
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாளை (ஜூன் 9) மாலை 6 மணிக்கு பதவியேற்க உள்ளார்.
மொத்தமுள்ள 543 பேரில் 7 பேர் சுயேச்சையாக சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அம்ரித்பால் சிங்
தீவிரமான போதகரும், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவருமான அம்ரித்பால் சிங் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாமின் திப்ருகார் சிறையில் உள்ளார்.
அவர் பஞ்சாபில் உள்ள காதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் குல்பீர் சிங் ஜிராவை 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவை முன்மாதிரியாகக் கொண்ட அம்ரித்பால் சிங், கடந்த ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி, காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், அரசு ஊழியர்களின் சட்டப்பூர்வ கடமையை செய்ய இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஷேக் அப்துல் ரஷீத்
என்ஜினீயர் ரஷீத் என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷீத் தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் திகார் சிறையில் இருக்கிறார்.
56 வயதான ஷேக் அப்துல் ரஷீத் பாரமுல்லா தொகுதியில், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். ரஷீத்துக்கு 4,70,000 வாக்குகளும், ஒமர் அப்துல்லாவுக்கு 268,000 வாக்குகளும் கிடத்தன.
2008, 2014 ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு லாங்கேட்டில் இருந்து எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
விஷால் பாட்டீல்
முன்னாள் காங்கிரஸ் தலைவரான விஷால் பாட்டீல், சாங்லியில் இருந்து ஐந்து முறை காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக இருந்த பிரகாஷ்பாபு பாட்டீலின் மகனும், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் வசந்ததாதா பாட்டீலின் பேரனும் ஆவார். மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் சிவசேனைக்கு(உத்தவ் தாக்கரே அணி) தொகுதி ஒதுக்கப்பட்டதை அடுத்து, அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதுகுறித்து விஷால் பாட்டீல் கூறுகையில், “சுயேச்சையாக போட்டியிட்டாலும் காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன். இன்று, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவு கடிதம் அனுப்பியுள்ளேன்” என்றார்.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “மகாராஷ்டிர மக்கள் துரோகம், ஆணவம், பிரிவினை அரசியலை தோற்கடித்தனர். சமூக நீதி, சமத்துவம், சுதந்திரத்திற்காகப் போராடிய சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா ஜோதிபா பூலே, டாக்டர் அம்பேத்கர் போன்ற நமது எழுச்சியூட்டும் தலைவர்களுக்கு இது சரியான அஞ்சலி. சாங்லியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., விஷால் பாட்டீல் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த ஆதரவை வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பப்பு யாதவ்
பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சன், பிகாரின் பூர்னியா தொகுதியில் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பப்பு யாதவ் தனது ஜன் அதிகார் கட்சியை காங்கிரசுடன் இணைத்தார். இருப்பினும், பூர்னியா தொகுதியை ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு, ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏவுக்கு வழங்கிய பிறகு அவர் அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்தார்.
பப்பு யாதவ் காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது ஹனீபா
தேசிய மாநாட்டின் முன்னாள் மாவட்டத் தலைவரான முகமது ஹனீபா லடாக் தொகுதியின் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் லடாக்கில் இருந்து வெற்றி பெற்ற நான்காவது சுயேச்சை ஆவார்.
சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா 27,906 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் செரிங் நம்கியாலை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
முகமது ஹனீபா 65,303 வாக்குகளும், காங்கிரஸின் செரிங் நம்கியால் 37,397 வாக்குகளும் பெற்றனர்.
சரப்ஜீத் சிங் கல்சா
இந்திரா காந்தியை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகனான சரப்ஜீத் சிங் கல்சா, ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
படேல் உமேஷ்பாய் பாபுபாய்
சமூக சேவகர் படேல் உமேஷ்பாய் பாபுபாய், டாமன் மற்றும் டையூ மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். 3 முறை எம்.பி.யாக இருந்த லாலு படேலை 6,225 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.