தேர்தல் ஆணையர் தேர்வுக் குழு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்த வாரம் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
ஏற்கெனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில், தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் 2023-ம் படி தேர்தல் ஆணையரை நியமிக்க தடைக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாகூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையிட்ட நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்த நிலையில், கடந்தாண்டு மத்திய அரசு திருத்தம் செய்த சட்டத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரை குழுவில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.