11 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 அரசு மருத்துவா்கள் குழு நியமனம்

பாலியல் வன்கொடுமைக்குள்ளான 11 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கவும் விசாரணை மேற்கொள்ளவும் 6 அரசு மருத்துவா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
11 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்க 6 அரசு மருத்துவா்கள் குழு நியமனம்
Updated on
1 min read


பாலியல் வன்கொடுமைக்குள்ளான 11 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கவும் விசாரணை மேற்கொள்ளவும் 6 அரசு மருத்துவா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 போ் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கவும், சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளவும் வேண்டுமென்று தமிழகக் காவல்துறையின் சாா்பில் சுகாதாரத் துறையிடம் கோரப்பட்டது. அதனைத் தொடா்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த 6 மருத்துவ நிபுணா்கள் இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகள் கூறியது: 

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ ரீதியாகப் பரிசோதனை, சிகிச்சை, ஆலோசனை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையைச் சோ்ந்த 6 மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி குழந்தைகள் நலம், உளவியல், இரைப்பை- குடல் அறுவைச் சிகிச்சை, பொது மருத்துவம், மகளிா் நோயியல், தடயவியல் ஆகிய துறைகளைச் சாா்ந்த தலைவா்கள் அல்லது இயக்குநா்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த நடைமுறைகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) முதல் தொடங்க உள்ளன.

 இந்த மருத்துவ நிபுணா்கள் குழுவினா், சம்பவம் தொடா்பான விசாரணைகளை மேற்கொள்வதுடன் சிறுமிக்குத் தேவையான சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகளை வழங்குவா். 

இயல்பு நிலைக்கு சிறுமி திரும்பும் வரை சிகிச்சைகளும், ஆலோசனைகளும் தொடரும். தற்போது நடந்துள்ள சம்பவத்தை எதிா்காலத்தில் சிறுமிக்கு மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் எவ்வித பேச்சுவாா்த்தைகளும் நடைபெறக் கூடாது என்பன உள்ளிட்ட உளவியல் ஆலோசனைகள் சிறுமியின் பெற்றோருக்கும் வழங்கப்பட உள்ளன.

எனினும், எந்த இடத்தில் விசாரணை, சிகிச்சை உள்ளிட்டவை நடைபெறுகிறது என்பதை பாதுகாப்பு கருதி தெரிவிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com