
வறுமையால் படிப்பை கைவிட்டவர்களை பட்டதாரிகளாக்கும் ஒசூர் அறக்கட்டளை!
வறுமையால் படிப்பை கைவிட்டவர்களை பட்டதாரிகளாக்கும் ஒசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அமைப்பு பற்றி...

உயர்கல்வி நிதி வழங்கும் விழாவில் நிதியுதவி வழங்கும் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அமைப்பினர். - Dinamani
ஒசூர்: பள்ளி கல்வியோடு முடங்கும் மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வி படிக்க வைக்க பொருளாதார ரீதியாக உதவி செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை நேரில் கண்டு மகிழ்ச்சி அடைந்து வரும் ஒசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை வெளியில் தெரியாத அற்புதம். பிப்ரவரி 6,2024-ல் அகிலா, கிருஷ்ணமூர்த்தி, தேவிசோனா, முருகேசன், கோபி, செல்வமுத்துகுமார் ஆகிய 6 நபர்கள் ஒசூரை தலைமையிடாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்பு. இன்று 520 நபர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள்.
பள்ளிப் படிப்பை முடிக்க முடியாத நிலையில் இருந்த மாலாஸ்ரீ இன்று பட்டதாரி ஆசிரியர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வட்டங்கள் மலையும், மலைசார்ந்த பகுதி. இந்தப் பகுதியில் பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியுடன் (10ஆம் வகுப்பு) நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைப்பது வழக்கான ஒன்று. அதேபோன்று தேன்கனிக்கோட்டை வட்டம் கல்கேரி கிராமத்தைச் சேர்ந்த மாலாஸ்ரீ. 2010 ல் அவர் 10 ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்து முடித்தவுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் கூலி வேலை செய்து வந்த அவரது தாய். தந்தை ஏற்கெனவே உயிரிழந்தவிட்டார். 10 ஆம் வகுப்பில் 477 மதிப்பெண் பெற்ற மாலாஸ்ரீக்கு உயர்கல்வி படிக்க ஆசை. ஆனால், வீட்டில் திருமண ஏற்பாடு செய்ததை அறிந்த மாலாஸ்ரீ அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாலாஸ்ரீயை மீட்டு, உரிய முறையில் சிகிக்சை அளித்து அவருக்கு ஆலோசனை கொடுத்து உயர் கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தாங்கள் செய்வதாக கூறி ஒசூர் வித் யூ கல்வி சமூக அறக்கட்டளை நம்பிக்கை கொடுத்தனர்.

மாலா ஸ்ரீ
மதகொண்டப்பள்ளியில் பிளஸ் 2 படித்து 1,028 மதிப்பெண் பெற்றார். பிளஸ் 2 முடித்துவுடன் தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3 ஆண்டுகள் பிஎஸ்சி தாவரவியல் படித்த அவருக்கு வித் யூ கல்வி அறக்கட்டளை உடனிருந்து உணவு, உடை, தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தது. 85 சதவிகித மதிப்பெண் பெற்று பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னை லேடி வில்லிங்டன் அரசு கல்லூரியில் பி.எட் படிப்பை படிப்பதற்கும் வித் யு கல்வி அறக்கட்டளை அனைத்து உதவிகளை செய்தனர்.
இதுகுறித்து மாலா ஸ்ரீ பேசுகையில், “நான் இன்று தேன்கனிக்கோட்டை ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியராக உள்ளேன் என்றால் அதற்கு வித் யூ கல்வி அறக்கட்டளைதான். எனக்கு திருமணம் முடிந்த கணவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். பள்ளி படிப்பையே முடிக்க முடியாத நிலையில் இருந்த எண்ணை பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக உயர்ந்த நிலைக்கு அழைத்து வந்ததை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் இன்று வித் யூ கல்வி அறக்கட்டளையின் உறுப்பினராக இருப்பதில் பெருமை அடைகின்றேன்” என்றார்.
பொறியாளர் அவினாஷ்
மத்திகிரியைச் சேர்ந்த அவினாஷ் இன்று சென்னையில் தரகட்டுப்பாட்டு பொறியாளர் ஆனது வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையினால்.
ஒசூரில் அதிக தொழில்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் ஒவ்வொரு தொழிற்சாலைக்கு செல்வது வழக்கம். அந்த பேருந்துகளில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தவர் அவினாஷின் தந்தை. தாய் வீட்டில் டெய்லரிங் செய்து வந்தார். ஒசூர் முல்லை நகரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 முடித்த அவினாஷின் எதிர்காலம் இருட்டாக இருந்தது. கல்லூரிக்குச் சென்று படிக்க பணம் இல்லை. கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த நிலையில் அவரது ஆங்கில ஆசிரியர் மூலம் தகவல் கிடைத்தது. வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையை அணுகினால் நீ உயர்கல்வி படிக்கலாம் என கூறினார். நேராக சென்று உதவியை பெற்று தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.இ. படித்து முடித்து சென்னை மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தரக்கட்டுபாட்டு பொறியாளராக பணியில் நல்ல சம்பளத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இவர்களைப் போன்று பிரியாகுமாரி, செல்வகுமார், லோகேஷ்வரி உள்ளிட்ட 630 மாணவர்களுக்கு உதவிகள் கிடைத்துள்ளது.

அவினாஷ்
இப்படி உண்மையில் யார் யாருக்கு தேவை உள்ளது என்பதை அறிந்து அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி செய்து வரும் இந்த அறக்கட்டளை தங்களது உறுப்பினர்களிடம் இருந்து மாத, மாதம் ரூ. 200 பெற்று அதில் இருந்து கிடைக்கும் நிதியில் இருந்து மாணவர்களின் படிக்கான செலவை செய்து வருகிறது. இந்த வித் யூ அறக்கட்டளையால், இதுவரை 6 இளநிலை பட்டதாரிகள், 10 முதுநிலை பட்டதாரிகள், 15 பொறியியல் பட்டதாரிகள், 15 மருத்துவர்கள் உள்பட 630 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த மாதம் ஆக. 25-ல் ரூ. 4.59 லட்சம் நிதியை 33 மாணவர்களின் படிப்புக்காக வித் யூ வழங்கியது. மேலும் வர்தா புயல், கஜா புயல் புயல், வெள்ளம், கரோனா போன்ற பேரிடர் காலங்களில் நேரடியாக சென்று மக்களுக்கு உதவிகளை செய்து வருவதுடன் வித் யூ அறக்கட்டளை செய்து வருகின்றது.
மேலும், மரம் நசுதல், மியா வாக்கி காடுகளை உருவாக்குதல், நெகிழி விழிப்புணர்வு, விதைப்பந்து தயாரித்து வனப்பகுதியில் இயற்கை சூழலை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை வாரத்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வருகின்றனர்.
Summary
A Hosur-based trust is turning school dropouts—forced to quit due to poverty—into graduates!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






