

விமான விபத்தில் சிக்கி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பலியான நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. இறுதிச் சடங்குகள் நடக்கும் நிலையில், மறுபக்கம், அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 40 எம்எல்ஏக்களும் தொடர்ந்து பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை இணைந்த மகாயுதி கூட்டணியிலேயே நீடிப்பார்களா அல்லது மீண்டும் சரத் பவாரின் கட்சிக்குத் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எழுச்சிக்கு அஜீத் பவாரின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. எப்போதும் அரசியல் பணியை நோக்கியே தன்னை செலுத்திக் கொண்டிருந்தவர், அடுத்து முதல்வர் நாற்காலி என்ற கனவோடு பயணத்தைத் தொடர்ந்திருந்தார். ஆனால், அந்த பயணம் விமான விபத்தால் நிறைவேறாமல் முடிவுற்றிருக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும்போதுதான் அவர் மரணித்திருக்கிறார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக நான்கு முறை பதவி வகித்த சரத் பவாரின் உறவினர்தான் அஜீத் பவார். அதாவது, அஜீத் பவாரின் தந்தை, சரத் பவாரின் சகோதரர். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, குடும்பத்தை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியாக இருந்தது. அதன்படியே சரத்பவாரின் வழிகாட்டுதலோடு அரசியலுக்கு வந்த அஜீத் பவார், 1991ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் பாராமதி மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனபோது, அஜீத் பவாருக்கு வயது வெறும் 32 தான்.
எம்.பி. ஆன ஆறு மாதங்களில், சரத் பவாருக்காக தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்தவர் அஜீத் பவார். காரணம், சரத் பவார், மத்தியில் ஆண்ட பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான ஆட்சியில் இணைந்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்கிறார். எனவே, தன்னுடைய சித்தப்பா, மக்களவைத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக வேண்டும் என்பதற்காக. எம்.பி. பதவியை துறந்துவிட்டு மீண்டும் மாநில அரசியலுக்குள் நுழைந்தார். மீண்டும் பாராமதி பேரவைத் தொகுதியில் வெற்றி பெறுகிறார்.
இப்போதுதான் நிலைமை மாறுகிறது. 1999 ஆம் ஆண்டு, வெளிநாட்டைச் சேர்ந்த சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் என்பதை ஏற்க மறுத்த சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது, உண்மையிலேயே புதிய கட்சிக்கான அடித்தளத்தை வலுவாகக் கட்டமைத்தது என்னவோ அஜீத் பவார்தான் என்கிறார்கள் அனைத்தையும் நேரில் இருந்த பார்த்தவர்கள். அதிலும் குறிப்பாக மேற்கு மகாராஷ்டிரத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தியதற்கு முக்கிய காரணம் அஜீத் பவார் என்கிறார்கள்.
இவை அனைத்தையும் அவர் ஏதோ மாயாஜால வித்தைகளைக் கொண்டு கைகொள்ளவில்லை. உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் தனக்கிருந்த செல்வாக்கைக் கொண்டு மிகப்பெரிய கூட்டுறவு சங்கங்கள், உள்ளூர் நிறுவனங்களைக் கொண்டு அரசியல் பிடியை உறுதி செய்தார்.
வேளாண்மைத் துறையின் கேபினட் அமைச்சராக இருந்த போது, மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஹைடல் எரிசக்தித் திட்டங்கள், கால்வாய் அமைக்கும் பணிகள், வேளாண் வளங்களை அதிகரிப்பது என பல திட்டங்களை செயல்படுத்தி, அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
ஆனால், சரத் பவார் போல பல இடங்களில் பொறுமை காப்பதை அஜீத் விரும்பவில்லை. இதனை சரத் பவாரே கூறியிருக்கிறார். அஜீத் இயற்கையில் சற்று வேறுபட்டவர். அவர் எப்போதும் அடிமட்டத்திலிருந்து வேலை செய்வதை விரும்புவார், அதற்கான பலன்களையும் கைப்பற்றுவார். அப்போதும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க விரும்பமாட்டார். புகழையும் விரும்பமாட்டார். கட்சி மற்றும் மாநிலத்துக்காக மட்டுமே உழைப்பார். எனவே அவரைப் பற்றி சில தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
அஜீத் பவாரின் லட்சியமும், சரத் பவாரின் குணமும் ஒத்துப்போகவில்லை. 2009ஆம் ஆண்டு அக்டோபரில் இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. துணை முதல்வர் பதவியை கோரிய நிலையில் அது கிடைக்கவில்லை. அதே வேளையில், சரத் பவார் தன்னுடைய மகள் சுப்ரியா சுலேவை, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தனக்கு இணையாகக் கொண்டு வர காய்களை நகர்த்தினார்.
ஆனால், மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 பேரவைத் தேர்தலின்போது மிகப்பெரிய மாற்றம் நேரிட்டது.
அதிகாலையில் நடந்த முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜக மாநில தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும் துணை முதல்வராக அஜீத் பவாரும் பதவியேற்கிறார்கள். அக்டோபரில் நடந்த தேர்தலில் பாஜக 105 தொகுதிகளை வெல்கிறது. சிவ சேனை 56 தொகுதிகளில் வெல்கிறது. அப்போதுதான் அஜீத் பவார், மிகப்பெரிய எம்எல்ஏக்கள் கூட்டத்துடன் பாஜக அணிக்குச் சென்று பலம் கூட்டுகிறார்.
இப்போது ஒரே ஒரு கேள்விதான் எழுந்தது, சரத் பவாருக்கு, இந்த மாற்றம் தெரிந்திருந்ததா? என்பதே. இதுபற்றி எதுவும் தெரியாத என சரத் பவார் கூற, அனைத்தும் தெரியும் என ஃபட்னவீஸ் கூறியிருந்தார். எது உண்மை என்பது வெளியாகவில்லை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய அஜீத் பவார், பிரஃபுல் படேல் உள்ளிட்டோர், கட்சியின் சொத்துகள், கட்சியின் சின்னம் உள்ளிட்டவற்றை பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறார்கள்.
மகாராஷ்டிரத்தில் 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பிலேயே அஜீத் பவார் போட்டியிடுகிறார். 59 தொகுதிகளில் போட்டியிட்டு 41 தொகுதிகளை வென்றார். துணை முதல்வராக பதவி ஏற்றார்.
ஆனால், இன்று... ஜனவரி 29ஆம் தேதி விமான விபத்தில் பலியான அஜீத் பவாரின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிகிறது. இப்போது, அஜீத் பவார் பின்னால் வந்த 40 எம்எல்ஏக்களும் என்ன செய்யப் போகிறார்கள்? தொடர்ந்து மஹாயுதி கூட்டணியிலேயே நீடிப்பார்களா? சரத் பவாருடன் இணைவார்களா?
அது மட்டுமல்ல, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் சரத் பவார் அவதிப்பட்டு வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார் வழிநடத்துவாரா? இல்லை அவரது மகள் தலைமை பதவியை ஏற்பாரா? அஜீத் பவாரின் இழப்பு, மகாராஷ்டிர அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க...
இதையும் படிக்க..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.