- திலீப் சிங் சத்ரியா
ஆசிய சிங்கங்களின் வேட்டையாடும் பழக்கத்தைப் பற்றிய பரவலான நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக ஒரு ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதில், குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் அதிகரித்து வரும் சிங்கங்கள், கால்நடைகளை விட காட்டு விலங்குகளை உணவாகக் கொண்டு உயிர் வாழ்வதையே விரும்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், அழிவின் விளிம்பில் உள்ள ஆசியச் சிங்கங்கள் கிர் காடுகளுக்கு அப்பால் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதேபோல, சிங்கங்கள் மனிதர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் கால்நடைகளைச் சார்ந்திருக்காமல் பரவி வாழ முடிவது, மாநில அரசின் நீண்டகால பாதுகாப்பு உத்திகளின் வெற்றியை உறுதிப்படுதுகின்றன.
சர்வதேச அளவில் நிபுணர்கள் மதிப்பாய்வு செய்யும் 'கன்சர்வேஷன்' இதழில் வெளியிடப்பட்ட ‘இந்தியாவின் குஜராத், சௌராஷ்டிரா கடலோரச் சூழல் மண்டலத்தில் ஆசியச் சிங்கங்களின் உணவுப் பழக்கம்' என்ற தலைப்பிலான இந்த ஆய்வை மோகன் ராம், ஆராதனை சாஹு, நித்யானந்த் ஸ்ரீவாஸ்தவா, கிருதக்ஞா வாதர், ரோஹித் சௌத்ரி மற்றும் லஹர் ஜலா ஆகியோர் மேற்கொண்டனர்.
ஆய்வாளர்கள் இப்பகுதியில் வசிக்கும் சிங்கங்களின் உணவுப் பழக்கத்தை அறிய 2024 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜுனாகத், கிர் சோமநாத், அம்ரேலி, பாவ்நகர் மற்றும் போர்பந்தர் ஆகிய கடலோர மாவட்டங்களிலிருந்து 160 சிங்கங்களின் கழிவுகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் ஆசியச் சிங்கங்கள் உட்கொள்ளும் உணவில் சுமார் 70% காட்டு விலங்குகள் மூலமே கிடைப்பதாகத் தெரியவந்தது. சுமார் 30% மட்டுமே கால்நடைகளை அவை உணவாக எடுத்துக் கொண்டிருந்தன.
16-வது சிங்கங்கள் கணக்கீடு 2025-ன் படி, குஜராத்தில் 891 ஆசியச் சிங்கங்கள் உள்ளன. அவற்றில், 100-க்கும் மேற்பட்டவை சௌராஷ்டிரரா பகுதியில் உள்ள கடலோரச் சூழல் மண்டலங்களில் வசிப்பது என்பது இந்த ஆய்வுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்குகின்றது.
கிர் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட இந்தச் சிங்கங்கள் அதற்கு அப்பால் பரவி வாழ்வது, அந்த இனத்தின் மீளுதலுக்கும் புவியியல் ரீதியான பரவலுக்கும் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
இந்த ஆய்வினை மேற்கொண்டவர்களில் ஒருவரும், ஜுனாகத் வட்டத்தின் வனப் பாதுகாவலருமான மோகன் ராம், நீல்காய் எனப்படும் ‘ப்ளூ புல்’ வகை மான்களையே இந்தச் சிங்கங்கள் முக்கிய இரையாக உட்கொள்வதாகத் தெரிவித்தார். அவர் பேசுகையில், “கடலோரத்தில் வாழும் சிங்கங்கள் உட்கொள்ளும் மொத்த உணவில் 51%-க்கும் அதிக பங்கை நீல்காய் மான்கள் கொண்டுள்ளன. சிங்கங்களின் முதன்மை உணவாக அவையே உள்ளன. அதற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் காட்டுப் பன்றிகள் உள்ளன. கால்நடைகளில் மாடுகளே அதிகளவில் சிங்கங்களுக்கு இரையாகின்றன” என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் மூலம் எதிர்பாராத விதமாக ஒரு சூழலியல் நன்மையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தும் நீல்காய் மான்கள் மற்றும் காட்டுப் பன்றிகளை வேட்டையாடுவதன் மூலம், சிங்கங்கள் மறைமுகமாக விவசாயத்திற்குத் துணை புரிகின்றன.
சிங்கங்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பல்லுயிர் பெருக்கத்திற்கும் விவசாயிகளுக்கும் பயனளிப்பதை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக குஜராத் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா தெரிவித்துள்ளார். மேலும், ஆசியச் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மாநில அரசே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழில் - வ. ஜெகதீஸ்
Summary
Lions hunt wild animals more than livestock: Study reveals
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







