சாலை விபத்தில் முதல் 48 மணி நேர அவசர சிகிச்சை செலவை தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோரின் முதல் 48 மணி நேர அவசர மருத்துவச் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என மேல்மருவத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
விழாவில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலிக் குறுந்தகட்டினை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு,தா.மோ.அன்பரசன்,க.பொன்முடி, எ.வ.வேலு
விழாவில் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலிக் குறுந்தகட்டினை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு,தா.மோ.அன்பரசன்,க.பொன்முடி, எ.வ.வேலு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோரின் முதல் 48 மணி நேர அவசர மருத்துவச் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என மேல்மருவத்தூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் இன்னுயிர் காப்போம் திட்டம் மற்றும் நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “ சாலை விபத்துக்களைப் பொறுத்தவரையில் நமது நாட்டில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது. அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது. சாலை விபத்துக்களால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிரிழப்பிலும் அந்த நபர் மட்டுமின்றி அவரது குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி பல்வேறு சோதனைகளுக்கும் ஆளாகி விடுகிறது. சாலை விபத்துக்களில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்பதையும் எண்ணிப்பார்க்கிற நேரத்தில் விலை மதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தையும் சேர்த்தே எடுத்துச் சென்று விடுகிறது” என்றார்.

மேலும், “சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கவும் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் தரக்கூடிய அந்த உயிர் அந்தக் குடும்பத்துக்கு மட்டுமின்றி அரசுக்கும், நாட்டுக்கும் மிகமிக முக்கியம் என்பதையும் நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும். இந்த வகையில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட திட்டமே இந்த இன்னுயிர் காப்போம் திட்டம்.

சாலை விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்துக்கான அவசர மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். இத்திட்டத்துக்கென 201 அரசு மருத்துவமனைகள், 408 தனியார் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வேற்று நாட்டவர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துக்களில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் கட்டணமில்லாமல் மருத்துவச் சிகிச்சையளிக்கப்படும்.

48 மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையளித்து உடனடியாக கவனித்து விட்டால் பெரும்பாலான உயிர்கள் காப்பாற்றப்படும். அதன் பிறகும் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் அறுவைச் சிகிச்சைகளும், தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

விபத்துக்களில் காயமடைவோருக்கு சிகிச்சையளிக்க பல தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும் பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு சென்று சிகிச்சையளிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது.

இப்பிரச்னைகள் அனைத்துக்கும் நல்லதொரு தீர்வாகத்தான் இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. முதல் 48 மணி நேரத்திலும் தேவைப்படக்கூடிய அவசர சிகிச்சைகள் அனைத்தையும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளும் வகையில் தான் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைத்திருக்கிறேன் என்றும் பேசினார்.

விழாவிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத், மக்களவை உறுப்பினர் ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, எம்.வரலெட்சுமி, எஸ்.அரவிந்த்ரமேஷ், சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளையின் துணைத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக இன்னுயிர் காப்போம் திட்டத்தின் காணொலிக் குறுந்தகட்டினையும் தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ரங்கநாதனையும் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com