திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட நினைக்கிறதா மத்திய அரசு? 

தலைமைச் செயலகத்தில் நடத்தப் பட்ட இந்த திடீர் சோதனையானது; திராவிடக் கட்சிகளை ஒழித்து விட நினைக்கும் பாஜக முயற்சிகளின் அடுத்தடுத்த படிநிலைகளாகத் தான் ஒவ்வொன்றாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன
திராவிடக் கட்சிகளை ஒழித்துக் கட்ட நினைக்கிறதா மத்திய அரசு? 
Updated on
3 min read

நள்ளிரவு கலந்துரையாடல்களில் இவர்கள் பேசித் தீர்ப்பது எதை?

எல்லா தனியார் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களிலும் கலந்துரையாடல், விமர்ச்சனம், நேர்காணல் என்ற வகையில் நான்கைந்து பேரை விருந்தினர்களாக அழைத்து உட்கார வைத்துப் பேசித் தீர்த்துக் கொண்டே இருக்கிறார்கள். 

இதைக் காணும் பார்வையாளர்களுக்கு அவர்களது பேச்சினால் குழப்பம் தீர்கிறதா? என்றால் அது தான் இல்லை. மேலும், மேலும் குழப்பம் மிஞ்சும் நிலை தான் நீடிக்கிறது.

நேற்று தமிழகத் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டிலும், அலுவலகத்திலும், தமிழக தலைமைச் செயலக அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கற்ற ஆவணங்களை கைப்பற்றிச் சென்றதாக கூறப்பட்டது.

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், ஓய்வு பெற்ற முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன், அரசியல் விமரிசகர் சுமந்த் சி ராமன், அதிமுக சார்பில் செல்வராஜ்.

இதில் செல்வராஜ் முன் வைத்த கேள்வி; 

தலைமைச் செயலாளரது வீடு, மற்றும் அலுவலகத்தில் சோதனை இட்டது தவறில்லை. ஆனால் மாநில அரசின் வரம்புகளுக்கு உட்பட்ட, அதன் ரகசிய ஆவணங்களும், கோப்புகளும் காக்கப் படும் இடமான தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி அரசின் சில கோப்புகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்ற செயலானது, மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு வலுக்கட்டாயமாக தலையிட்டதாக ஆகாதா? மேலும் தலைமைச் செயலகத்தில் சோதனைக்கு துணை ராணுவம் ஏன் அழைக்கப் பட வேண்டும். மத்திய அரசு ராணுவத்தைக் காட்டி மாநில அரசுகளை மிரட்டப் பார்க்கிறதா? அல்லது திடீரென்று நடத்தப் பட்ட இம்மாதிரியான சோதனைகளில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதோ! என்று கேள்வியெழுப்பினார்.

அவரது கேள்விக்கு மறுத்துப் பதில் சொன்ன வானதி ஸ்ரீநிவாசன்;

இது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக நாடு முழுதும் நிகழ்த்தப் படும் வருமான வரிச் சோதனைகளின் ஒரு பகுதியே தவிர,  இதற்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுத்துப் பேச அவசியமில்லை. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் வருமான வரித்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டால் நிச்சயமாக சோதனைக்கு உள்ளாவார்கள். மேலும் மாநில காவல்துறை என்பது தலைமைச் செயலாளரின் வரம்புக்கு உட்பட்ட அமைப்பு என்பதால் சட்டம், ஒழுங்கு அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டே துணை ராணுவம் அழைக்கப் பட்டதே தவிர இதில் அரசியல் உள்நோக்கம் என்று எதுவுமில்லை என்று கூறினார்.

அரசியல் விமரிசகர் சுமந்த் சி ராமன், மத்திய அரசு துணை ராணுவத்தை அனுப்பும் முன்பு மாநிலத் தலைமையிடம் அனுமது பெறுவது தான் முறை என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி ரகோத்தமன், தங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட வரும் போது அவர்கள் யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தமிழகத்தைப் பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர் தலைமைச் செயலர். அவரது அதிகாரத்தின் கீழ் இயங்கக் கூடியது தமிழகக் காவல்துறை. தனக்குக் கீழ் இயங்கக் கூடிய ஒரு அமைப்பிடம் அவரது அதிகாரம் செல்லுபடியாக வாய்ப்பிருப்பதால் துணை ராணுவம் அழைக்கப் பட்டதில் தவறில்லை. என்றார்.

அப்போது கலந்துரையாடலை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நெறியாளர் அசோக வர்ஷிணி,  குற்றம் சாட்டப்பட்டது மாநில அரசின் உயர் அதிகாரி என்பதால் மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட துணை ராணுவம் அழைக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், இதே விதமான புகாரின் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு எழுமானால் அப்போது மத்திய அரசு யாரை உதவிக்கு அழைத்துக் கொள்ளும்? ஏனெனில் ராணுவம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது தானே! அப்போது மட்டும் அதிகார துஷ்பிரயோகம் நிகழ வாய்ப்பில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்விக்கு பொருத்தமான பதில் கிடைப்பதற்குள் கலந்துரையாடலின் போக்கு, வேறு திசைக்கு மாறி விட்டது.

வானதி ஸ்ரீனிவாசன் இந்த சோதனைகளின் ஒரே முகாந்திரம் ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிப்பது மட்டுமே என்றார். 

செல்வராஜ் இந்த திடீர் சோதனைக்கு காரணம், அதிலும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடத்தப் பட்ட சோதனையில் மத்திய அரசின் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்றார்.

கடைசியாக ரகோத்தமன் சொன்ன பதிலில் சிறிது நிஜம் இருந்தது, யாரிடம், எப்போது சோதனை நடத்த வேண்டும்? என்பதை தீர்மானிப்பது மத்திய அரசின் கையில் இருக்கிறது. நிச்சயம் ஒரு மாநில அரசின் தலைமை பொறுப்பில் இருக்கும் உயர் மட்ட அதிகாரியின் வீட்டிலும், அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் திடீரென சோதனை நடத்தப் பட்டதில் மத்திய அரசின் நோக்கம் என்னவாக இருக்கும் என இப்போது அனுமானிக்க முடியாவிட்டாலும் நிச்சயம் அவர்களது அனுமதியின் பேரிலும், உத்திரவின் பேரிலும் தான் இது நிகழ்ந்திருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. இதை நாடு முழுதும் நிகழ்த்தப் படும் ஊழலுக்கெதிரான நிகழ்வு மட்டுமே என்று மட்டும் ஒதுக்கி விட முடியாது. என்றார்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த ஒரு கருத்து மாறுதலும் இல்லை. ஆனால் குற்றம் சாட்டப் பட்டவரது வீட்டையும், உறவினர் வீடுகளையும் தாண்டி, சோதனைகள் தமிழக அரசின் தலைமைச் செயலகம் வரை நீண்டு அரசின் ஏராளமான கோப்புகள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப் பட்டது தான் மக்கள் மனதில் சந்தேகத்தை விதைக்கிறது.  இப்போது மக்களிடம் உலவும் பல்வேறு கேள்விகளில்;

மத்தியில் ஆளும் பாஜக, தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை ஒழித்து விடும் உத்வேகத்தின் முதல்படியாக தமிழக அரசை மிரட்டிப் பார்க்கிறதா? 

அல்லது பாஜக தமிழகத்தில் வேரூன்றிக் கொள்ள எடுத்துக் வைக்கப் பட்ட ஹீரோயிஸ முயற்சியில் இதுவும் ஒன்றா?

இந்தியா முழுதும் மாநில அரசுகளின் அதிகார வரம்பில் மத்திய அரசு சர்வாதிகாரத் தனத்துடன் மூக்கை நுழைக்கும் முயற்சியின் மோசமான ஆரம்பமா இது?

எது எப்படி இருப்பினும் சாதாரண மக்களின் பார்வையில்;  தலைமைச் செயலகத்தில் நடத்தப் பட்ட இந்த திடீர் சோதனையானது; திராவிடக் கட்சிகளை ஒழித்து விட நினைக்கும் பாஜக முயற்சிகளின் அடுத்தடுத்த படிநிலைகளாகத் தான் ஒவ்வொன்றாக அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதாகவே இருக்கிறது. 

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com