
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கரோனா தொற்று பரவல் தடுப்பு விதியை மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
திருப்பத்துார் சக்தி நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனையில், கரோனா பரவல் விதிகளை மீறுவதாகவும், அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதாகவும், அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
தகவலின் பேரில், வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் ம.சிவபிரகாசம் தலைமையிலான அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டு வந்தனர்.
இதையடுத்து தொடர்ந்து வந்த புகாரின் பேரில் ஆட்சியர் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில்,மருத்துவ குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு அந்த மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், அந்த மருத்துவமனை நிர்வாகம் கரோனா விதிகளை மீறி செயல்பட்டதும், நோயாளிகளிடம் கூடுதல் கட் டணம் வசூலித்ததும், தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு வட்டாட்சியர் ம.சிவபிரகாசம் தலைமையிலான வருவாய், நகராட்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் பூட்டு போட்டு சீல் வைத்தனர். முன்னதாக அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேரை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.