ஹிந்தி நடிகர் வினோத் கன்னா நலமுடன் இருக்கிறார்!

கடந்த வாரத்தில் மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆன அவரது கவலைக்கிடமான புகைப்படம் ஒன்று இணையத்தில்  வெளியாகி ‘வினோத் கன்னா’ மறைந்து விட்டார் எனும் ரீதியில் படு வைரலாகி விட்டது.
ஹிந்தி நடிகர் வினோத் கன்னா நலமுடன் இருக்கிறார்!
Updated on
2 min read

80 களின் தூர்தர்ஷன் விளம்பர ரசிகர்கள் எவரேனும் இருக்கிறீர்களா? ரமாயணமோ, மகாபாரதமோ எதுவானாலும் முழுதாக ஓடி முடிக்கும் சில விளம்பரங்களுக்குப் பிறகு தான் நம்மால் காண முடியும். இன்றைப்போலவே அன்றும் விளம்பரங்களை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருந்தது. அப்படி மக்களால் அதிகம் ரசிக்கப் பட்ட விளம்பரங்களில் இந்தி நடிகர் வினோத் கன்னா நடித்த சிந்த்தால் சோப் விளம்பரமும் ஒன்று. கடற்கரையோரம் ஓடும் குதிரையைக் கையால் பற்றியவாறு ஓடி வந்து அதில் வெற்றிகரமாகத் தொற்றி ஏறும் வினோத் கன்னாவின் தன்னம்பிக்கைக்கு சிந்த்தால் சோப் தான் காரணம் என்று அந்த விளம்பரம் கூறும். விளம்பரத்தால் சோப் வியாபாரம் கூடியதோ என்னவோ! ஆனால் தென்னிந்தியாவிலும் கணிசமாக வினோத் கன்னாவுக்கு ரசிகர்கள் கூடினார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இப்போது எதற்கு அந்தக் கதை என்றால்? அன்று விளம்பரத்தில் ஆணழகனாக கண்டு ரசித்த வினோத் கன்னாவுக்கு இன்று வயது 70.

கடந்த வாரத்தில் மும்பை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அட்மிட் ஆன அவரது கவலைக்கிடமான புகைப்படம் ஒன்று இணையத்தில்  வெளியாகி ‘வினோத் கன்னா’ மறைந்து விட்டார் எனும் ரீதியில் படு வைரலாகி விட்டது. வினோத் கன்னா நடிகர் மட்டுமல்ல பாஜக எம் பியும் கூட என்பதால் மேகாலயா மாநில பாஜக அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் அன்னாரது மறைவுக்காக 2 நிமிடங்கள் மெளன அஞ்சலி வேறு செலுத்தி இருக்கிறார்கள். ஆனால் பிறகு தான் தெரிந்திருக்கிறது அவர் மறையவில்லை, உடல்நலக்குறைவு மட்டுமே இன்னும் நீடிக்கிறது என்று! உடனே அதிர்ந்து போன மேகாலயா மாநில பாஜக பொதுச் செயலாளர் டேவிட்; பத்திரிகையாளர்களை அழைத்து, தங்களது தவறான புரிதலுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

இணையத்தில் வைரலான அந்தப் புகைப்படம்...

தற்போது வினோத் கன்னாவின் குடும்பத்தினர் செய்தியாளர்களுக்கு தெரிவித்த குறிப்புகளின் படி, நடிகர் வினோத் கன்னா தீவிர நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாகவும், உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

பிரபல ஹிந்தி நடிகர்களில் கட்டுக்கோப்பாக உடலை பராமரிக்கும் நபர்களில் ஒருவரான வினோத் கன்னாவின் நலிந்த மிக மோசமான உடல் பொலிவைக் கண்டு தான் இப்படி ஒரு தவறான புரிதல் ஏற்பட்டதாக இணையத்தில் ரசிகர்களிடையே பேச்சு நிலவுகிறது.

வினோத் கன்னாவுக்கு முதல் மனைவி கீதாஞ்சலி மூலமாக அக்‌ஷய் கன்னா, ராகுல் கன்னா என இரு மகன்களும், இரண்டாவது மனைவி கவிதா மூலமாக ஷ்ரத்தா கன்னா, சாக்‌ஷி கன்னா என ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். வினோத் கன்னா மறைவு எனும் வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அவரது மகனும், ஹிந்தி நடிகருமான அக்‌ஷய் கன்னா, செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது தந்தை நலமுடன் இருப்பதாகவும், சல்மான் கான் தன் தந்தையை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com