சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிசயமே அசந்து போகும் டாப் 7 பொறியியல் அதிசயங்கள்! ஊழலுக்கான ஆதாரங்களும்!

நாட்டில் ஊழலுக்கும் பொறியியல் கோளாறுகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் ஏழு மேம்பாலங்கள் பற்றிய தகவல்கள்.

News image
Updated On :12 மார்ச் 2026, 7:48 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாடு முழுவதும் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பொதுப் பணித் துறையின் முக்கிய திட்டங்களில் மேம்பாலங்களுக்கே முதலிடம். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்படும் மேம்பாலங்கள் சில நேரங்களில் பொறியியல் குறைபாடுகளால் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து சிறப்பு கவனம் பெற்று விடுகிறது.

இவை பொறியியல் திட்டக் குறைபாட்டுக்கு மட்டுமல்லாமல், ஊழலுக்கும் சாட்சியாகிறது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அஷ்பாக் ரயில் நிலையத்துக்கு மேலே அமைக்கப்பட்டிருந்த 118 - 119 கோணத்தில் திரும்பும் மேம்பாலம் கடும் விமர்சனங்களுடன் மக்களின் கவனத்தைப் பெற்றிருந்தது.

நாட்டின் இதுபோன்ற பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளில் நடக்கும் ஊழல், பொறியியல் துறையின் கவனக்குறைவு, தரக்குறைவு, வடிவமைப்பு போன்றவற்றுக்கு உதாரணமாக நாடு முழுவதும் ஏழு மேம்பாலங்கள் அமைந்திருக்கின்றன. கவனத்துக்கு வராமல் இன்னும் எத்தனை மேம்பாலங்கள் உள்ளன என்று உறுதியாக சொல்ல முடியாது.

போபல் 118 கோண மேம்பாலம் - பயன்படுத்த வசதி இல்லாத, மிகவும் ஆபத்துக்குரிய வளைவுவுடன் மேம்பாலம் என்றுகூட சொல்ல முடியாத, கூர்மையான திருப்புமுனையைக் கொண்ட இந்த மேம்பாலம் உயர் நீதிமன்றம் வரை சென்றது. வடிவமைப்பில் தொடர்ந்து மாறுதல்களை சந்தித்து வருகிறது.

போபால் மேம்பாலம்

போபால் மேம்பாலம்

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் பகுதியில் சூரத்கர் அனல் மின் நிலையத்தை இணைக்கும் வகையில் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் பேசுபொருளாகியிருந்தது. காரணம், இந்த மேம்பாலத்தை கட்டி முடிக்க கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதெல்லாம் சரி.. மேம்பாலம் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த ஒரே மாதத்தில், ஜல்லிகள் சல்லி சல்லியாக விழ, பாலத்தை இணைக்கும் இரும்புக் கம்பிகள், துணிக் காயப்போடும் கொடி போல வெளியே தெரிய ஆரம்பித்ததைப் பார்த்த மக்கள் பலரும் கதிகலங்கிப் போனார்கள்.

இது தொடர்பான விடியோக்கள் வெளியாக, மேம்பாலத்தை சோதித்த அரசு அதிகாரிகள் தரக்குறைவான பொருள்களால் மேம்பாலம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தது

பிகார் மணிக்கூண்டு

பிகார் மணிக்கூண்டு

மணி காட்டாத மணிக்கூண்டு - பிகார் மாநிலத்தில் ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட மணிக்கூண்டு, திறக்கப்பட்ட மறுநாளே கடிகாரம் மணி காட்டாமல், எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பதைக் காட்டும் வகையில் நின்றுபோனது. மணிக்கூண்டு பார்க்க பளபளவென இல்லாமல், வெள்ளை பெயிண்டு அடித்து மூடப்பட்டு, பார்ப்பவர்கள் பல் இளிக்கும் வகையில் இருந்ததும் பேசுபொருளாகியிருந்தது.

இதனைப் பார்த்த மக்கள், இந்த அதிசய கட்டுமானத்துக்கு வெறும் 40 லட்சம் ரூபாய்தானா? ரூ.40 லட்சத்தில் இப்படி ஒரு அதிசயமா என வியந்து கருத்துகளை பதிவிட்டிருந்தார்கள்.

சட்டென மாறும் சாலை - வாகன ஓட்டிகள் இதிலிருந்து தப்பவே முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப, மும்பையின் மிரா பயந்தர் மேம்பாலம் பலருக்கும் பார்க்கும்போதே ஒரு மிரட்டலைக் கொடுத்திருக்கும். நான்கு வழிச் சாலைகள் திடீரென ஓரிடத்தில் முடிந்து இரண்டு வழிச்சாலையாக மாறியிருக்கும். இந்த மேம்பாலத்தைப் பார்க்கும்போதே பதற்றம் தொட்டிக்கொள்கிறது. இதெல்லாம் ஒரு பொறியியல் நிபுணர்கள் வடிவமைத்து பல கோடி செலவிட்டு கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வருவதற்குத் தயாராக இருந்த மேம்பாலம். விடியோ வைரலாகாவிட்டால் பிப்ரவரியில் திறக்கப்பட்டிருக்கலாம் என்பது தகவல்.

இது தொடர்பான விடியோக்கள் வெளியாகி பலரின் புருவங்களும் தலையை தாண்டி தூக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தில், நான்கு வழிச் சாலை திடீரென இரண்டு வழிச் சாலையாக மாறுவது திட்டக் குறைபாடு அல்ல. சாலை அமைக்க இருந்த இடத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதனை விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்று முட்டுக்கொடுக்கப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது.

மிரா பயந்தர் மேம்பாலம்

மிரா பயந்தர் மேம்பாலம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் கிருஷ்ணாநகர் - கேசரிகேடா மேம்பாலம் ஒன்று கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. காரணம், அந்த மேம்பாலம் கட்டப்பட்டு வந்தபோது, ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகில் போய் நின்றுகொண்டிருந்தது. அடுக்குமாடிக் கட்டடம் இடிக்கப்படுமா? அல்லது அதன் வழியாகவே இந்த மேம்பாலம் கட்டப்படுமா என்று பலரும் வியந்து பார்த்தனர். எட்டாவது உலக அதிகம் என்று கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இது ரூ.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டதாம்.

மேம்பாலம்

மேம்பாலம்

மணிமகுடமாக நிற்கும் பிகார் பாலம் - மற்ற பாலங்களாவது இதற்காகக் கட்டப்பட்டது என்று சொல்லலாம், ஆனால், பிகார் மாநிலம் அராரியாவில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட பாலம் ஒன்று, வயல்வெளிக்கு நடுவே, எந்த சாலையையும் ஆற்றங்கரைகளையும் இணைக்காமல் பார்க்காமல் கட்டப்பட்டிருந்தது.

பரமனந்த்பூர் கிராமத்தில், பிரதமரின் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டதாகவும், நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளால் பாலம் கட்டி முடிக்கப்படாமல் நின்றுபோனதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் கண்ட் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ரூ.2 கோடி செலவானதாகக் கணக்கு வெளியானபோது, மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

கீழே படிகட்டுகள், மேலே வெறும் கூரையைக் கொண்ட இந்த சாதாரண கட்டமைப்புக்கு ரூ.2 கோடி செலவானதா என்ற கேள்விக்கு, உயர்தரமான பொருள்கள் பயன்படுத்தப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் கட்டப்பட்டதால் செலவு அதிகமானதாக அதிகாரிகள் விளக்கம் கொடுத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.