தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய உதவி என்ன?

'முன்னொரு பொழுதினிலே' குறும்படத்தின் கதை இதுவே. தந்தை, மகன், மனைவி உறவை இந்தக் கதை மிக அழகாக சித்திரிக்கிறது.
தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய உதவி என்ன?
Published on
Updated on
2 min read

திருக்குறள் 67: 'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்’ மக்கட்பேறு அதிகாரத்தில் வரும் இந்தக் குறளின் பொருள், மகனை கற்றவர் சபையில் முதன்மை அடையச் செய்வதே தந்தை புரியும் நன்மையாகும் என்று சொல்கிறது. தாயும், தந்தையும் இல்லாமல் வளர்பவர்களுக்குத்தான் அவர்களின் அருமை தெரியும் என்று சொல்வார்கள். தந்தையும், தாயும் மகனை சிறப்பாக வளர்த்து விடுவார். ஆனால், வயதாகி வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்படும்போது, சுமை என்று அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள் இன்றைய கால பிள்ளைகள்.

'முன்னொரு பொழுதினிலே' குறும்படத்தின் கதை இதுவே. தந்தை, மகன், மனைவி உறவை இந்தக் கதை மிக அழகாக சித்திரிக்கிறது. முதல் மனைவி இறப்புக்கு பிறகு, குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

மனைவி பொய் சொல்லிவிட்டு எங்கோ வெளியே செல்வதைப் பார்த்து சந்தேகம் கொள்கிறார். ஒருவேளை திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருக்கிறாரோ என்று பார்ப்பவர்களுக்கும் அந்தப் பெண் கதாபாத்திரம் சந்தேகத்தை எழுப்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், உண்மை அதுவல்ல. அவர் கணவரிடம் சொல்லாமல் செல்லும் இடம் மாமனாரைப் பார்ப்பதற்காக. மகனால் தனி வீட்டில் தனித்து விடப்பட்ட தந்தை தான் யார் என்பதையே மறந்துபோய் திண்டாடி வருகிறார். நான் தான் உங்கள் மகள் என்று கூறி அவரை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, கணவரிடம் பெரியவர்களின் அன்பை புரிய வைக்கிறார் மனைவி. மனைவியாக காயத்ரி ஐயர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தை, மகன் கதாபாத்திரங்களில் வருபவர்களும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டிய ஒன்று இசை. இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, காட்சிகளுக்கு தேவையான இடங்களில் கச்சிதமான இசையை வழங்கியுள்ளார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. ஔிப்பதிவாளரும் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் செய்துள்ளார். தந்தையிடம் நான் தான் உங்கள் மகன் என்று சொல்லமுடியாமல் போகும் இடம் அருமை. பெற்றவர்களை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சமூகத்துக்கு அவசியமான இது போன்ற கதையை இயக்கிய இயக்குநர் எம்.கெளதம் பாராட்டுக்குரியவர்!

திருக்குறள் 70: 'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்.' இந்தக் குறளுக்குப் பொருள், தனக்குக் கல்வியை அளித்து வளர்தெடுத்த தந்தைக்கு மகன் செய்யும் உதவி, தந்தை இதுபோன்ற மகனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தேனோ என்று நினைக்குமாறு நடத்தலாகும்.

ஆம். தந்தைக்கு மகனாற்றும் உதவி 70-ஆவது குறள் சொல்லும்படியே இருந்தால் நன்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com