வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
வக்ஃப் வாரிய அதிகாரங்களை திருத்தம் செய்யும் மசோதாவை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
வக்ஃப் வாரிய சொத்து குறித்து தீர்மானிக்கும் வாரியத்தின் அதிகாரம் தொடர்பான வக்ஃப் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதாவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. அரசியலைமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதச்சுதந்திரத்தை மறுக்கும் வகையில் உள்ளது.
முஸ்லிம்களின் நலனுக்காக முஸ்லிம்களால் அர்ப்பணிக்கப்பட்ட சொத்துக்களை அவர்களிடமிருந்து பறித்து அரசு நிர்வகிக்க நினைப்பது தவறானது. மட்டுமின்றி, வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் அதனை நிர்வகிக்க ஒப்புதல் அளிக்கும் திருத்தம் ஏற்புடையதல்ல.
வக்ஃப் சொத்துகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் மாநில அரசின் பணிகளை பறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.
ஆகவே, மதச்சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளை பறிக்கும் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.