
கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடானது. சிவானந்த காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கிய மழை நீரில் பயணிகளுடன் சிக்கிக்கொண்ட தனியார் பேருந்தை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளைநோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(அக்.13) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையால் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின.
இதையும் படிக்க |அக். 16ல் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள் பழுதாகி சாலைகளிலேயே நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம், சிங்காநல்லூர், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. நகரில் உள்ள ரயில்வே மேம்பாலங்களின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சங்கனூர் அருகே சிவானந்த காலனி பகுதியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் குளம் போல் தேங்கிய மழை நீரில் காந்திபுரம் வழியாக உக்கடம் முதல் பிரஸ் காலனி வரை செல்லும் தனியார் பேருந்து பயணிகளுடன் சிக்கிக்கொண்டது.
இதையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.