்படும் குழப்பங்கள், குழந்தைத் தனமான சேட்டைகள் என அசத்தியிருப்பார். அப்போது இருக்கும் உடல்மொழியும் குரலும் மனநிலை சரியாகியபோது இருக்கும் உடல்மொழியும் குரலும் கச்சிதமாக வித்தியாசப்படுத்தி இருப்பார்.

காவலன் படத்தில் அசினை சந்திக்க பூங்காவில் செல்லும்போது தடுப்பில் மோதி கீழே விழும் காட்சியில் மிகவும் இயல்பாக நடித்திருப்பார். அதேபோல இந்தப் படத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில காட்சிகள் இருக்கின்றன. ஷாலினியிடம் காதலைச் சொல்லும் இடத்திலும் நினைவு திரும்பி மூர்க்கமாக நடந்துக்கொள்ளும் இடத்திலும் நேர்த்தியாக நடித்திருப்பார்.

கண்ணுக்குள் நிலவு படத்தில்...
கண்ணுக்குள் நிலவு படத்தில்...படம்: சன்நெக்ஸ்ட்.

நடிகர் ரஜினியை மட்டுமே தனியாக ஃபிரேமில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வைக்கலாம்; ரசிகர்களை கவரும் யுக்தி தெரிந்தவர் என்பார்கள். அதேபோல் நடிகர் விஜய்யையும் ஃபிரேமில் தனியாக வைக்கலாம். குறிப்பாக விஜய்யின் கண்கள் சக்தி வாய்ந்ததாக இருக்கும். இந்தப் படத்திலும் சில காட்சிகளில் கண்ணுக்கு குளோஸ்-அப் ஷாட்டுகள் வைத்திருப்பார்கள். அதில் கோபத்தை, அப்பாவித்தனத்தை சூழலுக்கு ஏற்ப வெளிப்படுத்தியிருப்பார்.

நடிப்பு என்பது தெருவில் உருண்டு புரண்டு செய்வதல்ல, உணர்ச்சிகளை நுட்பமாக வெளிப்படுத்தினாலே போதுமானது. தமிழில் உச்ச நட்சத்திரமாக விஜய் வளர்ந்திருந்தாலும் இன்னமும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் காலத்தால் அழியாத படங்களின் வரிசையில் கண்ணுக்குள் நிலவு, காவலன், பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் மாதிரியாக கூடுதலாக இடம்பெற்றிருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com