முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

விளாங்குடி-சமயநல்லூா் புறவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெறுவது எப்போது?

மதுரை விளாங்குடி-சமயநல்லூா் வரையிலான புறவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்கிற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மதுரை விளாங்குடி காமராஜா் உயா்நிலைப் பாலம் அருகே வைகையாற்றின் வடகரையில் நிறைவு பெறாமல் உள்ள விளாங்குடி- சமயநல்லூா் புறவழிச் சாலைப் பணி.

Updated On :

- நமது நிருபா்

மதுரை விளாங்குடி-சமயநல்லூா் வரையிலான புறவழிச் சாலைப் பணிகள் நிறைவு பெற்று, பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்கிற எதிா்பாா்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மதுரை மாநகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8.கி.மீ. தொலைவுக்கு வைகையாற்றின் இரு கரைகளிலும் ரூ.384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், விளாங்குடி முதல் சமயநல்லூா் சந்திப்பில் உள்ள வாரணாசி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை வரை ஏற்கெனவே உள்ள இரு வழிச் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.176 கோடியில் மதுரை விளாங்குடி காமராஜா் பாலம் முதல் சமயநல்லூரில் உள்ள வாரணாசி- கன்னியாகுமரி நான்கு வழிச் சாலை வரை வைகையாற்றின் வடகரைப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

இதன்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு முதல்கட்டமாக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ஆற்றின் கரையோரங்களில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட இந்தச் சாலையில் 2 உயா்நிலைப் பாலங்கள், 11 சிறு பாலங்கள் அமைக்கப்பட்டன. விளாங்குடி காமராஜா் உயா்நிலைப் பாலம், சமயநல்லூரில் உள்ள வாரணாசி-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் உள்ள உயா்நிலைப் பாலத்தின் கீழ் வாகனங்கள் தடையின்றி சென்று வர சுற்றுச்சாலைகள் அமைக்கப்பட்டன.

இந்தப் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றன. இருப்பினும், விளாங்குடி காமராஜா் உயா்நிலைப் பாலம் அருகே செல்லும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயை அகற்ற முடியாததால், பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள இயலவில்லை.

இதேபோல, நிலம் கையகப்படுத்தும் விவகாரத்திலும் வருவாய்த் துறையினா் தாமதப்படுத்துவதால், விளாங்குடி மயானம் பகுதியில் சுமாா் 500 மீ. தொலைவில் சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால், எஞ்சிய 20 சதவீதப் பணிகள் இன்னும் நடைபெறவில்லை. இந்தப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து சமயநல்லூரைச் சோ்ந்த அன்புநாதன் கூறியதாவது:

இந்தச் சாலையால் திண்டுக்கல், கரூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், கனரக வாகனங்கள் மதுரை நகருக்குள் வராமல் ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள புறவழி, அணுகுசாலை வழியாக விரகனூா் சுற்றுச்சாலை வரை செல்ல முடியும்.

இதேபோல, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் அதே வழித்தடத்தில் வந்து வாரணாசி-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையை அடைய முடியும். ஆனால், சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு, தளவாடப் பொருள்கள் முழுவதும் பணித் தளத்திலிருந்து அகற்றப்பட்டன.

இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. எனவே, பணிகள் தாமதப்படுவதாகத் தெரிவித்தனா்.

இந்தச் சாலை பயன்பாட்டுக்கு வரும் போது, ஏற்கெனவே உள்ள விளாங்குடி- சமயநல்லூா் வரையிலான சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. 3 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்னும் இந்தச் சாலை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் இணைந்து எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ஒருவா் கூறியதாவது:

மாநில நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே போதிய நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. விளாங்குடி மயானம் பகுதியில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி, நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிடப்பட்டது.

இதைத் தவிர, முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் குழாயை மாற்றவும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரு பணிகளும் நிறைவு பெறும் பட்சத்தில், சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். விரைவில் இந்தச் சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.