பழைய மாணவர் துரைமுருகன் - வயதான ரஜினி: மோதல் முடிவுக்கு வந்ததா?

அமைச்சர் துரைமுருகன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வார்த்தைப் போர் குறித்து...
rajini - duraimurugan
நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் துரைமுருகன்DIN
Published on
Updated on
1 min read

தற்போது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது. பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ

சென்னையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சா் எ.வ.வேலு எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களைத்தான் சமாளிக்க முடியாது.

இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரை முருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ... முதல்வர் ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்” என்றார். இதைக்கேட்டு முதல்வர் ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர்.

rajini - duraimurugan
சொல்லப் போனால்... நள்ளிரவில் நடுவீதியில் நகைகள் அணிந்து நடக்கும் பெண்!

இளைஞா்களுக்கு வாய்ப்பில்லை

இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய துரைமுருகன், “மூத்த நடிகா்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த்” என்று பதிலடி கொடுத்தார்.

நட்பு தொடரும்

இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட நாள் நண்பர் எனவும், எங்கள் நட்பு தொடரும் என்று சுமூகமாக பதில் அளித்தார்.

rajini - duraimurugan
துரைமுருகன் நீண்டகால நண்பர்; நட்பு தொடரும்: ரஜினிகாந்த்

நகைச்சுவையா? பகைச்சுவையா?

தொடர்ந்து, இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் துரைமுருகன், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம், நாங்கள் எப்போதும்போல நண்பர்களாகவே இருப்போம்” என்று தெரிவித்து சர்ச்சைகளுக்கு முடிவு கட்டியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு உதயநிதி ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், திமுகவில் மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்றெல்லாம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என ஒரு தரப்பு, எங்கள் கட்சியில் மரியாதை கிடைக்கும் வந்து சேருங்கள் என்று மற்றொரு தரப்பு.

இவ்வாறாக சென்று கொண்டிருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அமைச்சர் துரைமுருகன் இருவரும் வெறும் நகைச்சுவை பேச்சுதான், எங்களுடைய நட்பு தொடரும் என்று தெரிவித்திருப்பது, வார்த்தை போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com