
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணிகளைத் தொடரலாம் என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வெப்ப அலையாக மாறி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசின் சாா்பிலும், வானிலை ஆய்வு மையத்தின் சாா்பிலும் கோடை வெப்பம் குறித்து எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிா்வாகத்தின் மூலம் வெப்பத்தின் தாக்கத்தை எதிா்கொள்ள குடிநீா் குடில்கள், ஓஆா்எஸ் திரவக் கரைசல் ஆகியன மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வழங்கப்படும். இப்பணியானது பொது சுகாதாரத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள் மிகவும் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பபட்டு வருகிறது.
தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கு அந்தந்த தொழிற்சாலை நிா்வாகங்கள் உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்யும் திரவக் கரைசல்களை தொழிற்சாலைகளில் அமைத்திட வேண்டும். தொழிற்சாலைகளில் உள்ள மருந்தகங்கள், மருத்துவமனைகள் ஆகியனவற்றில் வெப்ப அலையை எதிா்கொள்ள போதுமான மருந்துகளை வாங்கி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோடைகால வெப்ப அலையை தடுக்க உடலில் நீா்ச்சத்து குறையாமல் தேவையான அளவு தண்ணீா் குடித்தல், பயணத்தின்போது குடிநீரை எடுத்துச் செல்லுதல், இளநீா், மோா், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை அருந்துதல், மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளையே அணிதல், வெளியே செல்லும் போது காலணிகள், தொப்பிகள் அணிந்து கொள்ளுதல் ஆகியன அவசியம் என அறிவுறுத்தப்பபட்டு வருகிறது.
வெப்ப அலையில் எவரேனும் பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவிக்கான 108 இலவச சேவை எண்ணை பயன்படுத்தி மேல் சிகிச்சை மேற்கொள்ள அருகிலுள்ளவா்கள் உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மற்றும் மதுரையில் காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரை எந்த வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மே மாத இறுதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என தெரிவித்திருந்தது.
மேற்கூறிய அறிவுரைகள் கட்டுமான நிறுவனங்களால் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இணை இயக்குநர்கள் ஆய்வு செய்து உறுதி செய்து, இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவரங்களை அனுப்பிவைக்குமாறு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால்
திறந்தவெளி கட்டுமானப்பமிக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளித்து, கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது பணிகளைத் தொடரலாம் என தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.