/

கரப்பான் பூச்சிகளால் மோடி என்ற ‘பிராண்ட்’ தகர்க்கப்பட்டதா?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தின் வெற்றி பிரதமர் மோடிக்கு சவாலாக மாறியுள்ளதா?

News image

பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்) - ANI

Updated On :5 வினாடிகள் முன்பு

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின் வெற்றி, இதுநாள் வரை கட்டமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ’மோடி’ என்ற பிம்பத்துக்கு நேரடி சவாலாக மாறியுள்ளதா?

நாட்டின் பிரதமராக 13-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னெப்போதும் கண்டிராத சறுக்கலைக் கண்டிருப்பதாகப் போராட்டத்தின் வெற்றி குறித்துப் பேசுபவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றில் ஆட்சியில் இருக்கும்போது, பிற கட்சிகள், அமைப்புகளின் போராட்டங்களுக்கு அடிபணிந்து ஒரு மத்திய அமைச்சரை ராஜிநாமா செய்ய வைப்பது இதுவே முதல்முறை (மீ டு குற்றச்சாட்டின் காரணமாக எம்.ஜே. அக்பர் பதவி விலகியிருக்கிறார்).

பாஜகவின் தப்புக் கணக்கு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த்தின் விமர்சனத்தின் விளைவாக இணையவழியில் மட்டுமே உருவான ஒரு கட்சி, மத்தியில் 12 ஆண்டுகளாகவும், 17 மாநிலங்களையும் ஆட்சி செய்து வரும் பெரும் சாம்ராஜ்ஜியமான பாஜகவையே அசைத்துப் பார்த்திருக்கிறது.

இன்றைய அரசியல் களத்தில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் அரசியல் செய்துவரும் பாஜக, சிஜேபி போராட்டத்தில் எத்தகைய கணக்குப் போட்டது என்று தெரியவில்லை.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்த சிஜேபி, முதல்முறையாக ஜூன் 6 அன்று தில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தொடர்ந்து, புணே, ஜெய்ப்பூர், நாக்பூர், அமிர்தசரஸ், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்து போராட்டம் நடத்திய சிஜேபிக்கு சமூக ஆர்வலர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் ஆதரவும் கிடைத்தது.

ஆனால், சிஜேபி போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாததால், தில்லி ஜந்தர் மந்தரில் ஜூன் 20 ஆம் தேதி முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.

தொடக்கத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கேவுக்கு ஆதரவளித்து அவருடன் சிலர் மட்டுமே போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆகையால், அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என்ற முடிவில் மத்திய அரசு தெளிவாக இருந்ததாக தெரிகிறது.

இதனிடையே, சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவளித்து ஜூன் 28 முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்.

அவரின் உண்ணாவிரதப் போராட்டம் 20 நாள்களைக் கடந்தும் தொடர்ந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நாளான ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி அமைதிப் பேரணி செல்லப் போவதாக சிஜேபி அறிவித்தது.

முன்னதாக, லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அவரைக் கைது செய்து இளைஞர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது மத்திய அரசு.

தற்போதைய போராட்டத்திலும் அதே உத்தியைக் கையாண்ட மத்திய அரசின் கணக்கு தோல்வியில் முடிந்தது.

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கை, நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான ஜூலை 19 ஆம் தேதி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தன்னெழுச்சியாக சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். மற்றதெல்லாம் வரலாறாக மாறியது.

நாடு முழுவதும் சிஜேபியின் போராட்டம் பரவிய நிலையில், பாஜக வரலாற்றில் முதல்முறையாக போராட்டங்களுக்கு அடிபணிந்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.

மோடி பிம்பத்துக்கு சவாலா?

பிரதமர் நரேந்திர மோடி முதல்முறையாக ஆட்சி அமைத்தபோது அவரின் அமைச்சரவையில் அருண் ஜெட்லி, மனோகர் பாரிக்கர், வெங்கைய நாயுடு போன்ற மூத்த அமைச்சர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கி ஆட்சி நடத்துவதற்கு வழிகாட்டியாக இருந்தனர்.

தற்போது, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் மோடிக்கு உதவிகரமாக இருந்தாலும், மக்கள் மத்தியில் பாஜக என்றால் மோடி என்ற நிலை உருவாகியுள்ளது. கட்சியைத் தாண்டி மோடி என்ற பெயருக்கான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று 13-வது ஆண்டில் நரேந்திர மோடி அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், அதற்கான கொண்டாட்டங்கள் களையிழந்து இருக்கின்றன.

பொதுவாகவே, பாஜக அரசு ஒவ்வோர் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்போதும், விழாக் கோலம் பூண்டு கொண்டாட்டங்களை பாஜக நடத்தும். ஆட்சியின் சிறப்பு பற்றிய மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மூத்த நிர்வாகிகள் எனப் பலரின் சிறப்பு பேட்டிகளும் சிறப்புகளும் ஒளிபரப்பாகும்.

அதுவும் இந்த முறை அதிக காலம் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையையும் மோடி முறியடித்துள்ளார். ஆனால், மாதக் கணக்கில் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் களையிழந்து போயுள்ளன.

சிபிஎஸ்இ மதிப்பெண் குளறுபடி, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்கள், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு என வரிசையாக பாஜக ஆட்சிக்கு எதிரான பிரச்னைகள் வெடித்துள்ளதால், கொண்டாட்டங்களைத் தவிர்த்து தற்காப்பு நிலைக்கு பாஜக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்னதாகவே மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும், புதிய அமைச்சரவையில் இருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவார் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், அதற்கு முன்பு சிஜேபி போராட்டம் வெடித்ததால் மத்திய அமைச்சரவை மாற்றத்தை செய்தால் அவர்களின் போராட்டத்துக்கு இணங்கியதாகிவிடும் என்று தள்ளிப்போட்டனர்.

பிரதமர் மோடி, உள்துறை அமைசர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பு என முக்கோணத்திலும் அனைவருக்கும் நெருங்கியவராகவும் மூத்த நிர்வாகியுமாகவும் இருந்த தர்மேந்திர பிரதானை போராட்டத்துக்கு அடிபணிந்து அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கான வாய்ப்பே இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் மாதக்கணக்கில் தில்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போதுகூட சட்டங்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டன. அமைச்சரவையிலிருந்து அமைச்சர் நீக்கப்படவில்லை.

மணிப்பூரை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தும் இரண்டு ஆண்டுகளாகக் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மத்திய அரசு தவித்தபோதும் உள்துறை அமைச்சர் பதவி விலகவில்லை.

ஆனால், இந்த முறை காவல்துறையின் அடக்குமுறைக்கு மத்தியிலும் விடாப்பிடியாகப் போராடிய ஜென் ஸி இளைஞர்கள் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்துள்ளனர்.

மேலும், பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கேலி, கிண்டல் செய்யும் வகையிலான போஸ்டர்களையும், மீம்ஸ்களையும் இன்ஸ்டாவில் இளைஞர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பாஜகவின் தேர்தல் வெற்றிகளுக்கு பின்னால் ஆயிரம் பேர் இருந்தாலும், சாதாரண மக்கள் கண்ணோட்டத்தில், பாஜக என்றால் மோடி, மோடி என்றால் பாஜக எனக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மத்திய அமைச்சர் பதவி விலகல் கோரிக்கையைத் தாண்டி, மோடி பிம்பத்தின் மீதான தாக்குதலை எதிர்கொள்வது பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.

பாஜக அரசுக்கு ஒரு பிரச்னை முடிந்தவுடன் மற்றொரு பிரச்னை தொடங்கியிருக்கிறது. தற்போது பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதற்கு எதிர்ப்பு, கலப்படம் இல்லாத பெட்ரோல் வேண்டும் என வலியுறுத்தி ’இ20 ஜனதா கட்சி’ உருவாகியுள்ளது.

இந்தோனேசியா, நேபாளம் நாடுகளில் ஜென் ஸி போராட்டங்களால் ஆட்சியே கவிழ்க்கப்பட்டது. மொத்த மக்கள்தொகையில் 65% (35 வயதுக்கு கீழ்) இளைஞர்களைக் கொண்ட இந்தியாவில் ஜென் ஸி தலைமுறையினர் தங்களின் எழுச்சியை மத்திய அரசுக்கு காட்டியுள்ளனர்.

இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை நோக்கி அரசியல் களத்தை ஜென் ஸிக்களால் நகர்த்திச் செல்ல முடியுமா?அல்லது தனது பிராண்ட்டைத் தக்கவைத்துக்கொண்டு ஜென் ஸிக்களையும் மோடி கவர்வாரா?

Summary

Was the Modi brand shattered by cockroach janta party protest?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.