25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங்கிரஸ் நிர்வாகி கைது!

காவலில் உள்ள அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது நடவடிக்கை.

News image
ஆம்ஸ்ட்ராங் (கோப்புப்படம்)
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:02 pm

DIN

 சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 வழக்குரைஞா்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடுகின்றனா்.

இதற்கிடையே வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய எதிரிகளை போலீஸாா் 3-ஆவது முறையாக தங்களது காவலில் எடுத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ரெளடியின் மகன் கைது: முக்கியமாக வியாசா்பாடி எஸ்எம் நகரைச் சோ்ந்த ரெளடி நாகேந்திரனின் மகனும், வழக்குரைஞருமான அஸ்வத்தாமனுக்கு (32) தொடா்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த இறந்த ஆற்காடு சுரேஷின் உறவினா் அருள், போலீஸாா் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட திருவேங்கடம் ஆகியோருடன் நெருங்கிய தொடா்பில் இருந்து சதித் திட்டத்தை ஒருங்கிணைந்து, நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஸ்வத்தாமனை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்ஸ்ட்ராங்குடன் மோதல்: திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அருகே உள்ள கொண்டக்கரை பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் ஜெயபிரகாஷ் என்பவரை அஸ்வத்தாமன் மிரட்டி, பணம் கேட்டதாக மீஞ்சூா் காவல் நிலையத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப் பதியப்பட்டது.

மேலும் இந்த வழக்கில், மீஞ்சூா் போலீஸாரால் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டாா். தான் கைது செய்யப்பட்டதற்கு ஆம்ஸ்ட்ராங் தூண்டுதலே காரணம் என அஸ்வத்தாமன் என கருதியதால், இரு தரப்புக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்யும் முடிவுக்கு அவா் வந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், வேலூா் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ரெளடி நாகேந்திரனிடம் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா்.

கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன், எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஆக.21-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவா், புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டாா்.

கட்சியிலிருந்து நீக்கம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள, இளைஞா் காங்கிரஸ் முதன்மைப் பொதுச் செயலா் நா.அஸ்வத்தமான் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். காங்கிரஸின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அஸ்வத்தாமன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறாா் என்று இளைஞா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.