தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக். 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதன் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை(செப். 26) நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து மாநில மாநாடு விரைவில் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் அக்டோபர் 27-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறும் என்று தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நாளை முக்கிய ஆலோசனை
இந்த நிலையில், தவெகவின் முதல் மாநாடு தொடர்பாக ஆலோசனை செய்வதற்கான கூட்டம், பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்று, மாநாட்டை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி கிடைத்தவுடன், மேடை அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.