சல்மான் கான்தான் முதல் டார்கெட்: பாபா சித்திக்கின் கொலையாளிகள் தகவல்!
மும்பை: மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை செய்யப்படுவதற்கு முன்பு சல்மான் கான்தான் தங்களது முதல் டார்கெட் என விசாரணையில் அவரது கொலையாளிகள் தெரிவித்துள்ளனர்.
தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மகனான சட்டமன்ற உறுப்பினர் ஜீஷான் சித்திக்கின் அலுவலகத்தின் வெளியே, மூன்றுப் பேர் கொண்ட கும்பலினால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது கொலையாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். கொலை செய்தவர்கள் லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுப்பு..! ரஷித் கான் விமர்சனம்!
கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு முன்பாக சல்மான் கானை கொலை செய்வது தான் அவர்களது முதல் திட்டம் என்றும் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டு வரும் பயங்கர பாதுகாப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூறினர்.
ஏற்கனவே, மான் வேட்டையை காரணம் காட்டி சிறையிலிருந்த படி சல்மான் கானை மிரட்டி வருகிறார் ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய். அவ்வப்போது அவரது கும்பலை சார்ந்தவர்கள் மூலமாக சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு மும்பை பந்த்ராவிலுள்ள சல்மான் கானின் வீட்டின் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடினர். பின்னர், போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவ்விருவரும் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சல்மான் கானுக்கு தனிப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வெளி நபர்களும் தங்களை பிஷ்னோய் கும்பல் ஆள்களாகக் கூறி அவரிடம் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வரும் நிலையில், அவ்வாறு மிரட்டுபவர்களை போலீஸாரும் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலினால் சல்மான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதினால் அவருக்கு ”ஒய் பிளஸ்” பாதுகாப்பு வழங்கப்பட்டு, அவரது குடியிருப்புக்கு வெளியே தனிப் போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முகங்களை அங்கீகரிக்க கூடிய ஏஐ தொழில்நுட்ப வசதிக் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மும்பை போலீஸார் தொடர் கண்கானிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.