பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜார்க்கண்ட்டில் என்ன நடக்கிறது? ஜென் ஸீக்களின் கலகம் வெற்றி பெறுமா?

ஜார்க்கண்டில் நடைபெறும் மாணவர்கள் (ஜென் ஸீ) போராட்டம் பற்றி...

News image

ராஞ்சியில் சட்டப்பேரவை நோக்கி பேரணியாகச் சென்ற இளைஞர்கள் - PTI

Updated On :5 வினாடிகள் முன்பு

தில்லியில் நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்துக்கு சற்றும் சளைக்காத வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் மாணவர்கள் அமைப்பின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாதம் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டம், நாடு முழுவதும் பரவிய நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவில் முடிவடைந்தது. போராட்டங்களுக்கு பணிந்து பாஜக அரசில் மத்திய அமைச்சர் ராஜிநாமா செய்தது இதுவே முதல்முறை.

சிஜேபி போராட்டத்தின் ஒரு பகுதியாக பிகார் தலைநகர் பாட்னாவில் ஜென் ஸீ மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மத்தியில், பிகார் மாநிலத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாகவுள்ள பாங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தல் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது.

இவ்வாறாக வரலாற்றை திருப்பி போட்டுக் கொண்டிருக்கும் ஜென் ஸீக்களின் போராட்டம், நாட்டின் மிகப்பெரிய கனிமவள மாநிலமான ஜார்க்கண்ட் பக்கம் திரும்பியுள்ளது.

போராட்டத்தின் பின்னணி என்ன?

ஜார்க்கண்ட் இளைஞர்களின் மையப்புள்ளி ஒன்றுதான் - ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி).

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த 2000 ஆவது ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாகும் நிலையில், வெறும் 13 ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகளை மட்டுமே நடத்தியுள்ளது.

இவற்றிலும் பல தேர்வுகள் முறைகேடு புகார்கள் காரணமாக நீதிமன்ற வழக்குகளால் பாதிக்கப்பட்டன.

உதாரணமாக, ஜூன் 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகளின் முதன்மைத் தேர்வு முடிவுகளை 11 மாதத் தாமதத்துக்குப் பிறகு மே 2025-ல்தான் ஜேபிஎஸ்சி வெளியிட்டது.

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாக பல்வேறு சூழ்நிலைகளில் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

தீவிரமடைந்த போராட்டம்

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையமும் (ஜேஎஸ்எஸ்சி) இணைந்து நடத்திய 14-வது ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை அடுத்து, சிறப்புப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணையை மாநில அரசு நடத்தியது.

ஆனால், சிஐடி விசாரணையின் முடிவிலும் முறைகேடுகள் குறித்து எந்தவொரு தகவலும் மாணவர்களுக்கு அளிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மாணவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும், முறைகேடுகள் குறித்து உரிய முறையில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், ஜேபிஎஸ்சி-யின் மூன்று ஆணையர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, ராஞ்சியில் உள்ள ஜெய்பால் முண்டா திடலில் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் ஜனநாயகப் புரட்சி முன்னணி (ஜேஎல்கேஎம்) அமைப்பின் தலைவர் தேவேந் திரநாத் மஹதோ காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தப் போராட்டத்துக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மாணவர் அமைப்பான ஜார்க்கண்ட் மாணவர் முன்னணி, கூட்டணியில் உள்ள காங்கிரஸின் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும் ஆதரவு அளித்திருப்பதால் மாநில அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மாநில அமைச்சர்கள் நடத்திய 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன.

இதனிடையே, ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூன்று ஆணையர்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்களின் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

இருப்பினும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும், முறைகேடுகள் நடந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதாகவும் போராட்டத்தை தொடரப் போவதாகவும் மாணவர்கள் அமைப்புகள் அறிவித்தன.

Story image

பேரவை முற்றுகையும் போலீஸ் தடியடியும்

போராட்டத்தை தீவிரப்படுத்தவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஜாா்க்கண்ட் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை மாணவர்கள் அமைப்பினர் அறிவித்தனர்.

அதன்படி, திங்கள்கிழமை காலை பேரணியாகச் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், தடுப்புகளை தகர்த்து முன்னேற முயன்றதாக மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர்.

கிட்டத்தட்ட நேற்று மட்டும் மூன்று முறை மாணவர்களுக்கு எதிராக காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும், பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மாணவர்கள் அமைப்பு தலைவர் தேவேந் திரநாத் மஹதோ, ”எங்களை தடுக்க முள்வேலித் தடுப்புகள் அமைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். இருப்பினும், அரசுக்கு எதிராக ஒரு முழக்கங்களைகூட நாங்கள் எழுப்பவில்லை. அரசின் முடிவைப் பொறுத்தே எங்களின் அடுத்த நகர்வு இருக்கும்” என்றார்.

இதனிடையே எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ”அரசியல் ஆதாயத்திற்காக மாணவர்களின் அமைதியான போராட்டத்தை கெடுக்க சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அந்த வலையில் மாணவர்கள் சிக்க வேண்டாம். நீங்கள் ஜார்க்கண்டின் எதிர்காலம். உங்கள் குரலைப் புறக்கணிப்பது எங்கள் நோக்கமல்ல. உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே எங்கள் கடமையாகும். பேச்சுவார்த்தை மூலம் அனைவரும் இணைந்து தீர்வு காண்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையைப் பிரயோகிப்பது தவறானது என்று கண்டனம் தெரிவித்தார். (ஹேம்ந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அமைச்சரவையில் காங்கிரஸின் 4 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக உள்ளனர்)

இதனிடையே, ஜார்க்கண்ட் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் எல். சியாங்டேவை காவல் துறை சிஐடி பிரிவு திங்கள்கிழமை கைது செய்தது.

Story image

பாஜகவின் இரட்டை நிலைப்பாடு

தில்லியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், பாட்னாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகவும் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது அமைதியாக இருந்த பாஜக நிர்வாகிகள், தற்போது ஜார்க்கண்ட் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

தேர்வு முறைகேடுக்கும், மாணவர்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பேற்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை பதவி விலகக் கோரி, மாநிலம் முழுவதும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பாஜக ஈடுபட்டு வருகின்றது.

மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி, ராஞ்சியில் சாலைகளில் டயர்களை எரித்தும், காவல்துறை வாகனங்கள் மீது ஏறியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய கல்வி அமைச்சரை ராஜிநாமா செய்யச் சொன்ன ராகுல் காந்தி, கூட்டணி ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முதல்வரை பதவி விலக வலியுறுத்துவாரா என்ற கேள்வியை பாஜக எம்.பி.க்கள் முன்வைத்துள்ளனர்.

தில்லி போராட்டத்துக்கும், ராஞ்சி போராட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மாணவர்கள் போராடினர். இங்கு இந்தியா கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், காவல்துறையின் அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை. கட்சிகளின் அணுகுமுறையில்தான் சில மாற்றங்கள் தென்படுகின்றன.

வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஜென் ஸீக்களின் போராட்டங்களை நம் ஜென் ஸீக்களின் போராட்டங்களுடன் ஒப்பிடுவது ஒருபோதும் சரியாக இருக்காது.

தில்லியிலும் சரி, ராஞ்சியிலும் சரி, தொடக்கம் முதலே அகிம்சை வழியைத் தேர்ந்தெடுத்துதான் நம் மாணவர்கள் போராடி வருகின்றனர். அதிலும் ராஞ்சியில் அரசுக்கு எதிராக அல்லாமல், தங்களின் கோரிக்கைகளை மையமாக வைத்துதான் போராட்டத்தை இதுவரை முன்னெடுத்துள்ளார்கள்.

நாட்டுக்கு நிலக்கரி கொடுத்து வெளிச்சம் பாய்ச்சும் ஜார்க்கண்ட் மாநிலத்தின், இளைஞர்கள் வாழ்க்கை இருட்டிலிருந்து மீளுமா? ஜென் ஸீக்களின் கோரிக்கைகளுக்கு ஜார்க்கண்ட் அரசு செவி சாய்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Summary

What is happening in Jharkhand? - Will the Gen Z revolution succeed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.