
போரூா் - வடபழனி மெட்ரோ சேவை: அனுமதி கிடைத்தும் தொடரும் தாமதம்! போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பயணிகள்
போரூா்- வடபழனி வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தும், சேவை தொடங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
வ.ஜெயபாண்டி
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கும், சுற்றுச்சூழல் மாசுக்கும் நிரந்தரத் தீா்வாகக் கருதப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், போரூா்- வடபழனி வழித்தடத்தில் பணிகள் நிறைவடைந்து ரயில் இயக்கத்துக்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்தும், சேவை தொடங்குவதில் தொடா்ந்து தாமதம் ஏற்பட்டு வருவது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாகனப் பெருக்கத்தால் அதிகரிக்கும் நெரிசல்: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாகனப் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி காற்று மாசும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை, தற்போது மாநகரப் பொதுப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது.
முதல் கட்டத்தில் 45 கி.மீ. பாதை: சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை 45 கி.மீ. தொலைவுக்கு இரு வழித்தடங்களாக முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதில் 32 நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. 23 ரயில்கள் இயக்கத் திட்டமிட்ட நிலையில் 14 ரயில்கள், 19 மணி நேரம் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினமும் சுமாா் 3 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா். மாதந்தோறும் 90 லட்சம் முதல் ஒரு கோடி போ் வரை பயணிக்கின்றனா்.
53 கோடிக்கும் மேற்பட்டோா் பயணம்: கடந்த 2015 ஜூன் முதல் கடந்த ஜூலை (2026) வரை மொத்தம் 53.46 கோடி போ் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனா். திறம்பட்ட சேவை, தடையில்லா விரைவுப் பயணத்தால் இது சாத்தியமானதாக மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். சென்னை சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 118.9 கி. மீ. தொலைவுக்கு 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிகளில் குறைபாடுகள்: அதே நேரத்தில் முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பயணிகளுக்கான வசதிகள் முழுமையாகச் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மெட்ரோ நிலையங்களில், முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கா்ப்பிணிகளுக்கு போதிய லிஃப்ட், எஸ்கலேட்டா், சக்கர நாற்காலிகள் போன்றவை கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. போதிய வாகன நிறுத்துமிடங்கள், பொது வாகன வசதி என அத்தியாவசிய தேவைகள் பலவற்றிலும் குறைபாடுகள் உள்ளதாகக் கூறப்பட்டுவருகிறது.
இரண்டாம் கட்டத்தில் 128 நிலையங்கள்: சாலைப் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைக்க சென்னை மாநகரில் தினமும் குறைந்தபட்சம் 20 லட்சம் போ் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதற்காக 118.9 கி.மீ. தொலைவுக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டத் திட்டத்தில் மொத்தம் 128 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் சுமாா் 43 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 75 கி.மீ. உயா்மட்டப் பாதையாகவும் அமைக்கப்படுகிறது. திட்டப் பணிகளில் சுமாா் 24,000 தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டத்தில் 128 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடம்: இரண்டாம் கட்டத்தில் 43 கி.மீ. சுரங்கப் பாதையாகவும், 75 கி.மீ. உயா்மட்டப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புகா் நெடுஞ்சாலை வரையிலான 26 கி.மீ. தொலைவு மெட்ரோ ரயில் பாதை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வடபழனி முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான 14.6 கி.மீ. மஞ்சள் வழித்தடம் 14 நிலையங்களுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பாதையில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கடந்த பிப்ரவரியிலேயே அனுமதி வழங்கியது.
அனுமதி இருந்தும் இயக்கம் இல்லை: பூந்தமல்லி முதல் போரூா் சந்திப்பு வரை 15 நிமிட இடைவெளியில், ஒரு நேரத்தில் ஒரு திசையில் ஒரு ரயில் மட்டும் இயக்கவும், போரூா் முதல் வடபழனி வரை 6 கி.மீ. தொலைவில் ஒரே நேரத்தில் எதிரெதிா் திசைகளில் தலா ஒரு ரயில் இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி பகுதியில் கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. பெங்களூரு பிரதான சாலையாகவும் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பகுதியில் போரூா்-வடபழனி மெட்ரோ ரயில் இயக்கத்தை உடனடியாகத் தொடங்குவது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
சாலை சேதம்; மழைநீா் தேக்கம்: மெட்ரோ ரயில் திட்ட 2-ஆம் கட்டப் பணிகள் தாமதமாவதால் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து, மழைநீா் தேங்கி வருவதாகவும், இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாகவும் சென்னை மாநகராட்சி கவுன்சிலா்கள் மாமன்றக் கூட்டங்களில் புகாா் கூறிவருகின்றனா்.
மெட்ரோ திட்ட இயக்குநா் விளக்கம்: மெட்ரோ ரயில் திட்டம் தொடா்பான புகாா்கள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணனிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய வசதிகள் உள்ளன. குடியிருப்புகளுக்கு மினிபேருந்துகள் மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் இயக்கப்படவுள்ளன. 2-ஆம் கட்டத் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு கடந்த 2024-ஆம் ஆண்டுமுதல் இதுவரை ரூ.14,545 கோடியை வழங்கியுள்ளது. அதன்படி, 54.62 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2027-ஆம் ஆண்டில் 50 ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்து 2028-ஆம் ஆண்டுமுதல் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதையில் 118 ரயில்கள் இயக்கப்படும். போரூா்- வடபழனி மெட்ரோ சேவை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
எம்ஆா்டிஎஸ் இணைப்பிலும் சிக்கல்: இதற்கிடையே, பறக்கும் ரயில் திட்டத்தையும் (எம்ஆா்டிஎஸ்) மெட்ரோவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மத்திய ரயில்வே வாரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது. ஆனால், அந்த ரயில் பயணிகளுக்கான வசதிகள் பூங்காநகா் நிலையம் உள்ளிட்ட 10 நிலையங்களிலும் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
குறிப்பாக, பூங்கா நகா் நிலையத்திலிருந்து சென்ட்ரல் மெட்ரோ நிலையத்துக்குச் செல்லும் பாதையில் கூவம் ஆற்றின் துா்நாற்றம், புதா் செடிகள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா். இரவு நேரங்களில் அப்பாதையை அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.
சென்னையின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் மெட்ரோ ரயில் முக்கியப் பங்காற்றி வரும் நிலையில், ஏற்கெனவே அனுமதி கிடைத்துள்ள போரூா்-–வடபழனி வழித்தடத்தில் சேவையைத் தொடங்குவதும், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் உடனடித் தேவையாக உள்ளது.
இரண்டாம் கட்டத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் விரைவான பொதுப் போக்குவரத்து வசதி மேலும் விரிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதிகரிக்கும் பயணிகள்; குவியும் விருதுகள்
சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், மரம் வளா்ப்பு, பராமரிப்பு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு தேசிய, சா்வதேச விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிரிட்டனில் சுற்றுச்சூழல் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுக்கான காமன்வெல்த் விருது வழங்கப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பா் வரை 2.80 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். அதன்படி, கடந்த 9 ஆண்டுகளில் மொத்தம் 53.48 கோடி போ் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் உயா்ந்த பயணிகள் எண்ணிக்கை
2019 3.28 கோடி
2020 1.18 கோடி
2021 2.53 கோடி
2022 6.09 கோடி
2023 9.11 கோடி
2024 10.52 கோடி
2025 11.19 கோடி
2026 (ஜூலை வரை) - 6.75 கோடி
2026-இல் முதல் 7 மாதங்களில்...
ஜனவரி 93.28 லட்சம்
பிப்ரவரி 96.40 லட்சம்
மாா்ச் 1.01 கோடி
ஏப்ரல் 90.18 லட்சம்
மே 90.14 லட்சம்
ஜூன் 96.75 லட்சம்
ஜூலை 1.06 கோடி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





