
நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி, அரசுத் துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆக. 2) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதனை, ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழாண்டில், கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி தொடக்க விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணியளவில் மலர்க் கண்காட்சியை, சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.பொன்னுசாமி தொடக்கி வைத்தார். அதன்பிறகு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற சுற்றுலா விழாவில், பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்த 22 அரங்குகளை அவர் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் வல்வில்ஓரியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். கொல்லிமலை பழங்குடியின மக்களின் சேர்வை ஆட்டம் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
50,000 ரோஜாக்களால் மலர் கண்காட்சி: கொல்லிமலை தாவரவியல் பூங்காவில், தோட்டக்கலைத் துறை சார்பில் மலர்க் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, 50,000 ரோஜாக்களால் யானை, ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி, காதல் சின்னம், பட்டாம்பூச்சி, தானியங்களால் மக்களுடன் முதல்வர், காய்கறிகளால் பட்டாம்பூச்சி, மயில் போன்றவை வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், 20 ஆயிரம் மலர்களை கொண்டு பல்வேறு வகை அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சியில், ரோஜா, ஜெர்பரா, கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம் சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி ஆகிய மலர்களும் இடம் பெற்றுள்ளன.
மருத்துவப்பயிர்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர், பயன்படும் பகுதி, மருத்துவப் பயன்கள் குறித்து விளக்க குறிப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவில், நாமக்கல் கோட்டாட்சியர் ஆர்.பார்த்திபன், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இ.கார்த்திகா, அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர், ஆட்சியர், எம்.பிக்கள் பங்கேற்கவில்லை
கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை பொருத்தமட்டில், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாமக்கல் மாவட்ட, பிற மாவட்ட அமைச்சர்கள் பங்கேற்பதில்லை. அவ்வாறு பங்கேற்றால் அடுத்த சில மாதங்களில் அவர்களுடைய அரசியல் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் இன்றளவும் நிலவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் அமைச்சர்கள் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்துள்ளனர். தற்போதயை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விழாவுக்கு வரவில்லை. மாவட்ட ஆட்சியர் ச.உமாவும் விழாவில் பங்கேற்க வரவில்லை. மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் மழைக்காலக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால் அவர்களும் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த தொகுதி எம்எம்எல்ஏ கே.பொன்னுசாமி தலைமையிலேயே விழாக்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை மாலை 3 மணிக்கு வில்வித்தை போட்டி, பரிசளிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.