வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!தவெகவின் நிலைப்பாட்டைப் பொருத்து அரசுக்கு ஆதரவு தொடரும்! பெ. சண்முகம் பேட்டிதிருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!

மூலிகை நாப்கின் தயாரிப்பில் தனித்துவத்துடன் விளங்கும் விழுப்புரம் பெண்!

மூலிகை நாப்கின் தயாரித்து வரும் தொழில்முனைவோர் ரேணுகா கார்த்திகேயன் பற்றி...

renuga karthikeyan

ரேணுகா கார்த்திகேயன் - தினமணி

Published On :

விழுப்புரம் மாவட்டத்தில் மூலிகை நாப்கின் தயாரிப்புத் தொழில் தொடங்கி இன்று சிறந்த தொழில்முனைவோராக ரேணுகா கார்த்திகேயன் உருவாகியுள்ளார்.

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அப்படிப்பட்ட மகளிரின் வாழ்க்கை போராட்டக்களம் மிகுந்தது. சாதனைகள் பல நிகழ்த்தினாலும், வேதனைகளையும் அவர்கள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகளிர் மாதந்தோறும் மாதவிடாய்க் காலங்களில் அனுபவிக்கும் வேதனைகள் ஏராளம்.

இயற்கையாக மகளிருக்கு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் செயல்பாடாக இந்த மாதவிடாய்க் காலம் இருந்தாலும், குறைந்தது 3 முதல் 5 நாள்கள் வரை அவர்கள் படும்பாடு சொல்லி மாள முடியாது. பருவம் எய்த தொடங்கிய காலம் முதல் மாதவிடாய் நிற்கும் வரை இவர்கள் இந்த வேதனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

முன்பெல்லாம் மாதவிடாய்க் காலம் என்றால் வீட்டுக்குள் மகளிரை அனுமதிக்காமல், வீட்டுக்கே வெளியே அவர்களை இருக்க செய்து, உணவு முதல் அனைத்தையும் வழங்குவர். 3 நாள்கள் அல்லது 5 நாள்கள் கழித்துத்தான் அவர்களை வீட்டுக்குள் பெரியோர் அனுமதிப்பர். ஆனால், இன்றைய நிலை அப்படியில்லை. இன்றைய வளர்ச்சியடைந்த காலத்தில் பணிக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் என அனைவரும் மாதவிடாய்க் காலத்தை வழக்கமான நாள்களில் ஒன்றாகவே கருதுகின்றனர். வயிற்று வலி போன்ற உபாதைகள் இருந்தாலும், அதையும் தாங்கிக் கொண்டுதான் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இன்றைய நிலையில் மாதவிடாய்க் காலத்தில் மகளிர் பயன்படுத்தும் நாப்கின் (அணையாடை) பல்வேறு பெயர்களில் பல்வேறு அளவுகளில் அவர்களுக்கேற்ற வகையில் விற்பனைக்கு வருகின்றன. ஆனால், அவ்வாறு விற்பனைக்கு வரும் நாப்கின்கள், வேதிப்பொருள்கள் கலந்து இருப்பதால் பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இதனால் மகளிர் பலவித பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே மூலிகை நாப்கினை பயன்படுத்துவதால் எந்தவித பாதிப்பும் இல்லை, பாதுகாப்பானது எனக் கூறி, அதன் தயாரிப்பில் தனித்துவம் பெற்று விளங்குகிறார் விழுப்புரம் மாவட்டம், வளவனூர் நல்லரசன்பேட்டையைச் சேர்ந்த 37 வயது பெண் ரேணுகா கார்த்திகேயன்.

Story image

மூலிகை நாப்கின் தயாரிப்புத் தொழில் தொடங்கி இன்று சிறந்த தொழில்முனைவோராக மாறியிருக்கும் ரேணுகாவின் வாழ்க்கை சற்று வித்தியாசமானதுதான். மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் படிப்பை ( மெடிக்கல் லேப் டெக்னீசியன்) முடித்த ரேணுகாவுக்கு, திருமணம் நடைபெற்று குழந்தைபேறு என்ற நிலையை அடைய உடலியல் சார்ந்த பல்வேறு சிக்கல்கள் காரணமாக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மகளிருக்கு உடலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு சந்தையில் கிடைக்கும் வேதிப்பொருள்கள் கலந்த நாப்கின்களும் (மாதவிடாய்க் கால அணையாடை) ஒரு முக்கிய காரணம் என்பதை உணர்ந்த ரேணுகா, தான் அனுபவித்த வேதனை தனது மகளுக்காக, பிற மகளிருக்கோ ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மூலிகை கலந்த நாப்கின் தயாரித்தால் என்ன என்று திட்டமிட்டு, அதை செயல்படுத்தி, இன்று மிகச்சிறந்த தொழில்முனைவோராக மாறியிருக்கிறார்.

இதுதொடர்பாக ரேணுகாவுடன் நாம் கலந்துரையாடிய போது, அவர் மேலும் கூறியது:

மகளிருக்கு உடல் இயக்க ரீதியாக கழிவுகளை வெளியேற்றும் காலமாக மாதவிடாய்க் காலம் இருந்தாலும், ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வேதனை சொல்லி மாளாது. மாதவிடாய்க் காலத்தில் மகளிர் பயன்படுத்தும் நாப்கின் தற்போது வேதிப்பொருள்கள் கலந்து இருப்பதால், பலருக்கும் பல்வேறுவிதமான உடலியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.

எனவே நாம் ஏன் மூலிகைப் பொருள்களைக் கொண்டு நாப்கினை தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது. என்னுடைய எண்ணத்தை எனது கணவர் கார்த்திகேயன் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோரும் எடுத்துக் கூறி, அவர்களின் ஒப்புதலைப் பெற்றேன். இதைத் தொடர்ந்து கடந்த 2019 - 20ஆம் ஆண்டிலேயே இதற்கான திட்டமிடல்களைத் தொடங்கி, அதன் பின்னர் உற்பத்தியைத் தொடங்கினோம்.

Story image

என்னுடைய திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த எனது தோழி, இந்த தொழில் தொடங்குவதற்கு நிதியுதவி அளித்து, நாங்கள் இருவரும் சேர்ந்து ரூ. 25 லட்சம் முதலீட்டில் மூலிகைப் பொருள்கள் கலந்த நாப்கின் தயாரிப்பைத் தொடங்கினோம். நாங்கள் தயாரிக்கும் மூலிகை நாப்கின் சர்ஜிக்கல் காட்டன், ஓவன் சீட் ஆகியவற்றையும், தமிழர்களின் பாரம்பரிய வேப்ப இலை, சோற்றுக் கற்றாழை, மலைவேம்பு, துளசி, மஞ்சள் ஆகிய ஐந்தும் கலந்த பொடி கொண்டு தயாராகிறது.

வேப்ப இலை, மலை வேம்பு கிருமிநாசினியாக செயல்பட்டு, தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. துளசி, மஞ்சள் அழற்சி எதிர்ப்பு குணங்களுடன் சருமத்துக்கு எரிச்சல் ஏற்படாமல் தடுக்கிறது. சோற்றுக் கற்றாழை உடலுக்கு குளிர்ச்சியையும், பயன்படுத்தும் போது மென்மைத் தன்மையும் தருகிறது. இவை அனைத்தும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. மூலிகை நாப்கினுக்கு பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் மருத்துவர்களின் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு, அதன் பின்னரே நாங்கள் பயன்படுத்துகிறோம்.

மாதத்துக்கு 6 ஆயிரம் நாப்கின்கள் தயாரிப்பு: வாரத்துக்கு 1500 நாப்கின்கள் வீதம் மாதத்துக்கு 6 ஆயிரம் மூலிகை நாப்கின்களை நாங்கள் தயாரித்து வருகிறோம். எக்ஸ்எல், எக்ஸ்எக்ஸ்எல் என்ற இரண்டு அளவுகளில் மூலிகை நாப்கின்கள் தயாரித்து வழங்கி வருகிறோம். 6 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட் எக்ஸ்எல் பிரிவில் ரூ. 130 என்ற விலையிலும், எக்ஸ்எக்ஸ்எல் பிரிவில் ரூ. 150 என்ற விலையிலும் விற்பனை செய்கிறோம். இதைத் தவிர 77 நாப்கின்கள் கொண்ட பாக்கெட் ரூ. 1000 என்ற விலையில் விற்பனை செய்கிறோம்.

வெளி மாநிலங்களிலும் விற்பனை: விழுப்புரம் நகரம், வளவனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நாப்கின்களை கேட்டால் அவர்கள் இருப்பிடப் பகுதிக்குச் சென்று நாங்கள் நேரடியாக வழங்கி வருகிறோம். மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தூதஞ்சல் (கூரியர்) மூலம் நாப்கின்களை அனுப்பி வைக்கிறோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்லாது, கர்நாடக மாநிலம், பெங்களூரு, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கும் மூலிகை நாப்கின்களை அதிகளவில் அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தற்போதயை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இணையவழி விற்பனையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

Story image

சுயசார்புடன் வாழ வழிகை செய்யும் தொழில்: இந்த தொழிலைத் தொடங்க ஊக்கமளித்த எனது கணவரை இழந்துவிட்டேன். இருந்தாலும் எனது 14 வயது மகன், 12 வயது மகளுடன் வசித்து வரும் நான், இந்த மூலிகை நாப்கின் தயாரிப்புத் தொழில் மூலம் குறிப்பிட்ட தகுந்த அளவில் மாதந்தோறும் வருவாயை ஈட்டி வருகிறேன். எனக்கு கிடைக்கும் இந்த வருமானம் நான் சுயசார்புடன் வாழ்வதற்கு மிகுந்த உதவியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது இயற்கையான முறையில் மூலிகைப் பொருள்களைக் கொண்டு நாங்கள் தயாரிக்கும் நாப்கின்கள், மகளிருக்கு மாதவிடாய்க் காலப் பிரச்னைகளைக் குறைப்பதுடன், அவர்களுக்கு தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்குகிறது என்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்கிறார் ரேணுகா கார்த்திகேயன்.

மூலிகைப் பொருள்கள் கலந்த நாப்கின்கள் தயாரிப்பு மட்டுமல்லாது, முளைக்கட்டிய கருப்பு உளுந்துகளி சத்து சாவு, சத்துமாவு, மூலிகை டீ பவுடர் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறோம். இதற்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம், திறமை உண்டு. அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் வாழ்வில் வெற்றியை விரைந்து பெறலாம். முதலில் குடும்பத்தினர் நம்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். குடும்பத்தினர் ஒத்துழைப்பு இருந்தால் அனைத்தும் சாத்தியமே என்கிறார் ரேணுகா.

Summary

A woman from Villupuram stands out for her unique herbal napkin manufacturing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.