தமிழ்நாடு மின்வாரியத்திடம் 2025-26-ஆம் ஆண்டு தத்கால் திட்டத்தில் ரூ.1,250 கோடியை வழங்கிவிட்டு மின் இணைப்புக்கு 6 மாதங்களாகக் காத்திருக்கும் 47,554 விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர். 2023-ஆம் ஆண்டையும் சேர்த்துக் கணக்கிட்டால் காத்திருப்போர் எண்ணிக்கை 60,120-ஆக உயர்ந்துள்ளது.
இது, விவசாயிகளுக்கான மின் இணைப்பை விரைந்து பெறுவதற்காக கொண்டுவரப்பட்ட தத்கால் திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் உள்ளது.
4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு: தமிழ்நாட்டின் மொத்த பாசனப் பரப்பில் 55 சதவீத நிலங்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பாசன நீரானது ஆறுகள் வழியே கிடைக்கிறது. மீதமுள்ள 45 சதவீத நிலங்களுக்கு கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை எடுப்பதற்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் 45 சதவீத விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு கூடுதலாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு இலவச மின்சாரத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் உரிமை மின்சாரத் திட்டத்தின் கீழ் 23,56,000 மின் இணைப்புகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. தவிர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாதாரண திட்டம் முதல் கட்டணத் திட்டம் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இந்தச் சூழலில், தமிழக அரசால் 2025-2026-ஆம் ஆண்டுக்கு விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்கும் வகையில் தத்கால் திட்டத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 2025 டிசம்பரில் அறிவிப்பு வெளியானவுடன் 47,554 விவசாயிகள் விண்ணப்பித்தனர். 5 குதிரைத்திறன் வரை ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரைத்திறன் வரை ரூ.2.75 லட்சம், 7.5 முதல் 10 குதிரைத்திறன் வரை ரூ.3 லட்சம், 10 முதல் 15 குதிரைத்திறன் வரை ரூ.4 லட்சம் வீதம் மின்வாரியத்துக்கு முன்கூட்டியே விவசாயிகள் செலுத்தினர்.
மின் இணைப்புக்காக வட்டிக்கு பணம்... விளைபொருள்களுக்கு போதிய விலை இல்லாமை, சாகுபடி செலவு உயர்வு, கூலி ஆள் பற்றாக்குறை என பல்வேறு இடர்ப்பாடுகளால் விவசாயிகள் பலரும் வேளாண்மையைக் கைவிட்டு வரும் நிலையில், மின் இணைப்புக்குக் காத்திருப்பதும் விவசாயிகளை பெரிதும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
வங்கிகளில் ஏற்கெனவே வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்த முடியாது தவிக்கும் நிலையில், மின் இணைப்புக்காக வட்டிக்கு பணம் வாங்கி மின் வாரியத்துக்கு செலுத்திவிட்டு இணைப்பு கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
ஏற்கெனவே 2023-ஆம் ஆண்டில் 12,566 விவசாயிகள் சுமார் ரூ.250 கோடி பணம் செலுத்தி தத்கால் திட்டத்தில் காத்திருக்கும் நிலையில், கூடுதலாக மின்வாரியம் விண்ணப்பங்களைப் பெற்று விவசாயிகளிடமிருந்து தலா ரூ.2.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை மொத்தமாக ரூ. 1,250 கோடியை கட்டணமாக வசூலித்துக் கொண்டு மின் இணைப்புகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது விவசாயிகளை பெரிதும் அதிருப்தியடையச் செய்துள்ளது.
இது குறித்து மின் வாரியம் எந்தப் பதிலும் அளிக்காமல் விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது. வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் 90 நாள்களுக்குள் மின் இணைப்பு வழங்கும் தமிழ்நாடு மின்வாரியம், விவசாயிகளுக்கான மின் இணைப்புக்கு மட்டும் அரசிடமிருந்து அனுமதி வரவில்லை என விவசாயிகளைக் காத்திருக்க வைக்கிறது.
கட்டணம் செலுத்தியவர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும்... தத்கால் திட்டத்தில் 15 நாள் முதல் 90 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், 2023-ஆம் ஆண்டுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு மேலாக இணைப்பு வழங்காமல் நிலுவையில் உள்ளது. 2025-26-ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தியவர்களுக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் இணைப்பு கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் வேளாண் உரிமை மின்சாரப் பாதுகாப்பு அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.பரமசிவம் கூறியதாவது: விவசாயிகளின் வயல்களின் வழியே மின் கம்பங்கள் மற்றும் உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டு வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
விவசாயிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் தமிழ்நாடு மின்வாரியம் யாருக்கும் மின் இணைப்பு வழங்க முடியாது. விவசாயிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் மின்கம்பங்களை விவசாய நிலத்தில் நடுவதால் விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு குறைகிறது.

தமிழ்நாடு அரசிடம் இருந்து எவ்விதக் கட்டணமும் வாடகையும் பெறாமல் விவசாய நிலங்களில் மின் கம்பங்களைக் கொண்டுசெல்ல விவசாயிகள் அனுமதிக்கின்றனர். ஆனால், விவசாயிகளிடம் முன்னதாக கட்டணத்தை வசூலித்துக் கொண்டு இணைப்பு வழங்க மட்டும் மின்வாரியம் தாமதம் செய்வது ஏற்புடையதல்ல. இதுமட்டுமல்லாது, இணைப்பு பெறுவதற்காக மின்கம்பங்கள், பம்புசெட்டுகள் மற்றும் இதர தளவாடப் பொருள்களுக்கும் பணத்தை செலவிட்டு தயார்நிலையில் வைத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்: எனவே, தத்கால் திட்டத்தில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்குவதோடு, இதர திட்டங்களிலும் மின் இணைப்புக்குக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தலைமையில் 24 ஆண்டு கால கடுமையான போராட்டத்திலும், 63 விவசாயிகள் வீரமரணம் அடைந்து கட்டணமில்லா மின் இணைப்புத் திட்டத்தைப் பெற்றோம்.
இவ்வாறு பெறப்பட்ட மின்சாரத்தை இலவச மின்சாரம் எனப் பெயரிட்டு விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருவதை ஏற்க முடியாது. இலவச மின்சார திட்டம் என்பதற்குப் பதிலாக வேளாண் உரிமை மின்சாரத் திட்டம் என மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜோசப் விஜய் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தத்கால் திட்டத்தில் காத்திருப்போருக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






