கரோனா தடுப்பூசி போட காவல் நிலையத்திலிருந்து அழைப்பா? அதிருப்தியில் மக்கள்

கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக மிரட்டும் தொணியில் வரும் அழைப்புகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தடுப்பூசி போட காவல் நிலையத்திலிருந்து அழைப்பா?  அதிருப்தியில் மக்கள்

கரோனா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக மிரட்டும் தொணியில் வரும் அழைப்புகள் பொதுமக்களிடையே அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தவணை கரோனா தடுப்பூசியை சுமார் 12.50 லட்சம் பேரும், 2ஆவது தவணை தடுப்பூசியை 4.70 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் செலுத்தியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் 8 முறை தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 9ஆவது சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு பதிலாக குலுக்கல் முறையில் சலவை இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேர்தலின்போது வாக்களிப்பதற்கு பணம் பெற்று பழகிய மக்களுக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கும் இலவசப் பொருள்கள் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது ஒரு தரப்பினரிடையே கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. ஆனாலும், தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை மட்டுமே கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் விமர்சனங்கள் குறித்து கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மக்களை, காவல் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்  துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கைப்பேசியில் தொடர்பு கொண்டு 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில், காவல் நிலையங்களிலிருந்து வரும் அழைப்புகள் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எரியோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது: ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலிருந்து அழைப்பதாக கூறிய காவலர் ஒருவர், முதல் தவணை தடுப்பூசிய செலுத்திய நீங்கள் 2ஆவது தவணை தடுப்பூசியை இன்று உடனடியாக செலுத்த வேண்டும் என தெரிவித்தார். வேடசந்தூர் உள்கோட்டத்தில் உள்ள எரியோடு பகுதிக்கு, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திலிருந்து அழைத்து மிரட்டும் தொணியில் பேசுகின்றனர்.

காவல் நிலையத்திலிருந்து அழைப்பு என்றவுடன், அடித்தட்டு மக்கள் அதிர்ச்சியுடனும், அச்சத்துடனும் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த அணுகுமுறையை மாவட்ட நிர்வாகம் மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பொதுமக்களை தொடர்பு கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் காவல் நிலையங்களிலிருந்து பேசுவதாக சொல்லும் அழைப்புகள் ஏற்படுத்திய அதிருப்தி குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மிரட்டும் தொணியில் பேசக் கூடாது என காவல் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது” எனத் தெரிவித்தனர்.

மாவட்டம் முழுவதும் பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.விசாகனை தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது, அவர் பதில் அளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com