
தியாகிகள் நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற தியாகிகளின் நாளை நினைவுகூர்ந்திடும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி 2.10.1998 ஆம் தேதி திறந்து வைத்தார்.
மேலும், தியாகிகளைப் போற்றும் வகையில், கருணாநிதி 17.7.1999 இல் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளையும், 17.7.2008 அன்று தியாகி செண்பகராமன் திருவுருவச் சிலையினையும் சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவி திறந்து வைத்தார்.
தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில், 1907ஆம் ஆண்டு பிறந்து, மன்னார்குடியில் பள்ளிப்படிப்பையும் திருச்சி நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார். இவர் இளம் வயதிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் சொற்பொழிவைக் கேட்டு, இந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தவும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற ‘சைமன் மிஷனே திரும்பிப் போ’ போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்தியத் தேசியக் கொடியை கட்டிப் பறக்கவிட்ட மாவீரர் தியாகி ஆர்யா (எ) பாஷ்யம். தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினருக்கு 1895 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 1914 ஆம் ஆண்டு பெண்கள் சமுதாய வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகவும், கதர் வளர்ச்சிக்கான பணியையும் மேற்கொண்டார்.
1917 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.
1920 ஆம் ஆண்டு இராஜாஜியை சந்தித்து அவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார். இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்தபோது, அப்பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ எனப் பெயரிட வேண்டுமெனக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 79 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து, தமது 58-ஆவது வயதில் உயிர் துறந்தார்.
தியாகி செண்பகராமன் திருவனந்தபுரத்தில் 15.9.1891 ஆம் தேதி பிறந்தார். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போதே ஆங்கில அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். தாய்நாட்டை வணங்கி ‘ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முதன் முதல் முழங்கியவர் தியாகி செண்பகராமன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர் தியாகி செண்பகராமன் 26.5.1934 அன்று உயிர் நீத்தார்.
தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு இன்னுயிர் ஈந்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா (எ) பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரின் பெரும் தியாகத் தொண்டுகளைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூலை 17 ஆம் தேதி தியாகிகள் நாள் என கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தியாகிகள் நாளையொட்டி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார், தியாகி செண்பகராமன் ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, ஜெ.எம்.எச்.ஹசன் மௌலானா, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வழர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.ஆர்.வைத்தியதான் ஆகியோர் மல் தூவி மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.