சிவகங்கை: புதியவர்களின் விரல் நுனியில் தலையெழுத்து!

சிவகங்கை மக்களவைத் தொகுதி நிலவரம்!
சிவகங்கை: புதியவர்களின் விரல் நுனியில் தலையெழுத்து!

1980-ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவும், மத்திய அமைச்சரவைக்கு மூன்று அமைச்சர்களை அனுப்பிய தொகுதியாகவும் திகழ்கிறது சிவகங்கை.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் சொந்தத் தொகுதி என்கிற பெருமையும் சிவகங்கைக்கு உண்டு.

1967-ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவைத் தொகுதி உருவாக்கத்துக்குப் பிறகு 2014-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும், ஜி.கே. மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 2 முறையும் வெற்றிப் பெற்றன.

1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தா. கிருட்டிணன் வெற்றி பெற்று, மக்களவைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், 1971-இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு அவரே வெற்றி பெற்றார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 2009-ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இருந்தன. மறு சீரமைப்புக்குப் பிறகு, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), சிவகங்கை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

இவற்றில் திருமயம், ஆலங்குடி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும்.

கடந்த 1985-ஆம் ஆண்டுதான் தனி மாவட்டமாக சிவகங்கை அறிவிக்கப்பட்டது. எனினும், 1967-ஆம் ஆண்டிலிருந்தே சிவகங்கை மக்களவைத் தொகுதி உள்ளது.

சிவகங்கை: புதியவர்களின் விரல் நுனியில் தலையெழுத்து!
தூத்துக்குடியில் நான்குமுனைப் போட்டி: ஆனால்...

2019 -இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரமும், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் ஹெச். ராஜாவும் போட்டியிட்டனர். இதில், ஹெச். ராஜாவைவிட 3,32,245 வாக்குகள் அதிகம் பெற்று கார்த்தி சிதம்பரம் (5,66,104 வாக்குகள்) வெற்றி பெற்றார்.

பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா 2,33,860 வாக்குகளும், அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியன் 1,22,534 வாக்குகளும் பெற்றனர்.

இந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும், அதிமுக கூட்டணியில் அந்தக் கட்சி வேட்பாளரும், பாஜக கூட்டணியில் அந்தக் கட்சி வேட்பாளரும் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வழக்கம்போல தனித்தே களமிறங்கியுள்ளது. இதையடுத்து, இந்தத் தொகுதியில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதியைப் பொருத்தவரை, முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்), நகரத்தார், வல்லம்பர், முத்தரையர், யாதவர், உடையார், பிள்ளைமார், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இருப்பினும், தொகுதியின் வெற்றியைத் தீர்மானிப்பது முக்குலத்தோர் சமூகம் மட்டுமே.

மத்திய அரசு மீதான அதிருப்தியால் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவிக்கிறார். சிவகங்கை மக்களவைத் தொகுதி என்பது ப.சிதம்பரம் குடும்பத்தின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கும் தொகுதியாகவே இருந்து வருகிறது. கார்த்தி சிதம்பரத்தின் நகரத்தார் சமூக வாக்குகள் கணிசமாக இல்லையென்றாலும், எல்லா தரப்பினர் மத்தியிலும் அவரது குடும்பத்துக்கு செல்வாக்கு இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் இருப்பதும் காங்கிரஸின் செல்வாக்கும் கூடுதல் பலம்.

அதிமுக வேட்பாளரான அ. சேவியர்தாஸ் மக்கள் மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மீது நிலவும் அதிருப்தி, அதிமுகவின் கணிசமான வாக்கு வங்கி, தனது சமூகத்தின் வாக்குகள், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சிவகங்கை: புதியவர்களின் விரல் நுனியில் தலையெழுத்து!
மூன்றாவதாக ஒன்றுக்கு இடமில்லை! இருமுனைப் போட்டியில் யார், யார்?

பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் தொகுதிக்குத் தொடர்பே இல்லாதவர். அவரது "யாதவர்' சமுதாய வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்குக்கூட இல்லை. பெயருக்கு வேட்பாளரை நிறுத்தியிருக்கிறது பாஜக என்பதுதான் நிஜம்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வி. எழிலரசி களமிறக்கப்பட்டுள்ளார். தொகுதிக்கு புதுமுகம். சீமானும், இளைஞர்களும்தான் இவருக்கு பலம். இன்றைய அரசியல் சூழ்நிலையில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் 18 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களாக உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த இளைஞர்களின் வாக்குகள்தான் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை:

மொத்த வாக்காளர்கள்: 16,33,857

ஆண்- 8,02,283.

பெண்- 8,31,511

மூன்றாம் பாலினம்- 63

மக்களின் கோரிக்கைகள்

ஏழை மக்களின் வாழ்வாதாரம் ஏற்றம் அடைய நடவடிக்கை பின்னடைவை சந்திக்கும் 70 சதவீத மக்கள் நம்பும் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிவகங்கை அனைத்து நகர, கிராமப் பகுதிகளை இணைக்க வேண்டும்.

முடங்கியுள்ள 'ஸ்பைசஸ் பார்க்'- ஐ திறக்க வேண்டும்.

தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சியகம் கிராஃபைட் உள்ளிட்டதொழில் சார்ந்த திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com