
சிவகங்கை: ரூ. 47 லட்சம் கேட்டு கோயம்புத்தூர் நகைப்பட்டறை உரிமையாளா், அவரது உறவினரை காருடன் கடத்திய கும்பலைச் சேர்ந்த 6 பேரை, சிவகங்கை போலீஸாா் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்
கோவை, ஆா்.எஸ் புரம் பொன்னையராஜபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (40), தங்க நகைப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது சகோதரி சுதாவின் மகன் விஷ்ணுவாசன் (22). இவரும் செந்தில்குமாா்(27) நகைப்பட்டறையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், செந்தில்குமாா் மற்றும் விஷ்ணுவாசன் ஆகியோா் தங்களது வளா்ப்பு நாயுடன் காரில் கடந்த (17.06.2024) திங்கள்கிழமை இரவு சென்றனா். ஏ.கே.எஸ். நகா் வரை சென்று வருவதாக கூறிச் சென்ற இவா்கள் திடீரென மாயமாகினா். இதனால், அதிா்ச்சியடைந்த உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சுதாவுக்கு சிங்கப்பூர் எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் செயலி மூலம் செவ்வாய்க்கிழமை (18.6.2024) பிற்பகலில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபா் அவரது மகனையும், சகோதரரையும் கடத்திச் சென்றுள்ளதாகவும், நாங்கள் தங்க நகை தயாரித்து கொடுக்கும்படி கேட்டோம், ஆனால் குறைபாடுள்ள நகைகளை தயாரித்து கொடுத்துள்ளதால் இருவரையும் கடத்தியுள்ளோம். எனவே, இருவரையும் உயிருடன் விடுவிக்க ரூ.47 லட்சம் தர வேண்டும் என அந்த நபா் கூறினாராம்.
இதற்கு சுதா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியுள்ளாா். பணம் கொடுத்தால் மட்டுமே இருவரையும் விடுவிப்போம் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து கோவை ஆா்.எஸ். புரம் காவல் நிலையத்தில் சுதா புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், செந்தில்குமாா் மற்றும் விஷ்ணுவாசனை கடத்திச் சென்றது சிவகங்கையைச் சோ்ந்த தனபால், தனசேகர், குட்லு கார்த்திக், மாரிமுத்து, ஹரிஹரன், குண்டு கார்த்திக், புலி கார்த்திக், மங்கையர்க்கரசி ஆகியோர் கொண்ட கும்பல் என்பதும், கடத்தலுக்கு உதவியாக நெல்லை மாவட்டம், பாளையங் கோட்டையைச் சேர்ந்த சதீஷ் என்பவா் இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், காருடன் கடத்தப்பட்ட இருவருடன் தனபால், தனசேகா் மற்றும் சதீஷ் ஆகியோா் சிவகங்கையில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் லிங்கப்பாண்டியன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹரிஹரன், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ரூபன், காவலர்கள் சிலம்பரசன், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் மலையரசன், ஆதி உள்ளிடோர் கொண்ட குழுவினர் அங்கு சென்றபோது, கடத்தப்பட்ட செந்தில்குமாா், விஷ்ணுவாசன் ஆகியோரை விட்டுவிட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றது தெரியவந்தது. காயங்களுடன் இருந்த இருவரையும் போலீஸார் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பல் சென்ற காரை போலீஸார் விரட்டிச்சென்று திண்டுக்கல்லில் மடக்கிப்பிடித்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்த சிவகங்கை அருகே புதுப்பட்டி சக்கந்தி ரா. தனபால், அ. மாரிமுத்து, கிழக்கு ஒத்தவீடு குட்லு என்கிற கார்த்தி, புலி கார்த்தி என்கிற கார்த்திக்ராஜா, குண்டு கார்த்தி என்கிற கார்த்திராஜா, சிவகங்கை திருவள்ளுவர் வீதி பூச்சி என்கிற ஹரிஹரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள தனசேகரன், சதீஷ், மங்கையற்கரசி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.