நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள் அதிக அளவு கலப்பதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். 
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான குறைகேட்புக் கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ்.
Published on
Updated on
1 min read

திருப்பூர்: நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள் அதிக அளவு கலப்பதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான மாதாந்திர குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில், நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திருஞானசம்பந்தன் பேசியதாவது: 

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சடம் விவசாயிகளின் நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுகள், சாயக்கழிவுகள் மற்றும் சாக்கடை நீர் அதிக அளவில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நீர் நிலைகளும் மசடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஒண்டிபுதூர், பாப்பம்பட்டி, இருகூர், முத்துக்கவுண்டன்புதூர், சூலூர், சாமளாபுரம் பகுதியில் அதிக அளவில் கழிவுகள் கலக்கப்படுகிறது. நொய்யல் ஆற்றின் நீர் வழியில் கால்நடை வளர்ப்போறும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து நொய்யல் ஆறு,குளங்கள், ராஜவாய்க்கால் ஆகியவற்றில் களஆய்வு செய்து நொய்யல் ஆற்றில் கழிவுநீரைக் கலக்கும் நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

அதே போல, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.காளிமுத்து பேசுகையில், தமிழகத்தில் விவசாயிகள் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். 

திருப்பூர் மாவட்டத்திலும் பெரும்பாலான வட்டத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஆனால் மடத்துக்குளம் வட்டத்தில் மட்டும் தற்போது வரையில் உழவர் சந்தை இல்லாதது அப்பகுதி விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. ஆகவே, மடத்துக்குளம் வட்டத்தில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

இந்தக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com