
பாலிவுட் நடிகையான ரவீனா தாண்டன் தமிழில் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
மும்பை கார்த்தர் பகுதியில் நடிகை ரவீனா தாண்டனின் ஓட்டுநர் காரை தங்கள் மீது மோதியதாகவும், அதற்குப் பின் வாக்குவாதத்தில் ரவீனா தாண்டனும் ஓட்டுநரும் தங்களைத் தாக்கியதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்தக் காணொலியில், ரவீனா பேச வரும்போது பெண்கள் அவரைத் தாக்குவது போலவும், ரவீனா ’தன்னைத் தாக்காதீர்கள்’ என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.
அந்த விடியோவில் ஒரு பெண் தன்னுடைய மூக்கில் அடிபட்டு ரத்தம் வருவதாகவும், இன்று இரவு காவல் நிலையத்தில் இருக்கப் போகிறாய் என ரவீனாவைப் பார்த்துக் கூறுகிறார்.
மேலும், தன்னுடைய தாயைக் கார் ஓட்டுநர் இடித்ததாகவும், ரவீனா குடிபோதையில் பெண்களைத் தாக்க வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அந்தப் பெண்களின் குடும்பத்தினரும், ரவீனா மற்றும் அவரது கணவரும் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில், ரவீனா தாண்டன் மீது போடப்பட்ட வழக்குப் போலியானது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ரவீனா தாண்டனின் காரை அவருடைய ஓட்டுநர் பின்நோக்கி செலுத்தும்போது அங்கு நடந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காரை நிறுத்தியுள்ளனர். ஓட்டுநர் வேகமாக வந்ததாகக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்களிடம் ரவீனா சமாதானம் பேசப் போனபோது வாக்குவாதம் முற்றி அவர்கள் ரவீனாவைத் தாக்கியுள்ளனர் என்று காவல்துறையினர் தெரித்தனர்.
இதுகுறித்துப் பேசிய காவல்துறை துணை ஆணையர் ராஜ்திலக் ரோஷன், “நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அதில் ரவீனாவின் கார் டிரைவர் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகியது. அந்த சம்பவம் நடந்த போது ரவீனாவும் அவரது ஓட்டுநரும் மது போதையில் இல்லை என்பதையும் பரிசோதித்துள்ளோம்.
மேலும், அவர் தாக்கியதாக அளித்த புகாரும் பொய்யானது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ரவீனா மற்றும் அந்தக் குடும்பத்தின் தரப்பில் எழுத்துப்பூர்வமாகப் புகார் எழுதி வாங்கினோம். தற்போது, இரு தரப்பிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.