10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

புதுச்சேரி: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ கல்லூரியில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், தற்போதுள்ள தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்த வேண்டும், மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரி பெரியார் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்ற தமிழகம், புதுவை முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. VCKforOBCquota (பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்காக விடுதலைச்சிறுத்தைகள்) என்ற ஹேஷ்டேக் மூலம் நாடு முழுவதும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க ஆர்வம் காட்டி வருகிறது. தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை. மத்திய அரசு கரோனா வைரஸை குறைக்க வழியை காணாமல் அதிகப்படுத்த வழிவகை செய்து வருகிறது. கரோனா பரிசோதனை எண்ணிக்கை மிகச்சொற்பமாக உள்ளது. தமிழகத்திலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கரோனா தடுப்பு பணிகளில் மன நிறைவு இல்லை, வருத்தம் அளிப்பதாக உள்ளது. கரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காண்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஆபத்தானது. கரோனா பாதிப்பு குறைவாக இருந்த காலத்தில் ஊரடங்கு இருந்தது.

தற்போது பாதிப்பு அதிக அளவில் உள்ள போது ஊரடங்கில் தளர்வு காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி தெரிவித்ததற்கு மத்திய அரசிடம் இருந்தும், மோடியிடம் இருந்தும் மறுப்பு இல்லை.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிப்போடுவதைவிட ரத்து செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. இதில் மாணவர்களும் பெற்றோர்களும் நினைப்பது அவர்களது விருப்பம்.

சென்னையை 100 சதவீத கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்படவேண்டும். வீடு வீடாக மக்களுக்கு கரோனா சோதனை நடத்த வேண்டும். தமிழகம், புதுவையில் 3 மாதங்களுக்கு மின் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. சிறு குறு நிறுவனங்களிடமும் மின் கட்டணம் வசூலிக்க கூடாது என்றார் திருமாவளவன்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலர் துரை.ரவிக்குமார் எம்.பி., புதுவை மாநில முதன்மைச் செயலர் தேவ.பொழிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com