எகிறிப்பாயுமா நீரஜ் சோப்ராவின் ஈட்டி? - 2ஆவது ஒலிம்பிக் தங்கம்? எதிர்பார்ப்பில் இந்தியா

இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வெல்வாரா? பாரிஸ் ஒலிம்பிக்கில் அவருக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து...
நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)
நீரஜ் சோப்ரா (கோப்புப் படம்)படம் | நீரஜ் சோப்ரா (எக்ஸ்)
Published on
Updated on
4 min read

2020ஆம் ஆண்டு! ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் ஓர் ஒலிம்பிக் போட்டி உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 7ஆம்தேதி, தடகளப் போட்டிகளில் ஒன்றான ஈட்டி எறியும் போட்டி அமர்க்களப்பட்டது.

ஈட்டி எறியும் போட்டி, இன்று நேற்றல்ல. கி.மு.708ல் கிரேக்கத்தில் நடந்த பழங்கால ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருந்த போட்டி அது. நவீன ஒலிம்பிக் போட்டிகளில் 1908ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கில், ஆடவருக்கான ஈட்டி எறியும் போட்டி இடம்பெற்றது. 1932ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஈட்டி எறியும் போட்டி முதன்முதலாக இணைத்துக் கொள்ளப்பட்டது.

இப்போது மீண்டும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வருவோம். ஈட்டி எறியும் போட்டியின் இறுதிச் சுற்றில் ஓர் இளம்வயது இந்திய வீரர் நின்றுகொண்டிருந்தார். அவரது பெயர் நீரஜ் சோப்ரா.

இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், இறுதிச்சுற்று வரை முன்னேறுவது அரிதான ஒன்று. மில்கா சிங், பி.டி.உஷா போன்ற ஒருசிலர் இறுதிக்கு முன்னேறினாலும் கூட அவர்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை. இந்த மாதிரியான நிலையில் தான், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறியும் போட்டியின் இறுதிச் சுற்றில் நின்றார்.

அந்தப் போட்டியில், இரண்டாவது முயற்சியாக நீரஜ் சோப்ரா வீசிய ஈட்டி, இரவு நேர இருளைக் கிழித்துக் கொண்டு பறந்து போய் தரையில் இறங்கி, மண்ணை முத்தமிட்டு குத்தி நின்றது.

ஒலிம்பிக் மற்றும் உலக வாகையர் போட்டிக்கான ஈட்டிகள் 2.6 மீட்டர் நீளமும், 800 கிராம் எடையும் கொண்டவை. ஈட்டி வீசும்போது, ஈட்டியின் முனை சரியாக மண்ணை முத்தமிட்டு, குத்தி நிற்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த வீச்சு செல்லாது என அறிவிக்கப்படும். ஈட்டி வீசிய வீரர் நிலைதடுமாறி, தடுப்புக் கோட்டை தவறுதலாக மிதித்தாலோ, தாண்டி விட்டாலோ, கோட்டின் மீது தவறி விழுந்து விட்டாலோ அந்த வீச்சு செல்லாது என அறிவிக்கப்படும்.

இளைஞர் நீரஜ் சோப்ரா அவரது இரண்டாவது முயற்சியில், வீசிய ஈட்டி 87.58 மீட்டரைத் தொட்டு நின்றது. நீரஜ் சோப்ராவுக்கு அது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது. அவ்வளவுதான்!  நம்ப முடியாத வெற்றி. ஒலிம்பிக் தடகளப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஒருவர் பதக்கம் (அதுவும் தங்கம்) வென்றது அதுவே முதல்முறை. அது மட்டுமல்ல. துப்பாக்கிச்சுடும் வீரரான அபிநவ் பிந்த்ராவுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் தனியொரு வீரராக இந்தியர் ஒருவர் தங்கம் வென்றதும் அதுவே முதல் முறை.

ஈட்டி எறியும் வீரரான நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் உச்சம் தொடும்முன் படிப்படியாக பல களங்களைக் கண்டவர்.  2012, 2014ல் பதினாறு வயதுக்கும் குறைந்த இளையோருக்கான ஈட்டி எறியும் போட்டியில் வாகையர் பட்டம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த இளையோர் போட்டியில் மற்றொரு வாகையர் பட்டம் போன்றவற்றை அவர் வென்றவர்.

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய வாகையர் போட்டியில் நீரஜ் சோப்ராவின் ஈட்டி பறந்து இறங்கிய தூரம் 77.33 மீட்டர். 2016ஆம் ஆண்டு நடந்த தெற்காசியப் போட்டியில் 82.23 மீட்டர். 2017ல் இவர் ஆசிய சேம்பியன். 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 86.47 மீட்டர். அதே ஆண்டில் டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம்.

பிறகு, தேசிய சாதனையாக 88.07 மீட்டர் தொலைவுக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்தார். அதன்பிறகுதான் டோக்கியோ ஒலிம்பிக். 87.58 மீட்டர். கூடவே தங்கப்பதக்கம்.

2022ல் ஃபின்லாந்து நாட்டின் துர்கு பகுதியில் நடந்த பாவோ நுர்மி விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். அவரது முதல் 2 வீச்சுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில், 89.30 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் தனது சொந்த தேசிய சாதனையை அவர் முறியடித்தார். இந்தப் போட்டியில் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக் தங்கத்துக்குப் பிறகு அவருக்கு கிடைத்த இன்னொரு பதக்கம் இது.

ஃபின்லாந்தில் நடந்த அந்த பாவோ நுர்மி போட்டியில் தங்கம் வென்றவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒலிவர் ஹெலண்டர். அவர் ஈட்டி வீசிய தூரம் 89.83 மீட்டர்.

அதன்பின் குவார்த்தானே போட்டி. உலக அளவில் பல நட்சத்திர வீரர்கள் பங்கேற்ற போட்டி அது. அந்தப் போட்டியில் இருமுறை உலக சேம்பியனாக இருந்த கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்சை இருமுறை தோற்கடித்தார் நீரஜ் சோப்ரா. (ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஒருமுறை 93.07 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தவர்!)

குவார்த்தானே போட்டியில் நீரஜ் 86.69 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்கம் வெல்ல, வெள்ளிப் பதக்கம், 2012ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சேம்பியனான டிரினிடாட் நாட்டின் கெசோர்ன் வால்காட்டுக்குக் கிடைத்தது. (86.64 மீட்டர்). முன்னாள் உலக சேம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 3ஆவது இடம்பிடித்தார்.

அதன்பிறகு ஸ்வீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் நடந்த டயமண்ட் லீக் போட்டி. அந்தப் போட்டியில் நீரஜ்ஜின் ஈட்டி எகிறிச்சென்ற தூரம் 89.94 மீட்டர். அந்தப் போட்டியில் ஆறு வாய்ப்புகளிலும் தவறே செய்யாமல் ஈட்டி வீசி அசத்தினார் நீரஜ்.

அதன் பின்னர் ஹங்கேரி நாட்டின் தலைநகரமான புதாபெஸ்டில் நடந்த உலக தடகள வாகையர் போட்டி. அதில் தகுதிச்சுற்றுப் போட்டியில் முதல் முயற்சியிலேயே 88.77 மீட்டருக்கு ஈட்டியைப் பறக்க விட்டார் நீரஜ்.

இறுதிப்போட்டியின் 2ஆவது வாய்ப்பில்  நீரஜ் ஈட்டி வீசிய தொலைவு 88.17 மீட்டர். இது அவரது திறமைக்கு குறைவுதான். இருந்தாலும் இந்த வீச்சே அவருக்கு உலக வாகையர் பட்டத்தை வாங்கித் தந்து விட்டது. 

உலக தடகளப் போட்டி ஒன்றில் இந்தியர் ஒருவர் தங்கம் வென்றது அதுவே முதல்முறை.  (இதற்கு முன் 2003 பாரிஸ் உலக தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதலில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றிருந்தார்.)

இந்த வெற்றியின் மூலம் நீரஜ் சோப்ராவுக்கு இன்னொரு பெருமையும் கிடைத்தது. ஈட்டி எறிவதில் ஒலிம்பிக் சேம்பியனாக இருந்து, உலக வாகையர் பட்டத்தையும் வென்றவர்கள் உலகில் இரண்டே பேர்கள்தான். ஒருவர் செக் குடியரசின் யான் செலஸ்னி. இரண்டாவது நபர் நார்வே நாட்டின் ஆந்திரியாஸ் தோர்கில்சன். இந்த வரிசையில் மூன்றாவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார் நீரஜ் சோப்ரா.

2024 பாவோ நுர்மி போட்டியில் இந்தமுறை தங்கம் வென்று சாதித்தார் நீரஜ் சோப்ரா. அவரது ஈட்டி எட்டிய தொலைவு 85.97 மீட்டர்.

ஈட்டி எறியும் போட்டியில் இதுவரை உலக சாதனையாக கருதப்படும் தொலைவு 98.48 மீட்டர். இந்த சாதனையை நிகழ்த்தியவர் செக் குடியரசு வீரர் யான் செலன்சி. இவர் 1992, 1996 ஒலிம்பிக்குகளில் 2 முறை தங்கம் வென்றவர். 2 முறை இவர் உலக சேம்பியனும் கூட. 1996ஆம் ஆண்டு செலன்சி உருவாக்கிய இந்த உலக சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

ஈட்டி எறிவதில் 90 மீட்டர் தூரம் என்பது ஒரு பெரிய கனவு. அந்த 90 மீட்டரைத் தொட்ட ஈட்டி வீரர்கள் கொஞ்சம் பேர்தான். நீரஜ் சோப்ரா இதுவரை 90 என்ற மேஜிக் இலக்கைத் தொட்டதில்லை. ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் போட்டியில் வெறும் 6 சென்டி மீட்டரில் இந்த 90 மீட்டர் கனவுத் தொலைவைத் தொட தவறியிருந்தார் நீரஜ் சோப்ரா. 

இந்தநிலையில், தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நீரஜ் சோப்ராவை எதிர்கொண்டு நிற்கிறது. காயம் காரணமாக 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகியவர் நீரஜ் சோப்ரா. தற்போது 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வெல்லும் முனைப்புடன் அவர் உள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டி, அவ்வளவு எளிதாக இருக்காது. காரணம், மணிமணியான பல வீரர்கள் இந்தப் போட்டியில் குதிக்க இருக்கிறார்கள். 

2022ஆம் ஆண்டு பாவோ நுர்மி போட்டியில் தங்கம் வென்ற ஃபின்லாந்து வீரர் ஒலிவர் ஹெலண்டர் (89.83 மீட்டர்) களத்தில் இருக்கிறார். கூடவே டோனி கெரானென் என்ற மற்றொரு ஃபின்லாந்து வீரர். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற செக் குடியரசின் யாகுப் வாட்லே, வி.வெசெலி ஆகியோரும் ‘உள்ளேன் ஐயா’ என்று களத்தில் உள்ளார்கள்.

இரண்டு முறை உலக சேம்பியனான இருந்த கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ்சும் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கிறார். (ஆண்டர்சன் பீட்டர்ஸ், 93.07 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்தவர் என்பதை முன்பே பார்த்தோம்.)

உலக தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2022 பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும், பாரிஸ் ஒலிம்பிக்கில் தடம் பதிக்க ஆவலாக இருக்கிறார். போதாக்குறைக்கு ஜெர்மன் வீரர்களான ஜூலியன் வெபர், ஜோகன்னஸ் வெட்டர் போன்றவர்களும் களத்தில் இருக்கிறார்கள்.

இவர்களில், ஆண்டர்சன் பீட்டர்ஸ் (93.18), ஜோகன்னஸ் வெட்டர் (91.49) யாகுப் வாட்லே (90.88), அர்ஷத் நதீம் (90.18) போன்றவர்கள் 90 என்ற இலக்கைத்  தாண்டியவர்கள்.

வரும் ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கத்தை மீண்டும் தனதாக்குவார் என எதிர்பார்ப்போம். அவரது ஈட்டி 90 மீட்டர் என்ற இலக்கைத் தாண்டி எகிறும் என்று நம்புவோம். நீரஜ் சோப்ராவை மனதார வாழ்த்தி மகிழ்வோம்.

-மோகன ரூபன்

……………. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com