வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தனிப் பெரும்பான்மையை நோக்கி தவெக? முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக தனிப் பெரும்பான்மை அடைவதற்கான வாய்ப்பு பற்றி...

News image

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :29 ஜூன் 2026, 3:24 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையை அடைய முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. திமுக 59, அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து தவெக ஆட்சி அமைக்க 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விடுதலைச் சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 ஆகிய 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைத்தார். (திமுக கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சிகளில் தேமுதிகவைத் தவிர அனைவரும் தவெகவுக்கு ஆதரவு).

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர்.

முதல்வராகப் பதவியேற்றதும் தனது எதிரியாகத் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆனால், தேர்தல் களத்தில் பெரிதும் விமர்சிக்காத அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை மட்டும் சந்திக்கவில்லை. மாறாக, எஸ்.பி. வேலுமணி அணியினரைச் சந்தித்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் மட்டும் கட்சி நடவடிக்கைகளிலிருந்து விலகியிருந்தனர்.

கட்டெறும்பாகும் அதிமுக

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தாலும், எஸ்.பி. வேலுமணி தரப்பில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், தாராபுரம் பி. சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் கடந்த வாரமும், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்றும் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலம் 41 ஆகக் குறைந்துள்ளது.

மேலும், சென்னையில் வரும் ஜூலை 2 ஆம் தேதி, முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் மிகப் பிரம்மாண்டமான மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சி. விஜயபாஸ்கரும், எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளனர்.

தொடர்ந்து, சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்களுடனும் தவெக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இணைய வாய்ப்புள்ளது.

தவெக தலைமையில் புதிய கூட்டணி

இதனிடையே, திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது கூட்டணியை உருவாக்கும் முயற்சியை தவெக தொடங்கியுள்ளது.

காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும், தவெகவுடன் கூட்டணி அல்லது ஆதரவாக செயல்படப் போவதாகவும் அறிவித்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகத்துக்கு எதிராக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளியிடப்பட்ட கட்டுரையைத் தொடர்ந்து, திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையேயான உறவு மேலும் மோசடைந்திருக்கிறது.

முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் விசிகவும் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே சமீபகாலமாக எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில், கூட்டணித் தொடர்பாகவும், கூட்டணியின் பெயர் தொடர்பாகவும் ஆலோசித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இதில், இடதுசாரிகளின் நிலைப்பாடு என்ன என்பது கூட்டத்துக்குப் பிறகே தெரியவரும்.

தனிப்பெரும்பான்மையும் விஜய்யின் கணக்கும்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மைக்கு 118 என்ற மேஜிக் நம்பர் தேவைப்படும் நிலையில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கில் ராஜிநாமா செய்ததை அடுத்து, தவெகவின் பலம் 107 ஆக உள்ளது.

தவெக தனிப்பெரும்பான்மை பெற இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.

அமமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ. காமராஜ், தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் அவர் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். குதிரை பேரம் போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில், தற்போது அவர் சுயேச்சை எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவருடன் சேர்த்தால் தவெகவின் பலம் 108.

அதிமுக எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ள 6 பேரும், அதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது; அல்லது தவெகவிலிருந்தோ தவெக விரும்புகிற வேறு பிரபலங்களோ வேட்பாளர்களாக அல்லது இடைத்தேர்தலில் திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளிலும் தவெக வென்றால் அக்கட்சியின் பலம் 115 ஆக உயரும்.

மீதமுள்ள 3 இடங்களைப் பெறுவதற்கான காய்களை தவெக நகர்த்தி வருகின்றது.

இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, அடுத்தடுத்த நாள்களில் சி.வி. சண்முகம் உள்ளிட்ட மேலும் சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்யும்பட்சத்தில் அந்த தொகுதிகளுக்கும் சேர்த்துத் தேர்தல் அறிவிக்கப்படும்.

ஆகையால், தனிப்பெரும்பான்மைக்கு அருகில் தவெக வந்துவிட்டது. இனிவரும் தடைகளையும் தகர்த்து இடைத்தேர்தலில் ’வொயிட் வாஷ்’ செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளது விஜய்யின் தவெக!

Summary

TVK eyes an absolute majority - Chief Minister-to-be Vijay's master plan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.