ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தல் அட்டவணை இன்று அறிவிப்பு?

ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை வெள்ளிக்கிழமை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை வெள்ளிக்கிழமை(ஆக.16) மாலை சுமார் 3 மணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் நடைபெற்ற நிலையில், அதில், சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி அமர்வு கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது.

மேலும், ஜம்மு - காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு, 2024 செப்டம்பர் 30 -ஆம் தேதிக்குள் பேரவைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு, கடந்த வாரம் ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டு தேர்தலுக்கான தயாரிப்புகளை ஆய்வு செய்தது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புகளை அதிகரிப்பது குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவை இந்திய தேர்தல் அதிகாரிகள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தியது.

ஜம்மு - காஷ்மீரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர் சந்தித்தபோது, ​​"விரைவில்" தேர்தலை நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது. எந்தவித வெளி மற்றும் உள் சக்திகளும் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முடியாது.

ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக செயல்முறைகள் தொடர, மக்களவைத் தேர்தலை போன்று விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களின் பங்கேற்பது அவசியம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் என தெரிவித்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் அக்டோபா்-நவம்பரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், ஹரியாணா மற்றும் ஜம்மு- காஷ்மீர் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை(ஆக.16) மாலை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா தேர்தலுக்கான அட்டவணையும் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகலாம் என்றும் 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரம் பேரவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது எஸ்எஸ்எல்வி டி-3!

கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் ஜம்மு- காஷ்மீர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலை சந்திக்கவுள்ளது. 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய முதல்வர் மெகபூபா முப்திக்கு ஆதரவை வாபஸ் பெற்றதால் பிடிபி-பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது.

ஹரியாணாவில் தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் நவம்பர் 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் 90 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. 2019 தேர்தலுக்குப் பிறகு, 90 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில் 40 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, ஜேஜேபியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. ஜேஜேபி 10 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பாஜக-ஜேஜேபி கூட்டணி முறிந்தது. இதையடுத்து 2024 பேரவைத் தேர்தலில் ஹரியாணாவில் பாஜக, காங்கிரஸ், ஜேஜேபி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ‘இண்டியா’ கட்சிகள் அணியில் உள்ளது. ஜாா்க்கண்டில் ஆளும் கூட்டணியிலும், மகாராஷ்டிரத்தில் எதிா்க்கட்சிகள் கூட்டணியிலும் காங்கிரஸ் உள்ளது. இரு மாநிலங்களிலும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் மீண்டும் தோ்தலைச் சந்திக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

அதே நேரத்தில் ஹரியாணாவில் ஆளும் பாஜகவுக்கு அடுத்து பலம் வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் இருப்பதால், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com