புராரி கூட்டுத்தற்கொலை: எஜமானர்களின் இழப்பைத் தாங்க இயலாத வளர்ப்பு நாய் ஹார்ட் அட்டாக்கில் மரணம்!

புராரி கூட்டுத்தற்கொலை: எஜமானர்களின் இழப்பைத் தாங்க இயலாத வளர்ப்பு நாய் ஹார்ட் அட்டாக்கில் மரணம்!

பாதுகாப்பாளர்கள் துணையுடன் டாமியை வெளியே வாக்கிங் அழைத்துச் சென்றால் அது மிகுந்த ஆர்வத்துடன் தனது எஜமானர்களின் முகம் எங்காவது தென்படுகிறதா என ஆவலுடம் தேடத் துவங்கி இருக்கிறது.
Published on

மிகவும் நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களின் இழப்பு மற்றவர்களை குறிப்பாக மனிதர்களை அதிக அளவில் பாதிப்பதைக் காட்டிலும் மிருகங்களை சொல்லில் விளக்கமுடியா வண்ணம் மிக மிக அதிகமாகப் பாதிப்படையச் செய்து விடுகிறது. சிற்சில சமயங்களில் மிருகங்கள் தமது பேரன்பிற்கு உரியவர்களின் இழப்பைத் தாங்க இயலாமல் நோய் வாய்ப்பட்டு இறக்கும் அளவுக்கு கூட செல்கின்றது அவற்றின் ப்ரியத்தின் அடர்த்தி.

நாட்டையே உலுக்கச் செய்த புராரி கூட்டுத் தற்கொலை மரணத்தை அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தங்களது வீட்டின் உள்முற்றத்தில் அமைக்கப்பட்ட கிரில் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த கூட்டுத் தற்கொலையில் தற்கொலை செய்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள் தங்களது ப்ரியத்துகந்த வளர்ப்பு நாய் டாமியை மட்டும் தங்களது தற்கொலையில் கூட்டு சேர்த்துக் கொள்ளவில்லை. டாமியை தாங்கள் தற்கொலை செய்து கொள்ளத் தேர்ந்தெடுத்திருந்த கிரில் கம்பி அமைந்திருந்த மாடியில் ஒரு கயிற்றில் பிணைத்து கட்டி விட்டு, பின் கீழிறங்கி வந்து கிரில்லின் உட்புறத்தில் ஆலமர விழுதுகளைப் போல குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொண்டு தொங்கிய காட்சி அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியிருந்தன.

தற்கொலைக்கு மறுநாள் அண்டை வீட்டார் மூலமாகத் தகவலறிந்து காவல்துறையினர் இறந்தவர்களின் சடலங்களை மீட்கச் சென்ற போது தான் கிரில்லின் வெளிப்புறத்தில் கம்பியில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாய் டாமியின் சத்தம் கேட்டு அங்கே விரைந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட நிலையில் டாமி, மிகுந்த மன அழுத்தத்தோடும், மிரட்சியோடும் 108 டிகிரி ஜூரத்தோடும் இருந்ததாக டாமியை மீட்ட காவல்துறை அலுவலர்கள்  தெரிவித்திருந்தனர்.

மீட்கப்பட்ட பிறகு கைவிடப்பட்ட விலங்குகளுக்கான பாதுகாப்பு மையத்தின் பொறுப்பில் விடப்பட்ட டாமியை அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சகஜ நிலைக்கு கொண்டு வர முயன்றிருக்கிறார்கள். உடல்நலனைப் பொறுத்தவரை டாமில் வெகு விரைவில் மிகுந்த முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆயினும், அதனால், தனது பாசமிகு எஜமானர்களை மறக்க இயலவில்லை. பாதுகாப்பாளர்கள் துணையுடன் டாமியை வெளியே வாக்கிங் அழைத்துச் சென்றால் அது மிகுந்த ஆர்வத்துடன் தனது எஜமானர்களின் முகம் எங்காவது தென்படுகிறதா என ஆவலுடம் தேடத் துவங்கி இருக்கிறது. முற்றிலும் புதிய முகங்களே தென்படும் நிலையில் தேடித் தேடி ஓய்ந்து தான் எதிர்பார்த்தது கிட்டாத ஆத்திரத்தில் மீண்டும் டாமிக்கு மன அழுத்தம் ஏற்படும் அறிகுறி தோன்றவே டாமியின் பாதுகாப்பாளர்கள் அதை மிகுந்த சிரமத்துடன் பராமரித்து வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட  இதய அடைப்பு (கார்டியாக் அரெஸ்ட்) காரணமாக டாமி இறந்து விட்டதாகத் தகவல். ஞாயிறு மாலை 7 மணியளவில் டாமி இவ்வுலகை விட்டு தன் எஜமானர்கள் சென்ற இடத்திற்கே மீண்டதாக டாமியின் பொறுப்பாளரும், பாதுகாவலருமாகச் செயல்பட்ட விலங்குகள் நல தன்னார்வலர் சஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.

மிருகங்களுக்கு என்றே ஒரு தன்னுணர்வு உண்டு. அதே போல டாமிக்கும் கூட புராரி கூட்டுத் தற்கொலை நிகழ்வதற்கு முன்பே, ஏதோ அசம்பாவிதம் நிகழவிருப்பதற்கான அறிகுறி தென்பட்டிருக்கிறது. வாயற்ற அந்த ஜீவனால், தனது எஜமானர்களுக்கு நேரவிருந்த ஆபத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வகையில்லாவிட்டாலும் கூட அதனால் நடக்கவிருந்த விபரீதம் பற்றி நுகர முடிந்திருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தற்போது புராரி குடும்பத்தினரின் வளர்ப்பு நாய் டாமி இதய அடைப்பால் மரணித்த செய்தி இளகிய மனம் கொண்டவர்களை மேலும் உருகச் செய்வதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com