இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்ற ஒரே நாடு இந்தியாதான். இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
படம் | ஹாக்கி இந்தியா (எக்ஸ்)
Published on
Updated on
4 min read

ஒரு காலத்தில், ஹாக்கி என்ற வளைகோலாட்டத்தில் இந்தியா கோலோச்சிக் கொண்டிருந்தது. ஹாக்கிப் போட்டி என்றாலே இந்தியாவுக்குத்தான் வெற்றி என்பது அப்போது எழுதப்படாத விதியாக இருந்தது.

1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதன்முறையாக ஹாக்கி விளையாட்டு இடம்பெற்றது. 

அந்தப் போட்டியில், ஜெய்பால்சிங் முண்டா தலைமையில் களம் கண்ட இந்திய ஹாக்கி அணி, இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுதான். இந்த ஒலிம்பிக் போட்டி முழுவதும் இந்திய அணிக்கு எதிராக எந்த ஓர் அணியாலும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.

1932 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 2 போட்டிகளில் இந்தியா அடித்த கோல்கள் 35.

இந்தியா 2ஆவது முறையாக தங்கம் வென்றது. இதில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் ரூப் சிங் மட்டும் 10 கோல்களை அடித்தார். ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் ரூப் சிங் தான். அந்தப் போட்டியில் தயான்சந்த் அடித்த கோல்கள் 8.

இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
எகிறிப்பாயுமா நீரஜ் சோப்ராவின் ஈட்டி? - 2ஆவது ஒலிம்பிக் தங்கம்? எதிர்பார்ப்பில் இந்தியா

1935ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இந்திய ஹாக்கி அணி சுற்றுப்பயணம் செய்து, அந்த இரு நாட்டு அணிகளுடன் 48 போட்டிகளில் விளையாடியது. அந்த 48 போட்டிகளிலும் இந்திய அணிக்கே வெற்றி. இந்திய அணியின் 584 கோல்களில் தயான்சந்த் போட்ட கோல்கள் மட்டும் 200!

தயான்சந்த்
தயான்சந்த்

ஆஸ்திரேலியாவின் புகழ்ப்பெற்ற கிரிக்கெட் வீரரான டான் பிராட்மன், தயான் சந்த் போட்ட 200 கோல்களைப் பற்றி கேள்விப்பட்டு சொன்னது. ‘இது என்ன ஹாக்கி வீரர் அடித்த கோல்களா? அல்லது  கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த ஸ்கோரா?’

அடுத்ததாக 1936 பெர்லின் ஒலிம்பிக் வந்தது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக ஹிட்லர் இருந்தபோது, அந்த நாட்டின் தலைநகரத்தில் நடந்த ஒலிம்பிக் இது. ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என்று கருதப்பட்ட தயான்சந்த் இந்திய ஹாக்கி அணியின் தலைவராக இருந்து இந்தமுறை அணியை வழிநடத்தினார். தயான்சந்த், அப்போது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். 

இந்தப் போட்டியிலும், தயான்சந்த் தனது மாய வித்தைகளைக் காட்டினார். ஜெர்மனியை 8-1 என வீழ்த்தி இந்தியா 3ஆவது முறையாக தங்கம் வென்றது. 

ஹிட்லர்
ஹிட்லர்

தயான்சந்த்தின் ஹாக்கி ஆட்டம், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரையும் கூட ஈர்த்தது. பரிசளிப்பின்போது தயான்சந்த்திடம் அடால்ப் ஹிட்லர், ‘நீங்கள் ஜெர்மன்காரராக மட்டும் இருந்திருந்தால் உங்களை ஜெர்மன் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தியிருப்பேன்’ என்றாராம்.

இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
மும்முறை தாண்டலில் மூன்று தங்கம்! - சாதனைக்கு இன்னொரு பெயர் சனயேவ்

1948 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 4ஆவது முறையாக ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்றது. இந்தியா விடுதலை அடைந்தபின் கிடைத்த முதல் வெற்றி இது. 1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில், இந்திய ஹாக்கி அணிக்கு 5ஆவது முறையாக தங்கம்!
அதன்பின் 1956 மெல்பர்ன் ஒலிம்பிக்! ஹாக்கிப் போட்டிகளில் தொடர் வெற்றியை சுவைத்து வந்த இந்தியா, இந்தமுறை பாகிஸ்தான் அணியின் வடிவத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இருந்தும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, 6ஆவது முறையும் தங்கம் வென்றது. இனி ஹாக்கிப் போட்டியில் தங்கம் வெல்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதை இந்தியாவுக்குப் புரியவைத்த ஒலிம்பிக் அது.

1960 ரோம் ஒலிம்பிக். இந்திய ஹாக்கி அணி இந்த ஒலிம்பிக்கிலும் சிறப்பாக ஆடியது. இந்திய வீரர் பிரிதிபால் சிங் மிகச்சிறப்பாக ஆடினார். இந்தியா போட்ட 22 கோல்களில் பிரிதிபால் சிங்கின் பங்கு 11.  இருந்தும்கூட இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் 0-1 என இந்தியா தோல்வியைத் தழுவி, முதன்முறையாக தங்கத்தைப் பறிகொடுத்தது. வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

1964 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டி. இந்தமுறை இந்தியா பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி தங்கம் வென்றது. இந்தியாவின் வெற்றிக்கு பிரிதிபால் சிங்கின் சிறப்பான ஆட்டமும் ஒரு காரணம். இதன்மூலம் ரோம் ஒலிம்பிக்கில் பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா கணக்குத் தீர்த்துக்  கொண்டது. 

படம் | ஹாக்கி இந்தியா (எக்ஸ்)

1968 மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சரிவைச் சந்தித்தது. இந்தமுறை தங்கம், வெள்ளி இரண்டும் கிடைக்காமல், முதன்முறையாக 3ஆம் இடம்பிடித்து இந்தியா வெண்கலம் வென்ற தருணம் அது.  

1972 மியூனிக் ஒலிம்பிக்கில், போட்டியை நடத்திய மேற்கு ஜெர்மனி, ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்றது. இந்த வெற்றியை யாராலும் நம்ப முடியவில்லை. இந்தியாவுக்கு இந்தமுறையும் வெண்கலம்.

1976 மாண்ட்ரியால் ஒலிம்பிக் போட்டிக்கு, ஜெர்மனி தகுதிபெறவே இல்லை. இந்தமுறை இந்தியா இன்னும் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. இந்தமுறை எந்தப் பதக்கமும் கிடைக்காத நிலையில் 7ஆவது இடத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

இந்தநிலையில்தான் வந்தது 1980 மாஸ்கோ ஒலிம்பிக். ரஷியத் தலைநகரமான மாஸ்கோவில் நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா தலைமையிலான பல நாடுகள் புறக்கணித்தன. பாரம்பரியமாக ஹாக்கி விளையாடும் நாடுகளான  ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆர்ஜெண்டைனா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற பல நாடுகள் போட்டியைப் புறக்கணித்து விட்ட நிலையில் இந்திய அணி மாஸ்கோவில் களமிறங்கியது.

இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
மாரத்தான் மாவீரர்கள்: நினைவில் நிற்கும் நீண்டதொலைவு ஓட்டம்!

டான்சானியாவை 18-0, கியூபாவை 13-0 என இந்தியா வீழ்த்தினாலும், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் இந்தியா சமன் செய்தது. புதுமுகமாக ஹாக்கிப் போட்டியில் புகுந்த ரஷியாவிடமும், போலந்திடமும் இந்தியா திணறியது.

இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதல். இந்திய அணியின் ஒவ்வொரு கோலுக்கும் ஸ்பெயின் அணியின் பெனால்டி கார்னர் வல்லுநரான ஜூவான் அமாட் பதில் கோல் போட, இறுதியில் ஒருவழியாக இந்தியா தங்கம் வென்றது. ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8ஆவது தங்கம் இது.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், பலமான 12 நாடுகளின் ஹாக்கி அணிகளை இந்தியா எதிர்கொண்டது. அந்த ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தங்கம் வெல்ல,  இந்தியாவுக்கு 5ஆவது இடம்.

1988 சியோல் ஒலிம்பிக்கில் எப்போதும் இல்லாத புதுமையாக பிரிட்டன் தங்கம் வென்றது.  இந்தியாவுக்கு 4ஆவது இடம் 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களைக் கைப்பற்ற, இந்தியாவுக்கு 6ஆவது இடம்.

1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில், நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதல் மூன்று பதக்கங்களை வெல்ல, இந்தியாவுக்கு 8ஆவது இடம். 2000 சிட்னி ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த இடம் 7. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியாவுக்கு அதே இடம்தான். 

படம் | AP

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் இந்தியாவுக்கு மிகவும் சோகமான ஒலிம்பிக். காரணம், அந்த ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டிக்குத் தகுதிபெற்ற 12 நாடுகளில் இந்தியா இல்லை. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்?’ என்ற நிலை.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 12ஆவது இடத்தைப் பிடித்தது. 2016 ரியோ டி  ஜெனிரோ ஒலிம்பிக்கில் ஆர்ஜெண்டைனா பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 3 இடங்களைக் கைப்பற்ற, இந்தியா 8வது இடம்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் இந்தியாவுக்கு ஒருவகையில் நம்பிக்கை தந்த ஒலிம்பிக். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா 3ஆவது இடம்பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது. 41 ஆண்டுகளுக்குப்பிறகு ஹாக்கியில் மீண்டும் கிடைத்த பதக்கம் அது.

ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டிகளில் தொடர்ச்சியாக 6 முறை தங்கம் வென்ற ஒரே நாடு இந்தியாதான். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. அதுபோல, ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் 8 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் வென்ற ஒரே நாடும் இந்தியாதான். இந்தியாவின் இந்த சாதனையும் இதுவரை முறியடிக்கப்பட வில்லை.

இந்திய ஹாக்கி அணி தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக்கை எதிர்நோக்கி உள்ளது. சீனாவில் நடந்த ஹாங்சூ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற உற்சாகத்தில் இருக்கிறது இந்தியா. அதே உற்சாகத்துடன் ஹர்மன்பிரீத்சிங் தலைமையில் இந்திய ஹாக்கி அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறது. 

பழைய ‘பொற்’காலம் மீண்டும் திரும்ப வாழ்த்துவோம். 

-மோகன ரூபன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com