பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக மலையாள நடிகர் எடவேல பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாளத் திரையுரலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழு(எஸ்.ஐ.டி.), பெண் நடிகை ஒருவர், எடவேல பாபு மீது கொடுத்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைக் கைது செய்துள்ளது.
ஜாமீனில் வெளிவர வாய்ப்பு?
நேற்று காலை, விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாபு, கொச்சியில் உள்ள கடலோரக் காவல் துறையின் தலைமையகத்தில் ஆஜரானார். அவரிடம் சிறப்பு விசாரணை குழு உறுப்பினர் ஏஐஜி பூங்குழலி விசாரணை நடத்தினார்.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, எடவேல பாபு கைது செய்யப்பட்டதை எஸ்ஐடி முறையாகப் பதிவு செய்ததாக காவல் துறை தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் எடவெல பாபுவுக்கு கடந்த செப்.5 ஆம் தேதி எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளதால், அவர் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாமீனில் விடுவிப்பதற்கு முன்பு, காவல் துறையினர் எடவேல பாபுக்கு முறையான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் முகேஷ் கைது
மலையாள திரையுலக நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான எம்.முகேஷ் சிறப்பு விசாரணைக் குழுவால் செவ்வாய்க்கிழமை(செப். 24) கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது.
இக் குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.
இதுகுறித்து விசாரிக்க காவல் துறை அதிகாரிகள் 7 போ் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்தது. எஸ்ஐடி விசாரணையைத் தொடா்ந்து வருகிறது.