
காஞ்சிபுரத்தில் பணி ஓய்வுபெற்ற பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்த வழக்கில் செவ்வாய்க்கிழமை மதிமுக மாவட்டச் செயலாளரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் வசித்து வந்த ராஜேந்திர பாபு மனைவி கஸ்தூரி (62), இவர் காவல்துறையில் ஆய்வாளராக பணியாற்றி கடந்த 2020 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இவர் இந்த மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை அவரது வீட்டில் தலைகுப்புற விழுந்து இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்தினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காஞ்சிபுரம் மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்து வரும் வளையாபதி(65) என்பவரும், அவரது நண்பருமான பிரபுவும் சேர்ந்து பெண் காவல் ஆய்வாளரை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து வளையாபதியை சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையில் தொடர்புடைய மற்றொரு நபரான தலைமறைவாகவுள்ள பிரபுவையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். பணி ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளரான கஸ்தூரி தனது வீட்டை விற்பனை செய்வது தொடர்பான வாக்குவாதத்தில் இருவரும் கஸ்தூரியை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.