ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களின் வீர விளையாட்டு என்பதைக் கடந்து தமிழ்நாட்டு உள்ளூர் இன காளைகளின் நலனையும், மரபு வழியையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்தது என்ற தமிழ்நாட்டு அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டுச் சிறப்பு என்பது நூற்றாண்டுகளைக் கடந்தது என்ற நிலையில் அது குறித்து ஆய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் சரியான அமைப்பு இல்லை என்றும் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை எடுத்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளின் பண்பாட்டு சிறப்பு குறித்த தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட நிலையில், விலங்குகள் நல அமைப்பு என்ற போர்வையில் செயல்படும் எந்த அமைப்பும் இனி இது குறித்து கேள்வி எழுப்ப முடியாது.