சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பெருமாள் சிலை
சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பெருமாள் சிலை

12 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுத்த சிலை விற்பனைக்காக கடத்தல்: 7 பேர் கைது

தஞ்சையில் 12 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை தற்போது வெளிநாட்டிற்கு விற்க முயன்றபோது சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
Published on

தஞ்சாவூர்: தஞ்சையில் 12 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுத்த பெருமாள் சிலையை தற்போது வெளிநாட்டிற்கு விற்க முயன்றபோது சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலை கடத்தப்படுவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து தஞ்சை சரக காவல் ஆய்வாளர் தலைமையில் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனை நடத்தப்பட்டன. இதில் சந்தேகத்திற்கிடமான முறையில் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் டிஎன் 02 சிஏ 8922 என்ற பதிவெண் கொண்ட (பலினோ) கார் ஒன்றும், டிஎன் 49 வி 2300 மற்றும் டிஎன் 91க்யூ3778 என்ற பதிவெண் கொண்ட 2 இருசக்கர வாகனங்கள் நின்றுள்ளது. இதனை அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் காரை சோதனை செய்தனர். அதில் பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து காரில் இருந்த சென்னை அரும்பாக்கம் பிளவர்ஸ் சாலை, ஜெகநாதன் நகரத்தை சேர்ந்த ஜனகராஜ் மகன் ராஜேந்திரன் (52), கும்பகோணம் வட்டம் அலமங்குறிச்சி உடையார் தெருவை சேர்ந்த சேகர் மகன் ராஜ்குமார் (36), திருவாரூர் மாவட்டம் இனாம் கிளியூர் தெற்குத் தெருவை சேர்ந்த ஆனந்தகுமார் மகன்

தினேஷ் (28),அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஜெய்சங்கர் (58), கடலூரை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஜய் (28), திருவிடைமருதூரை சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டுமன்னார்குடியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகிய ஏழு பேரிடமும் சிலை தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

விஜய் , ஹாரிஸ், அஜித்குமார் ஆகிய மூவரும் சிலையை கொண்டு செல்லும் போது வழிக்காவலுக்காக இருசக்கர வாகனத்தில் உடன் அழைத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையில் திருவாரூரைச் சேர்ந்த தினேஷின் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்ட போது, சிலை கிடைத்துள்ளது, இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். இதையடுத்து தினேஷ் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்திருந்த சிலையை கண்டெடுத்துள்ளார். அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல் சிலையை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சிலைக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பெருமாள் சிலை
நாட்டின் ஜிடிபியில் 10% வைத்துள்ள அம்பானி!

இதற்காக தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். பிறகு தினேஷ் தனது நண்பர்களுடன் சிலை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்து சிலையை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள குற்ற செயல்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் பழங்கால உலோகச் சிலையும் கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2.5 அடி உயரமுள்ள ஐம்பொன் பெருமாள் சிலை, 15 முதல் 16 ஆம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்து சிலையாக இருக்கலாம் எனவும், தமிழ்நாட்டின் அறியப்படாத கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார்க்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சிலை எந்தக் கோயிலில் இருந்து திருடப்பட்டது இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான பழங்கால பெருமாள் சிலையை பறிமுதல் செய்த தமிழ்நாடு கடத்தால் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com