
அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள் என்று மகாத்மா காந்திக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் பலரும் அவரை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சிய வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களும் காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
'அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது.
காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது.
இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.