
2024 பாரீஸ் ஒலிம்பிக் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் இது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ், ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது இது மூன்றாவது முறை.
இதற்குமுன் 1900, 1924 என இருமுறை ஒலிம்பிக் போட்டியை நடத்திய பெருமைக்குரிய நகரம் பாரீஸ். இப்போது மூன்றாவது முறை!
பாரீஸ் நகரத்தை விட்டுவிட்டால் இப்படி மூன்று முறை ஒலிம்பிக் நடத்திய பெருமைக்குரிய மற்றொரு நகரம் லண்டன்தான். ஆம். பிரிட்டனின் தலைநகரமான லண்டன் 1908, 1948, 2012 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி இருக்கிறது.
இவற்றைத் தவிர, ஏதென்ஸ், லாஸ் ஏஞ்செல்ஸ், டோக்கியோ போன்ற நகரங்கள் இரண்டு முறை மட்டுமே ஒலிம்பிக்கை நடத்திய பெருமைக்குரிய நகரங்கள்.
இப்போது பாரீஸ் ஒலிம்பிக்கைப் பற்றி பார்க்கலாம். 1900ஆம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் நடந்த ஒலிம்பிக், நவீன ஒலிம்பிக் வரலாற்றில் நடைபெற்ற இரண்டாவது ஒலிம்பிக்.
ஈபள் கோபுரம் அருகே ஒரு கண்காட்சியையொட்டி நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியில், கண்காட்சியே முதன்மை பெற்றது. ஒலிம்பிக் போட்டி பின்னுக்குத் தள்ளப்பட்டது. போட்டியின்போது ஏகப்பட்ட குளறுபடிகள் வேறு. வெறும் இருபது நாடுகள்தான் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றன.
1900 பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்(!) போட்டியும் கூட இடம்பெற்றிருந்தது. பெல்ஜியம், ஹாலந்து (நெதர்லாந்து) அணிகள் கடைசிநேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டநிலையில், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய இரண்டே நாடுகள் மட்டுமே கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டன.
பங்கேற்ற இரு அணிகளும், அந்தந்த நாட்டின் தேசிய அணிகளும் இல்லை. அவசர கோலம் அள்ளித்தெளி என்பது போல, பிரிட்டன் சார்பாக, அந்த நேரம் பாரீஸ் வந்திருந்த ஒரு கிரிக்கெட் மன்றத்தைச் சேர்ந்த வீரர்கள் போட்டியிட்டனர். பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, அந்த நாட்டில் பணியாற்றிய பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள், பிரிட்டன் நாட்டவர்கள் இந்த ஒலிம்பிக்கில் பிரான்ஸ் சார்பாக பங்கேற்றனர். முடிவில் கிரிக்கெட் போட்டிக்கான தங்கப்பதக்கத்தை பிரிட்டன் வென்றது.
ஈபள் கோபுரத்தின் அருகே மரங்கள் அடர்ந்த சோலையில் தட்டெறியும் போட்டி நடந்ததால், தட்டுகள் மரக்கிளைகளில் சிக்கிக் கொண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ரே யூரி, ஆல்வின் கிராயென்ஸ்லெய்ன், இர்விங் பாக்ஸ்டர், ஜான் டெவ்க்ஸ்பரி என்ற 4 வீரர், வீராங்கனைகள் மட்டுமே, 23 தடகள போட்டி தங்கப் பதக்கங்களில் 11 பதக்கங்களைத் தட்டிச் சென்றார்கள்.
1900 பாரீஸ் ஒலிம்பிக், ஒருவகையில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்களை(!) தந்த பெருமைக்குரிய ஒலிம்பிக்.
இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியரான ஜி.நார்மன் பிரிச்சார்ட் என்பவர், 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடைதாண்டும் ஓட்டம் ஆகியவற்றில் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், இவர் பிரிட்டன் வீரராக பட்டியலிடப் பட்டிருந்தார். பிரிட்டன் சார்பாக ஒலிம்பிக்கில் இவர் கலந்து கொண்டாலும், இவர் பெற்ற 2 வெள்ளிப் பதக்கங்களை இந்தியா பெற்ற பதக்கங்களாகவே பன்னாட்டு ஒலிம்பிக் மன்றம் இன்றுவரை கருதுகிறது.
1924ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் மீண்டும் ஓர் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பெருமையைப் பெற்றது. 44 நாடுகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றன.
ஒலிம்பிக் போட்டி என்ற கனவை நனவாக்கி, நவீன ஒலிம்பிக் போட்டிகளை உருவாக்கியவரான பியர் தெ கூபர்டின், கடைசியாக பார்த்து ரசித்த ஒலிம்பிக், இந்த 1924 பாரீஸ் ஒலிம்பிக்தான். ஒலிம்பிக்கின் இறுதி நாளன்று, பியர் தெ கூபர்டின் நிறைவுரையாற்றினார். நவீன ஒலிம்பிக்கின் தந்தையாகக் கருதப்படும் பியர் தெ கூபர்டின் அதன்பின் ஒலிம்பிக் விடயங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.
பறக்கும் ஃபின்லாந்து வீரர் (ஃபிளையிங் ஃபின்) என்று பெயர் பெற்ற பாவோ நூர்மி, 1920 ஆண்டு ஆண்ட்வெர்ப் ஒலிம்பிக் தடகள போட்டிகளில் 3 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார். 1924 பாரீஸ் ஒலிம்பிக்கில் நூர்மியின் கொடி மேலும் பறந்தது. இந்த ஒலிம்பிக்கில் அவர் மேலும் 5 தங்கங்களை வென்றெடுத்தார். ஆக, மொத்தம் 8 தங்கங்கள். (அதற்கு அடுத்த ஒலிம்பிக்கிலும் பாவோ நூர்மி, 3 பதக்கங்களை வென்றார் என்பது தனிக்கதை)
1924 பாரீஸ் ஒலிம்பிக்கின் போது பெயரெடுத்த மற்றொரு தலைசிறந்த ஒலிம்பிக் வீரர் ஜானி வீஸ்முல்லர். அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரரான ஜானி வீஸ்முல்லர், 100 மீட்டர் ஃபிரீ ஸ்டைல், 400 மீட்டர் ஃபிரீ ஸ்டைல், 4 வீரர்கள் பங்கேற்கும் 200 மீட்டர் தொடர் நீச்சல் இவற்றில் 3 தங்கங்களை வென்றார். வாட்டர் போலோ போட்டியிலும் இவர் பங்கேற்றார். இவரது அணி வெண்கலம் வென்றது.
அடுத்து வந்த 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்கில் ஜானீவீஸ் முல்லர் 2 தங்கம் வென்றார். அதன்பிறகு இவர் ஹாலிவுட்காரர்களின் கண்களில் சிக்கினார். 1932ஆம் ஆண்டு, டார்சான் தி ஏப்மேன் படத்தில் அவர் டார்சானாக தோன்றி நடித்தார். ஜானீ வீஸ்முல்லரின் 11 டார்சான் திரைப்படங்கள், அவரை புகழ் என்ற மரத்தின் உச்சிக்குக் கொண்டு போயின.
சரி. இப்போது நவீன 2024 பாரீஸ் ஒலிம்பிக்குக்கு வருவோம். முன்பே கூறியது போல பாரீஸ் நகரம் தற்போது மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கைச் சந்திக்கிறது.
பாரீஸ் நகரத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள யிவ து மேன்வார் என்ற விளையாட்டரங்கில் தற்போது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன், பியர் தெ கூபர்டின் நிறைவுரையாற்றிய இடம் இதுதான்.
ஃபின்லாந்து வீரர் பாவோ நூர்மி, 6 நாள்களில் 7 போட்டிகளில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்ற அரங்கமும் இதுதான்.
1938 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், இத்தாலி அணி ஹங்கேரியை 4-2 என வென்று, கோப்பையைக் கைப்பற்றிய அரங்கமும் இதுதான்.
அதுபோல ஜார்ஜஸ் வாலெரி நீச்சல் குளம், 1924 பாரிஸ் ஒலிம்பிக்கின்போது அமெரிக்க நீச்சல் வீரர் ஜானி வீஸ் முல்லர் கலக்கிய அதே நீச்சல் குளம்.
முன்னை பழமைக்கும், பின்னை புதுமைக்கும் பாலமாக, பழைய புதிய விளையாட்டரங்களுடன் இனிதே நடந்து வருகிறது பாரீஸ் 2024 ஒலிம்பிக்!
மோகன ரூபன்
……………………..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.