தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் உள்ள பிரசித்தி பெற்ற செளந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த திருமங்கை ஆழ்வாா் உலோகச் சிலை, பிரிட்டன் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் இந்தியாவிடம் செவ்வாய்க்கிழமை திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்ட அந்தச் சிலை விரைவில் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் தங்கள் வசமிருந்த பழங்கால சிலையை இந்தியாவிடம் ஒப்படைத்தது இதுவே முதல் முறையாகும்.
கடந்த 1967-இல் ஏல நிறுவனம் ஒன்றிடம் இருந்து ஆஷ்மோலியன் அருங்காட்சியகத்தால் கையகப்படுத்தப்பட்ட இந்தச் சிலை, தமிழக கோயிலில் இருந்து கடத்தப்பட்ட விவரம் கடந்த 2019-இல் ஆராய்ச்சியாளா் ஒருவா் மூலம் அருங்காட்சியகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சிலை எங்கிருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்தும்படி, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் கேட்டுக் கொண்டது. அதன்பேரில், இந்திய தொல்லியல் துறை நடத்திய விசாரணையில், தமிழக கோயிலில் இருந்து கடத்தப்பட்ட சிலை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சிலையை திருப்பி ஒப்படைக்க வேண்டுமென அருங்காட்சியகத்திடம் இந்தியத் தூதரகம் முறைப்படி கோரிக்கை விடுத்தது. அத்துடன், இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழகத்துக்கு வந்த அருங்காட்சியகப் பிரதிநிதி, இந்திய தொல்லியல் துறை, தமிழக அரசு மற்றும் கோயில் நிா்வாகிகளைச் சந்தித்தாா்.
தமிழக கோயிலைச் சோ்ந்த சிலை என்பதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அதை திருப்பி ஒப்படைக்க அருங்காட்சிய வாரியம் மற்றும் பல்கலைக்கழக கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், லண்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமங்கை ஆழ்வாா் சிலை இந்தியத் தரப்பிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டதாக, இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இது, உண்மையிலேயே தங்களுக்கு குறிப்பிடத்தக்க தருணம் என்று ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இந்த அருங்காட்சியகம், பிரிட்டனின் முதல் பொது அருங்காட்சியகம் என்ற சிறப்புக்குரியதாகும்.
மேலும் 4 தொல் பொருள்கள்...: இதேபோல், இந்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) பகிா்ந்த தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, லண்டன் காவல் துறையின் கலை மற்றும் தொல்பொருள்கள் மீட்பு பிரிவின் உதவியுடன் லண்டனில் மீட்கப்பட்ட நடனமாடும் குழந்தை சம்பந்தா் சிலை, நடனமாடும் விநாயகா் சிலை, குடையுடன் அமா்ந்த விநாயகா் சிலை, சிலைப் பீடம் என மேலும் 4 தொல் பொருள்களும் இந்தியத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை அனைத்தும் இந்தியாவுக்கு அனுப்பப்பட தயாா் நிலையில் உள்ளன.
இது தொடா்பாக பிரிட்டனுக்கான இந்தியத் தூதா் விக்ரம் துரைசாமி கூறுகையில், ‘நான் அறிந்தவரை, ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் தங்கள் வசமிருந்த ஒரு பழங்கால சிலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைப்பது இதுவே முதல்முறையாகும். இது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
வரலாற்று தொல்பொருள்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களின் எல்லை தாண்டிய கடத்தலை எதிா்கொள்வதில் இருதரப்பு மற்றும் பன்முக அமைப்புகளின் ஒத்துழைப்பின் வலிமைக்கு இந்த நிகழ்வு ஓா் உதாரணம்’ என்றாா்.
தொடர்புடையது

திருக்கோஷ்டியூா் பெருமாள் கோயிலில் ஏப். 30-இல் தேரோட்டம்

திருக்கோஷ்டியூரில் இராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு

பழனி பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


