
‘கடவுளே அஜித்தே..!’ என அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் நடித்து முடித்துள்ளார். தற்போது சில நாள்களுக்கு முன்னதாக படத்தில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.
இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் முக்கிய விழாக்கள், கிரிக்கெட் மைதானங்கள், பொது போக்குவரத்துகள், அரசியல் விழாக்கள் என அனைத்து இடங்களிலும், ‘கடவுளே அஜித்தே..!’ கோஷமிட்டு விடியோ வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக, விஜய்யின் மாநாட்டிலும், டிடிவி தினகரனின் நிகழ்ச்சியிலும் ‘கடவுளே அஜித்தே..!’ என கோஷமிட்ட விடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. கடந்த ஆண்டு அல்டிமேட் ஸ்டார், தல என்று அழைக்க வேண்டாம் ஏகே(ak) என்று அழைத்தால் போதும் என்று அஜித் குமார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் அறிக்கைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க.... அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது.
எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு! அன்புடன் அஜித் குமார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.