வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

தேசிய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

இந்திய பங்குச்சந்தை இன்று இதுவரை காணாத உச்ச அளவுக்குச் சென்று நிறைவடைந்திருக்கிறது.

பங்குச்சந்தை வர்த்தகத்தில் நேற்று (மே.22) சென்செக்ஸ் 74,221.06-ல் முடிவடைந்தது. இன்று காலை 74,253.53-ல் துவங்கிய சென்செக்ஸ் 1.7 சதவீதம் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 75,499.91 புள்ளிகள் வரை உச்சம் சென்றது. பின், வர்த்தக இறுதியில் 1197 புள்ளிகளுடன் 75,418.04-ல் நிறைவடைந்தது. சென்செக்ஸில் 27 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, நேற்றைய வா்த்தக இறுதியில் 22,597.80-இல் முடிவடைந்தது. இன்றைய வா்த்தகத்தின்போது 22,614.10-ல் துவங்கியது. 1.8 சதவீதம் வரை உயர்வைக் கண்ட நிஃப்டி 22,993.60 வரை உச்சம் கண்டது. வர்த்தக முடிவில் 370 புள்ளிகள் அதிகரித்து 22,967.65-ல் நிறைவடைந்தது. நிஃப்டியில் 47 பங்குகள் ஆதாயப்பட்டியலில் இருந்தன.

தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மேலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளன.

என்ன காரணம்?

பங்குச்சந்தையின் தொடர் ஏற்றத்துக்கு முதன்மை காரணமாக சிலவற்றை பட்டியிடுகின்றனர். அதில், மக்களவைத் தேர்தல் முக்கிய காரணமாக இருக்கிறது. காரணம், தேர்தல் முடிவுகளில் மாற்றம் இருந்தாலும் பங்குகளின் எதிர்கால வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு நீண்ட கால பங்குகளை வைத்திருக்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பல பங்குகள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவதாக, வங்கிகளின் பங்கு மதிப்பு உச்சத்திலேயே இருப்பதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் பெரிதாக வீழ்ச்சியை சந்திப்பதில்லை.

சென்செக்ஸில் உள்ள எல் அண்ட் டி (L&T), எம் அண்ட் எம் (M&M), ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுஸுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன், பாரதி ஏர்டெல் நிறுவன பங்குகளின் புள்ளிகள் அதிகரித்து ஆதாயப் பட்டியலில் உள்ளன.

நிஃப்டி தரப்பில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி (L&T), ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுஸுகி நிறுவன பங்குகள் ஆதாயப்பட்டியலிலும் சன் பார்மா, பவர் கிரிட், கோல் இந்தியா நிறுவன பங்குகள் வீழ்ச்சிய பட்டியலிலும் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com